Published:Updated:

குமரி: `ஆன்மிகம்... தேசியம்; ரஜினி ஆதரவு பா.ஜ.க-வுக்குத்தான்!’ - எல்.முருகன் நம்பிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பா.ஜ.க தமிழகத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு
பா.ஜ.க தமிழகத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

ரஜினி தேசியத்தையும் தெய்விகத்தையும் நம்புகிறவர். ஆன்மிக, தேசிய அரசியல் வேண்டும் என விரும்பியவர். ஆன்மிக அரசியலையும், தேசிய அரசியலையும் பா.ஜ.க-தான் கொண்டு செயல்படுகிறது.

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நாகர்கோவிலில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறுகையில், ``கடந்த இரண்டு நாள்களாக, தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் `நம்ம ஊர் பொங்கல்’ விழா சிறப்பாக நடைபெற்றது. தாய்மார்கள் பேராதரவுடன் தமிழகம் முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நம்ம ஊர் பொங்கல் விழா நடந்தது.

வரும் 14-ம் தேதி சென்னை மதுரவாயலில் நடக்கும் நம்ம ஊர் பொங்கல் விழாவில் தேசியத் தலைவர் நட்டா கலந்துகொள்ளவிருக்கிறார். அன்று வேறு ஒரு நிகழ்சியிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். நம்ம ஊர் பொங்கல் விழாவில் மதுரையில் சில விஷமிகள், பயங்கவாதிகள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பா.ஜ.க மாவட்டத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு, பா.ஜ.க அலுவலகம் தாக்கப்பட்டிருக்கிறது. அந்த விஷமிகள் தமிழகத்தில் மேலும் சில சம்பவங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து முளையிலேயே கிள்ளி் எறிய வேண்டும். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க தயாராக இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி நிர்ணயிக்கப்பட்ட வெற்றியாக அமையும். தமிழகம் முழுவதும் தொடரும் வெற்றியாக அமையும்.

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் எல்.முருகன்
நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் எல்.முருகன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மோடி தங்கள் நண்பர், பாதுகாவலன் எனத் தமிழக விவசாயிகள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். தி.மு.க-வின் பந்த், போராட்டம், ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிந்திருக்கின்றன. சட்டசபைத் தேர்தலிலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் அந்தத் தோல்வியைக் கொடுப்பார்கள். 41 லட்சம் தமிழக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

பா.ஜ.க கூட்டணி பற்றியும், முதல்வர் வேட்பாளர் பற்றியும் ஏற்கெனவே நிறைய விளக்கம் கொடுத்துவிட்டேன். 2011-க்கு முன் தி.மு.க தமிழகத்தை எப்படிச் சீரழித்தது என்பதைப் பார்த்திருந்தோம். மின்சாரம் இல்லாமல் தமிழகம் விடியலே இல்லாமல்தான் இருந்தது. 2014-ல் அந்தச் சூழல் முற்றிலும் நீக்கப்பட்டது. தி.மு.க நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழக அரசால் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, தி.மு.க நிர்வாகிகள் அபகரித்த நிலம் விடுவிக்கப்பட்டது. பெண்ணுரிமை, பெண் விடுதலை ஆகியவை தி.மு.க-வில் பேச்சளவில் உள்ளன. எம்.எல்.ஏ-வான பூங்கோதை ஆலடி அருணாவுக்கே பாதுகாப்பு இல்லை. தி.மு.க ஆண் நிர்வாகிகள் காலில் விழுந்து கெஞ்சுகிறார். அதற்கு விசாரணையும் இல்லை, எந்த பதிலும் இல்லை. கோவையில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண் ஆபாசமாகத் திட்டப்பட்டு, தாக்கப்பட்டார். தமிழக மக்கள் தி.மு.க-வை புறக்கணித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்
பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்

நாங்கள் யாரையும் மிரட்டிக் காரியம் சாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் ஆள்கிறார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டித்தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முடிவு செய்திருக்கிறது. அதுபோல பா.ஜ.க-வும் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யும். அ.தி.மு.க-வை இரண்டாம்நிலைக் கட்சியாக மாற்ற பா.ஜ.க முயல்வதாக கே.எஸ்.அழகிரி என்ன அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. தி.மு.க-வில் காங்கிரஸுக்கு இன்னும் இடமிருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. தி.மு.க-வில் ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளரா, கனிமொழி முதலமைச்சர் வேட்பாளரா, உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளரா என்ற குழப்பம் தொடருகிறது.

ரஜினி தேசியத்தையும், தெய்விகத்தையும் நம்புகிறவர். ஆன்மிக, தேசிய அரசியல் வேண்டும் என விரும்பியவர். ஆன்மிக அரசியலையும், தேசிய அரசியலையும் பா.ஜ.க-தான் கொண்டு செயல்படுகிறது. எனவே ரஜினி மற்றும் அவரது ரசிகர்கள் ஆதரவு பா.ஜ.க-வுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு