Published:Updated:

“எடப்பாடி பாஸ், ஸ்டாலின் ஃபெயில்!”

 எல்.முருகன்
பிரீமியம் ஸ்டோரி
எல்.முருகன்

மார்க் போடும் எல்.முருகன்

“எடப்பாடி பாஸ், ஸ்டாலின் ஃபெயில்!”

மார்க் போடும் எல்.முருகன்

Published:Updated:
 எல்.முருகன்
பிரீமியம் ஸ்டோரி
எல்.முருகன்

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்டம்காணத் தொடங்கியிருக்கிறது. அமைச்சர்களும் பா.ஜ.க நிர்வாகிகளும் பரஸ்பரம் கருத்து பாஸ்பரஸைப் பற்றவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக, ‘‘தமிழகத்தில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’’ என்று உஷ்ணமேற்றியிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், மாங்கரைப் பகுதியில் ரிலாக்ஸாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவரும் முருகனைச் சந்தித்தோம். அ.தி.மு.க கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு மென்று விழுங்கிப் பேசும் முருகன், தி.மு.க தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் சீறிப் பாய்ந்து பதில் சொல்கிறார்.

“எடப்பாடி பாஸ், ஸ்டாலின் ஃபெயில்!”

‘‘ஒருபக்கம் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கட்சியில் இணைகிறார். மறுபக்கம், குற்றப் பின்னணி இருப்பவர்களும் இணைகிறார்கள். என்னதான் உங்கள் திட்டம்?’’

‘‘தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என்று பலதரப்பட்டவர்களும் எங்கள் கட்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஏன்... மிஸ்டு கால் கொடுத்தால், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கட்சியில் சேர்ந்த பிறகு அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.”

‘‘ஆனால், ரெளடிகளையெல்லாம் கட்சிக்குள் சேர்த்து, தேர்தலில் கலவரம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அல்லவா எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன?”

“அரசியலுக்காக அப்படிச் சொல்கிறார்கள். அப்படிக் குற்றம்சாட்டுகிற கட்சிகளை ஆராய்ந்தால், அங்கும் ஏகப்பட்ட பேர் குற்றப்பின்னணியுடன் இருப்பார்கள்.”

‘‘நீங்கள், `தனித்து நின்றால் 60 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்’ என்கிறீர்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட உங்களால் வெற்றிபெற முடியவில்லையே?’’

‘‘ஆமாம். தமிழகத்தில் பா.ஜ.க மீது மிகப்பெரிய நெகட்டிவ் இமேஜை வளர்த்துவைத்திருக்கிறார்கள். ஆனால், நிலைமை மாறிவிட்டது. இன்றைய இளைஞர்கள், பெண்கள் எங்கள் கட்சியை நன்றாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். அதேசமயம், கடந்த சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானித்தது நாங்கள்தான். 35 தொகுதிகளில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்திருக்கிறோம். அதை வைத்துத்தான் சொல்கிறேன்... இந்த முறை இரட்டை இலக்கத்தில் எங்கள் எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்குச் செல்வது உறுதி.’’

``சமீபத்தில் `கூட்டணி முறியும்விதத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள் பேசக் கூடாது’ என்று சொன்னீர்கள். அப்படி உங்கள் மனதைக் காயப்படுத்திய அந்த அமைச்சர் யார்?’’

“தனிப்பட்டவிதத்தில் யாரையும் சொல்லவில்லை. யாராக இருந்தாலும் கூட்டணியில் இருக்கும்போது, நெகட்டிவாகப் பேசக் கூடாது. அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன்.”

‘‘இ-பாஸ் தொடங்கி கிசான் சம்மான் திட்ட முறைகேடு வரை அனைத்துப் பிரச்னைகளுக்கும் நீங்கள் லேட்டாகவே ரியாக்ட் செய்வதாகக் கூறுகிறார்களே..?”

‘‘தவறு. தமிழகத்தில் இ-பாஸ் விவகாரத்தை முதலில் கையிலெடுத்தது நாங்கள்தான். அதன் பிறகே, தமிழக அரசு இ-பாஸில் தளர்வுகளைக் கொண்டுவந்தது. ‘கிசான் சம்மான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது’ என்று முதலில் அறிக்கைவிட்டதும் நான்தான். எனக்குப் பிறகுதான், மற்றவர்கள் அதைப் பேசினார்கள்.”

‘‘கந்த சஷ்டி விவகாரத்தை பூதாகரமாக்கி தி.மு.க-வை விமர்சிக்கிறீர்கள். விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் அ.தி.மு.க-வை விமர்சிக்கிறீர்கள். எப்போதுமே மதவாதம்தான் உங்கள் அரசியலா?’’

‘‘இது மதவாதம் அல்ல; ஆன்மிகம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மக்களின் சென்டிமென்ட்டைத் தொட்டால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.”

“சமீபத்தில் `டிசம்பர், ஜனவரியில் தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படும்’ என்று கூறியிருந்தீர்கள். அப்படி என்னதான் மாற்றம் வரும்?’’

‘‘பொறுத்திருந்து பாருங்கள்... நிறைய அரசியல் மாற்றங்கள் வரும். பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வரவிருக்கின்றன. அவை என்னென்ன வழக்குகள் என்பது எல்லோருக்குமே தெரியும். அது பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய ஓப்பன் கார்டாக அமையும்.”

‘‘தமிழகத்தில் தி.மு.க Vs பா.ஜ.க என்ற நிலையை உருவாக்கி, அ.தி.மு.க-வை இல்லாமல் ஆக்க நினைக்கிறீர்களா?”

‘‘அப்படி எந்தத் திட்டமும் இல்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின், காலை எழுந்ததிலிருந்து மத்திய அரசைக் குறைசொல்வதையே வேலையாகக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நாங்களும் தி.மு.க-வை விமர்சிக்கிறோம்.”

‘‘இருமொழிக் கல்விக் கொள்கை விவகாரத்தில் தொடங்கி பல விஷயங்களில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத்தானே எடுக்கின்றன. ஆனால், தி.மு.க-வை விமர்சிக்கும் அளவுக்கு அ.தி.மு.க-வை விமர்சிப்பதில்லையே, என்னதான் தயக்கம்?”

‘‘அ.தி.மு.க அரசு புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வுசெய்வதாகக் கூறியுள்ளது. ஆனால், தி.மு.க-தான் போலி வேஷம் போட்டு கூச்சலிடுகிறது. இதுதான் காரணம்.”

‘‘சமீபத்தில் நீங்கள் அளித்த ஒரு பேட்டியில், அ.தி.மு.க ஆட்சிக்கு 100 மதிப்பெண் கொடுத்தீர்கள். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதாக உங்கள் கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை சொல்கிறார்... இதில் எது உண்மை?’’

‘‘கொரோனா பணிக்காக அ.தி.மு.க அரசுக்கு 100 மதிப்பெண் கொடுத்தேன். அண்ணாமலை புதிதாகக் கட்சியில் சேர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய பார்வையைச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.”

‘‘முதல்வராக எடப்பாடி பழனிசாமி... எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின்... இவர்களின் செயல்பாடு எப்படி? இருவருக்கும் மதிப்பெண் கொடுங்கள்.”

‘‘மதிப்பெண் கொடுப்பது சரியாக இருக்காது. கொரோனா காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பம்பரமாகச் சுழன்று மக்கள் பணியாற்றினார். ஸ்டாலின் வீட்டைவிட்டு வெளியில் வராமல் அறிக்கை மட்டுமே வெளியிட்டார். குறை சொல்வதைத் தவிர ஆக்கபூர்வமாக அவர் எந்த யோசனையையும் சொல்லவில்லை. மொத்தத்தில், எடப்பாடி பழனிசாமி பாஸ். மு.க.ஸ்டாலின் ஃபெயில்!”

“எடப்பாடி பாஸ், ஸ்டாலின் ஃபெயில்!”

‘‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா... தொடர்ந்தால் எவ்வளவு சீட் கேட்பீர்கள்?’’

‘‘கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சீட் விஷயங்களைத் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.’’

“ஆனால், அ.தி.மு.க-வில் சில சீனியர்களே, `பி.ஜே.பி-யுடன் கூட்டணி தொடர்ந்தால், நாம் படுதோல்வியடைவோம். எனவே, கூட்டணி வேண்டாம்’ என்று சொல்வதாகத் தகவல் வருகிறதே..?”

‘‘அப்படி நான் எதுவும் கேள்விப்படவில்லை.”

‘‘நீங்களோ, ‘நாங்கள் கைகாட்டுபவர்கள்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்வார்கள்’ என்று சொன்னீர்கள். எடப்பாடி பழனிசாமியோ, ‘எங்கள் தலைமையில்தான் கூட்டணி’ என்று சொல்லியிருக்கிறார். கூட்டணி முறிவுக்கான அச்சாரமா இது?”

‘‘இல்லை. எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் எனக் கூறியிருந்தோம். அதுதான் நடக்கும்.’’

“உங்கள் ஆட்சியில் ஜி.டி.பி வீழ்ந்துகொண்டே போகிறதே... அதைப் பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையே இல்லையா?”

‘‘இது உலகளவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் நல்ல நிலையில்தான் இருக்கிறோம்.”

‘‘தி.மு.க பொதுக்குழுவில், ‘அ.தி.மு.க-வின் ஊழல்களுக்கு உதவி செய்யும் பாதுகாவலனாக இருக்கிறது பா.ஜ.க’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?”

‘‘நாங்கள் யாரையும் பாதுகாக்க மாட்டோம்; அதற்கான அவசியமும் இல்லை.”