Published:Updated:

வங்கத்தை வளைக்கக் களமிறங்கிய அமித் ஷா... குடும்பங்களைப் பிரிக்கும் கட்சி அரசியல்!

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் மம்தா பானர்ஜியும், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வேகத்தில் பா.ஜ.க-வும் களத்தில் இறங்கியிருப்பதால் மேற்கு வங்க அரசியல் களம் ரணகளமாகியிருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி அரசை அதிகாரத்திலிருந்து இறக்கிவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி. 2016 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக அவர் முதல்வரானார்.

மம்தா
மம்தா

மேற்கு வங்கத்தில் 33 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகளையும், அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்திருக்கிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 18 சதவிகித வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க., 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றது. தற்போது, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு 18 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். தற்போது, பா.ஜ.க-வின் இலக்கு முதல்வர் நாற்காலி.

முதல்வர் நாற்காலியைக் குறிவைத்து அதிரடி அரசியலில் பா.ஜ.க இறங்கியிருக்கிறது. அதிரடி அரசியல் செய்வதில் முதல்வர் மம்தா பானர்ஜியும் சளைத்தவர் அல்ல. அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் மோடி பார்வையிடுவதற்கு மேற்கு வங்கம் வந்தபோது, அவரை மம்தா எப்படி வரவேற்றார் என்ற புகைப்படமே அதற்குச் சாட்சி. விமானப் படிக்கட்டுகளில் மோடி இறங்கிவந்தபோது, முகத்தைத் திருப்பிக்கொண்டு நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்தார் மம்தா. அதன் பிறகு, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மம்தாவுடன் சென்று பார்வையிட்டுச் சென்றார் மோடி.

மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் காட்டிவருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதற்காக, அவரும் பா.ஜ.க தலைவர்களும் அடிக்கடி அங்கு சென்றுவருகிறார்கள். காணொலியிலும் களத்திலும் கட்சித் தொண்டர்களைச் சந்தித்துவருகிறார்கள். அதனால், பா.ஜ.க-வுக்கும் திரிணாமுல் கட்சிக்கும் இடையிலான அரசியல் அனல் பறக்கிறது. சமீபத்தில் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கம் சென்றபோது, அவருடன் அணிவகுத்துச் சென்ற வாகனங்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. தாக்குதலை நடத்தியது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று சொல்லப்படுகிறது.

நட்டா
நட்டா

அந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி விவரித்த ஜே.பி.நட்டா, `குண்டு துளைக்காத காரில் நான் பயணம் செய்தேன். ஆனால், மற்ற அனைத்து வாகனங்களும் தாக்குதலில் சேதமடைந்தன. கைலாஷ் விஜயவர்கியாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த பா.ஜ.க தொண்டர்கள் தாக்கப்பட்டு, அவர்களின் வாகனங்கள் பறித்துச் செல்லப்பட்டன. தாக்கப்பட்டவர்களில் எட்டுப் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார். மேலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும், அங்கு கொடுங்கோல் ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் பணியாற்றிவரும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அந்த மூன்று அதிகாரிகளையும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை மம்தா அரசு எடுத்துள்ளது. `ஜனநாயக விரோத சக்திகளிடம் தனது அரசு ஒருபோதும் அடிபணியாது’ என்று மம்தா பானர்ஜி கூறினார். இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது.

இது குறித்து தி.மு.க தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், `மேற்கு வங்கத்தில் பணியாற்றும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மத்திய அரசு தம் விருப்பப்படி குடிமைப்பணிகளில் உத்தரவிடக் கூடாது’ என்று கூறியிருக்கிறார்

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தச் சூழலில், மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அமித் ஷா, மாநிலத்தில் பணியிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு வருமாறு உத்தரவிட மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறினார். மேலும் அவர், `மேற்கு வங்க மக்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள். அந்த ஏக்கம் அரசியல் தலைமையை மாற்றுவதற்கானது மட்டுமல்ல... ஊழல், வன்முறை அரசியல், பணப் பறிப்பு ஆகியவற்றை ஒழிப்பதற்கான ஏக்கம். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால், இந்த மாநிலத்தின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும். பா.ஜ.க வெற்றிபெற்றால் மேற்கு வங்கத்தில் மண்ணின் மைந்தர் முதல்வராவார்’ என்று கூறினார்.

மம்தா தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்ளும் வகையில், பிரசாந்த் கிஷோரின் `ஐபேக்’ ஆலோசனைகள்படி பல்வேறு திட்டங்களை அமல்படுத்திவருகிறார். வளர்ச்சி குன்றிய கிராமப் பஞ்சாயத்துகளை அடையாளம்கண்டு, அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்துகொடுப்பது, கட்சியின் கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களைச் செய்வது, மாவட்டத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இளைஞர்களையும் புதுமுகங்களையும் அமர்த்துவது என்று பல அதிரடிகளைச் செய்துவருகிறார்.

`குடிமராமத்து நாயகன்' முதல் `ஞானப்பழம் தந்த பழனிசுவாமி' வரை -முதல்வரை வெட்கப்படவைக்கும் அமைச்சர்கள்!

இதற்கிடையில், போட்டிக் கட்சியிலிருந்து ஆட்களை இழுக்கும் வேலையும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் மம்தா அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சுவெந்து அதிகாரி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சுவெந்து அதிகாரி கொடுத்த கடிதத்தை கடந்த 21-ம் தேதி சட்டமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். மேற்கு வங்கத்துக்கு கடந்த வாரம் சென்ற அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார் சுவெந்து அதிகாரி. இதுபோல, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து மேலும் எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் வேலையில் பா.ஜ.க இறங்கியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகுவதாகக் கூறிய ஜிதேந்திரா திவாரி என்ற எம்.எல்.ஏ., பின்னர் கட்சியிலிருந்து தாம் விலகவில்லை என்று பல்டியடித்தார். திரிணாமுல் காங்கிரஸின் அமைச்சர் ஒருவர் உடனான சந்திப்புக்குப் பிறகு ஜிதேந்திர திவாரி மனம் மாறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், ஷில்பத்ரா தத்தா, பனஸ்ரீ மைட்டி என்ற இரண்டு எம்.எல்.ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகினர். திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ-க்கள், ஒரு எம்.பி உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

மம்தா
மம்தா

பா.ஜ.க-வின் எம்.பி-யும், மேற்கு வங்க மாநில யுவ மோர்ச்சா தலைவருமான சௌமித்ரா கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சௌமித்ரா கான் தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார்.

குடும்பங்களைப் பிரிக்கும் அளவுக்கு மேற்கு வங்க அரசியல் களம் மோசமான கட்டத்துக்கு வந்திருப்பது கவலைக்குரியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு