Published:Updated:

மோடி அரசுடன் தி.மு.க அரசை இணக்கம் காட்ட வைக்க திட்டமிடுகிறதா பா.ஜ.க? - ஒரு பார்வை!

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

”மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்றால் எல்லாம் கிடைக்கும் என பா.ஜ.க மிரட்டுகிறது” என தி.மு.க-வும், ”மத்திய அரசுடன் இணக்கமாக செல்லுங்கள் என சொல்வது எப்படி மிரட்டலாகும்” என பா.ஜ.க-வினரும் பேசிருவருகிறார்கள். உண்மை நிலவரம் என்ன?

“கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பில் மட்டுமல்ல, மாநிலங்களுக்கான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது, கல்வி மற்றும் மாநில சுயாட்சியில் தலையிடுவது எனத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க அரசு மாநிலங்களின் உரிமையில் தலையிடுகிறது. அதுமட்டுமல்ல அனைத்து அதிகாரத்தையும் தங்களிடம் குவித்து வைத்துக்கொண்டு அடிப்படைத் தேவைக்குக் கூட அவர்களிடம் மாநிலங்கள் கையேந்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்திய அரசியலமைப்பின்படி மத்தியில் கூட்டாட்சி என்ற அடிப்படை அறத்தைக் கூட மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை” என தி.மு.க உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அல்லாதவை குற்றம்சாட்டி வருகின்றன. “என்னதான் மத்திய அரசு முறையாக செயல்பட்டு மாநிலங்களுக்கு உரியதைச் செய்தாலும் அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு எதிரான சிந்தனையை எதிர்க்கட்சிகள் திணித்து வருகிறார்கள்” என.பா.ஜ.க-வினர் கூறுகின்றனர்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

“மாநில மக்களின் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என பா.ஜ.க-வினர் பேசிவருகிறார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநிலத்துக்கு நன்மைகளைக் கொண்டு வாருங்கள் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தி.மு.க-வை எல்.முருகன் மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார் என்றும் மக்கள் நலனுக்காகக் கூறப்பட்ட கருத்து என்றும் இரண்டு தரப்பும் பேசிவருகிறார்கள்.

ஆக்ஸிஜன் முதல் தடுப்பூசி வரை... `தற்சார்பு தமிழ்நாடு' நோக்கி நகர்கிறோமா?

மத்திய அரசு தி.மு.க-வை மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் பா.ஜ.க கூறுகிறதா இல்லை மிரட்டுகிறதா என்பதை தி.மு.க செய்தித்துறை இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோ, “தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் சொல்வதே அதிகார திமிருடன்தான் இருக்கிறது. மிரட்டும் வகையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து ஒன்றில் இருக்கும் ஒன்றிய அரசு என்று உங்களை அழைத்தால் கோபம் வருகிறது. இணக்கத்திற்கும் அடிமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க அரசு எப்போதும் ஒன்றிய அரசுடன் இணைந்து செல்வதற்குத்தான் விரும்புகிறது. அந்த இணக்கம் என்பது எங்களுக்கான உரிமையைக் கேட்டுப் பெறுவதற்காகத்தான் தவிர உங்களுக்கு அடிமையாக இருக்க முடியாது. வரி வாங்கும், விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்கும்போது மாநிலங்களுக்கு எல்லாவற்றையும் கொடுப்பதற்கு நீங்கள் யார்? அந்த அதிகாரம் உங்களுக்கு யார் தந்தது? அரசியலமைச்சட்டத்தில் யார் வரி விதிக்கலாம், எந்தளவு விதிக்கலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. எதன் அடிப்படையில் ஒரே வரியாக மாற்றி, 60 சதவிகித வரியை நீங்களே வசூல் செய்து கொள்கிறீர்கள்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

மத்திய அரசு முறைப்படி கொடுக்க வேண்டியதைத் தமிழ்நாடு அரசுக்காக நான் வாதாடி பெற்றுத் தருவேன் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். வாதாடுவது என்பது எங்களுக்கான உரிமையைப் பெறுவதற்காகத்தானே தவிர உங்களிடம் அடிமையாக இருக்க முடியாது” என்றவர்…

“இதுதான் இறையாண்மை என்று நமக்கு வரையறுக்கப்படவில்லை. இந்தியாவிலே அதிகளவில் தமிழ்நாடு அரசிடம் வரியைப் பறித்துக்கொண்டு அவர்களுக்கு உரியதைக் கொடுக்காமல் ஏமாற்றுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது. தமிழ்நாடு அரசு இணக்கமாக இருக்க எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால், பா.ஜ.க நாம் அடிமையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அரசியலமைப்புச்சட்டத்தில் பேசப்பட்டுள்ள மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், உண்மைகள் நாங்கள் பேசுகிறோம். தமிழ்நாடு அரசு சார்ந்து இருக்கத்தான் விரும்புகிறது. சேர்ந்து இருக்க விரும்பவேயில்லை. அது சாப்பாட்டுக்கும், உடைக்கும், உறைவிடத்திற்குமான சார்பு. எங்களுக்கென்று தனித்த உரிமை இருக்கும்போது உங்களை சேர்ந்தே ஏன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

இந்தியாவில் மொழிவழி மற்றும் மானுட இனம் என இரண்டு வகையான மனிதக் குலம் இருக்கிறது. நாங்கள் திராவிட இனக்குழுக்கள். இந்த நாட்டில் மற்ற எல்லா மொழி மற்றும் மானுட இனங்கள் போல நாங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறோமே தவிர ஒன்றிய அரசு தான் எல்லாம் என எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” எனப் பதிலளித்தார்.

பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை... கண்டுகொள்ளாத மோடி அரசு!

கருந்தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் இது குறித்து கருத்துக் கேட்டோம், “பதவியில் இருக்கும்போது ஒரு பேச்சு, இல்லாதபோது மற்றொரு பேச்சு என தி.மு.க தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியாக இருந்த போது தேர்வு அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனப் பேசினார்கள். தற்போது அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசித்து தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தால் தேர்வு ரத்து குறித்து நாங்கள் ஆலோசித்துச் சொல்கிறோம் எனச் சொல்கிறார்கள். நீட் தேர்வில் மீண்டும் மாணவர்களைக் குழப்பிக்கொண்டு வருகிறார்கள். நீட் தேர்வின் நோக்கம் என்ன என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை. தடுப்பூசி வரவில்லை வரவில்லை என்றார்கள். ஆனால், கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுப் பெறப்பட்டுள்ளதே அதைப்பற்றிப் பேசுகிறீர்களா? எல்லாவற்றிலும் நெகட்டிவாகவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் வேண்டுமானால் ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்லும் போக்கு மக்களிடம் எடுபடும். ஆனால், ஆட்சிக்கு அது பொருந்தாது.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

மத்திய அரசின் திட்டங்கள் பல தமிழகத்திற்குத் தேவைப்படுகின்றன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது இணக்கமாக இருந்ததால் பல துறைகளில் தமிழக மக்கள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பலனடைந்தார்கள். அதெல்லாம் மனதில் கொள்ளாமல் கேலி, கிண்டலாக பேசி வந்தால் தமிழக மக்களுக்கு அது எதிராகத்தான் இருக்கும், எந்த நன்மையும் பெற முடியாது” என்றவர்…

மேலும், “செங்கல்பட்டு தடுப்பூசி மையம் காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. உற்பத்தியைத் தொடங்காமலேயே அதில் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது தி.மு.க தலைவர் ஸ்டாலினோ, அவரது எம்.எல்.ஏ-க்களோ, அப்பகுதி எம்.பி-க்களோ அந்த ஆலையை ஒருபோதும் சென்று பார்வையிட்டது இல்லை. நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. இன்றைக்குத் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதும் உடனே உற்பத்தியைத் தொடங்கி தடுப்பூசியைக் கொண்டு வந்துவிட முடியும் என்ற பொய்யான, கற்பனையான கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் உள்ள செயல்படாமல் இருக்கும் அனைத்துவிதமான ஆலைகளையும் செயல்பட வைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு தள்ளப்படுகிறது. அதன்படி மத்திய பா.ஜ.க அரசு அதற்கான நடவடிக்கைகளை எப்போதோ தொடங்கிவிட்டது. மருந்து தயாரிப்பது என்றால் அது எந்த மருந்து, எந்த நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க வேண்டும். அங்கே முதலீடு செய்வதற்கான பொருளாதாரத்தை எப்படி ஒதுக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசித்துத்தான் செய்ய வேண்டும். அதையெல்லாம் மத்திய அரசு தயார் செய்துகொண்டுதான் இருக்கிறது.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்

அரசியல் வேறு நிர்வாகம் வேறு என்பதை தி.மு.க பிரித்துப் பார்த்துச் செயல்பட்டால்தான் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யமுடியும். ஆனால், ஏதோ காரணத்திற்காகப் பிடிவாதப் போக்குடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்” எனச் செங்கல்பட்டு தடுப்பூசி மையம் குறித்த பிரச்னை குறித்தும் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு