Published:Updated:

`தமிழகப் பிரச்னைகளைக் கவனித்தால் போதும்!' - அன்புமணி பிளான்

அ.சையது அபுதாஹிர்

``அன்புமணிக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது என்பது தெரியும். ஆனால், மாநிலங்களவையில் தமிழகத்துக்காகக் குரல்கொடுத்தால் போதும் என்றே அவரும் நினைக்கிறார்” என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

அன்புமணி மனுத்தாக்கல்
அன்புமணி மனுத்தாக்கல்

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்டார், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். கடந்த ஐந்தாண்டுகள், இதே தொகுதியின் எம்.பி-யாக இருந்து செய்த திட்டங்கள் தன்னைக் கரைசேர்க்கும் என்று அன்புமணி எதிர்பார்த்த நேரத்தில், தமிழகம் முழுவதும் எழுந்த பிரதமர் மோடிக்கு எதிரான அலை, அன்புமணியையும் அடித்துச் சென்றது. அன்புமணி உட்பட பா.ம.க-வின் ஏழு வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினார்கள்.

பி.ஜே.பி கூட்டணி
பி.ஜே.பி கூட்டணி

தேர்தலுக்கு முன்பாக பி.ஜே.பி கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றபோதே, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் மத்திய அமைச்சரவையில் எப்படியும் இடம்பெற்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டார். குறிப்பாக, பா.ம.க - மத்திய அரசில் அங்கம்வகித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த முறையாவது அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அன்புமணி உட்பட அனைவரும் தோல்வியடைந்துவிட்டதால், அமைச்சர் கனவு தகர்ந்துபோனது. அதேநேரம், அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் அன்புமணிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்புமணி மீண்டும் அமைச்சராவாரா என்ற எதிர்பார்ப்பு, பா.ம.க-வினர் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், ராஜய்சபாவில் இரட்டை இலக்க உறுப்பினர்களைக் கொண்டிருந்த அ.தி.மு.க-விற்கே அமைச்சரவையில் ஓரிடம் மட்டும் வழங்கப்படும் என்று பி.ஜே.பி தரப்பு சொன்னதால், அந்தக் கட்சி அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்நிலையில், ஓர் உறுப்பினரை மட்டுமே வைத்திருக்கும் பா.ம.க-விற்கு அமைச்சரவையில் இடம்கிடைப்பது சாத்தியமா என்று பி.ஜே.பி வட்டாரத்தில் விசாரித்தோம்.

``அன்புமணி, கடந்த முறையே பி.ஜே.பி கூட்டணியில் வெற்றிபெற்றபோது, அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று ராமதாஸ் நேரடியாக மோடியிடம் கோரிக்கை வைத்தார்.

மோடி - ராமதாஸ்
மோடி - ராமதாஸ்

ஆனால், அன்புமணி மீது சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரை அமைச்சராக்கினால் தனது அரசுமீது எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை வைப்பார்கள் என்று மோடி மறுத்துவிட்டார். ஐந்தாண்டுகள் கடந்தும் அன்புமணி மீதான சி.பி.ஐ வழக்கு இன்னும் முடியவில்லை. அதேநேரம், காங்கிரஸ் அரசைப் போன்று அடிக்கடி அமைச்சரவை மாற்றும் திட்டமும் மோடியிடம் இல்லை. கடந்த ஐந்தாண்டுகளில், மூன்று முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம்செய்தார், மோடி. எனவே, ராஜ்யசபா உறுப்பினராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு அமைச்சர் பதவி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

இப்போது மட்டுமல்ல, ஓராண்டு கடந்தும் அன்புமணி சி.பி.ஐ வழக்கிலிருந்து விடுதலைபெற்றால்கூட, அமைச்சர் பதவியை வழங்க மோடி யோசிப்பார். இப்போதுள்ள அரசு, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததே தர்மத்தின் அடிப்படையில்தானே தவிர, கட்டாயத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, அமைச்சராக அன்புமணிக்கு வாய்ப்பில்லை” என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

அன்புமணி-மோடி
அன்புமணி-மோடி

``அன்புமணிக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது என்பது தெரியும். ஆனால், மாநிலங்களவையில் தமிழகத்திற்காகக் குரல்கொடுத்தால் போதும் என்றே அவரும் நினைக்கிறார்” என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.