Published:Updated:

பழங்குடியினத் தலைவர்களைக் கொண்டாடும் பாஜக அரசு... பின்னணி என்ன?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்தும் மோடி
பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்தும் மோடி

சுதந்திரத்துக்காகப் போராடிய பழங்குடி மக்களை கௌரவிப்பது மட்டுமே பாஜக-வின் நோக்கமல்ல, அதன் பின்னணியில் வலுவான ஓர் அரசியல் ஆதாயமும் இருப்பதாக அரசியல் விமர்ச்சகர்கள் கூறியிருக்கின்றனர்.

``இந்திய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பழங்குடிச் சமுதாயத்தின் பங்கு அளப்பரியது. பழங்குடியினர்தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள். காங்கிரஸ் அரசு ஓட்டு வங்கிக்காக மட்டுமே பழங்குடிகளைப் பயன்படுத்திக்கொண்டது. அவர்களுக்காக எந்தத் திட்டத்தையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. பழங்குடிகளின் சாதனையை வெளியில் சொல்லாமல், அனைத்தையும் மூடிமறைத்துவிட்டனர். அவர்களுக்குப் பழங்குடியினரின் நலன் பற்றிக் கவலையில்லை. ஆனால், நாங்கள் பழங்குடி மக்களைக் கொண்டாடுகிறோம். அதை, இங்கிருக்கும் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பழங்குடியினர்தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள்" என உணர்ச்சிப்பெருக்குடன் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

பழங்குடியின விழாவில் பிரதமர் மோடி
பழங்குடியின விழாவில் பிரதமர் மோடி

பிர்சா முண்டா தினம்:

கடந்த திங்கட்கிழமை, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி, ம.பி முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி `ரேஷன் ஆப்கே கிராம்', `50 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப்பள்ளி', 'சிவப்பணு சோகை தடுப்பு திட்டம்' உள்ளிட்ட பல்வேறு பழங்குடி நலத்திட்டங்களை மோடி தொடங்கிவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ``இந்தியா தனது முதலாவது பழங்குடியினர் கௌரவ தினத்தை (ஜன்ஜதியா கௌரவ் திவஸ்) கொண்டாடுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டில் முதன்முறையாக இத்தகைய பெரும் அளவிலான பழங்குடியினச் சமுதாயத்தின் முழுமையான கலை - கலாசாரம், விடுதலைப் போராட்டம் உள்ளிட்டவற்றில் அவர்களின் பங்கு நினைவுகூரப்பட்டு பெருமையுடன் கௌரவிக்கப்படுகிறது" என்றார்.

பழங்குடித் தலைவர் பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்தும் மோடி
பழங்குடித் தலைவர் பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்தும் மோடி

பழங்குடியினர்தான் ஹீரோக்கள், காங்கிரஸ் மறைத்துவிட்டது!

தொடர்ந்து பேசிய மோடி, ``இன்று தேசத்தைக் கட்டமைப்பதில் பழங்குடியினச் சமுதாயத்தின் பங்கு குறித்து நாம் தேசிய அரங்குகளில் விவாதிக்கும்போது, சிலர் வியப்படைகிறார்கள். அவர்களுக்கு இந்திய கலாசாரத்தை வலுப்படுத்துவதில் பழங்குடியினச் சமுதாயம் எந்த அளவுக்கு பங்களித்திருக்கிறது என்பது தெரியாது! பழங்குடியினச் சமுதாயத்தின் பங்களிப்பு குறித்து நாட்டுக்குச் சொல்லப்படாததும், அவ்வாறு சொன்னாலும் மிகக் குறைந்த அளவு தகவல்களை அளித்து வந்ததும்தான் இதற்குக் காரணம். சுதந்திரத்துக்குப் பின்னர் பல பத்தாண்டுகளாக நாட்டின் ஆட்சியை நடத்தியவர்கள், தங்களது சுயநல அரசியலுக்கு முன்னுரிமை அளித்ததால்தான் இவ்வாறு நடந்தது!" என முந்தைய காங்கிரஸ் கட்சியைக் குற்றம்சுமத்தினார்.

பிர்சா முண்டா
பிர்சா முண்டா

பழங்குடியினர்களைக் கொண்டாடும் கட்சி பாஜக-தான்!

ஆனால் இப்போதைய பாஜக ஆட்சியில், நாட்டின் இதர பகுதிகளில் கிடைப்பதுபோல இன்று பழங்குடியினப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், கழிவறைகள், இலவச மின்சாரம், எரிவாயு இணைப்புகள், பள்ளி, சாலை, இலவச சிகிச்சை போன்ற வசதிகள் வேகமாகக் கிடைத்துவருகின்றன. மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது" என்றார்.

பிர்சா முண்டா
பிர்சா முண்டா

மேலும், `` முன்பு அரசில் இருந்தவர்கள் இந்தப் பகுதிகளைச் சுரண்டும் கொள்கையைப் பின்பற்றிவந்தார்கள். நாங்கள் இந்தப் பகுதிகளின் வளங்களை முறையாகப் பயன்படுத்தும் கொள்கையைப் பின்பற்றிவருகிறோம். வனச்சட்டங்களை மாற்றியமைத்ததன் மூலம் வன வளங்கள் பழங்குடியினச் சமுதாயத்துக்கு கிடைக்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் தனிகவனம் செலுத்தப்பட்டுவருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஒன்பது புதிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள தாய்மொழி, பழங்குடியின மக்களுக்குப் பயனளிக்கும்" எனத் தொடர்ந்து பழங்குடி மக்கள்மீதான பாஜக-வின் அக்கறையை வெளிப்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திடீர் அக்கறை..?!

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் நடைபெற்ற இந்தியாவின் 75-வது சுதந்திர தினச் சிறப்பை ஆண்டு முழுவதும் கொண்டாடும்விதமாக, மத்திய பாஜக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களை கௌரவித்து விழாக்கள் நடத்தியும்வருகிறது. அந்தவகையில் நாட்டி சுதந்திரத்துக்காக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை `பழங்குடிகள் கௌரவ தின’மாக அறிவித்துக் கொண்டாடியிருக்கிறது. மேலும், பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது.

சுதந்திர தினம் பிரதமர் மோடி
சுதந்திர தினம் பிரதமர் மோடி

ஆனால், சுதந்திரத்துக்காகப் போராடிய பழங்குடி மக்களை கௌரவிப்பது மட்டுமே பாஜக-வின் நோக்கமல்ல, அதன் பின்னணியில் வலுவான ஓர் அரசியல் ஆதாயமும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர். அதாவது, மத்தியப் பிரதேச மாநிலம் கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டுவரை பாஜக-வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்துவருகிறது. குறிப்பாக, 2005-ல் இருந்து 2018 வரை சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்தது. அந்த நிலையில், 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் சார்பாக கமல்நாத் முதல்வரானார். இது பாஜக-வை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சிவராஜ் சிங் சௌஹான்
சிவராஜ் சிங் சௌஹான்

அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து வீழ்த்த வேண்டும் என மிகத் தீவிரமாகச் செயல்பட்ட பாஜக, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தன்பக்கம் இழுத்தது. இதனால் பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் முதல்வர் கமல்நாத், தனது பதவியை ராஜினாமா செய்தார். வெறும் ஒன்றைரை ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. 2020-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, சிவராஜ் சிங் சௌஹான் முதல்வரானார்.

அதிலிருந்து சுதாரித்துக்கொண்ட பாஜக, எந்தவகையிலும் காங்கிரஸ் மீண்டெழுவதற்கான வாய்ப்பைக் கொடுத்துவிடக் கூடாது என மிக கவனமாகச் செயல்பட்டுவருகிறது. மாநில சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக, பாஜக-வின் வாக்குவங்கி சரிந்த தொகுதிகளிலும், சமுதாய மக்களிடமும் மீண்டும் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகத் திட்டமிட்டு வேலை செய்துவருகிறது.

கமல்நாத்
கமல்நாத்

முக்கியமாக, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் ரிசர்வ் தொகுதிகளில் கணிசமான வாக்குவங்கியையும், வெற்றிவாய்ப்பையும் பாஜக இழந்திருக்கிறது. குறிப்பாக, அந்த மாநிலங்களில் நடந்து முடிந்த, கடந்த சட்டமன்றத் தேர்தல்களை எடுத்துக்கொண்டால், ஜார்க்கண்டில் உள்ள 28 ரிசர்வ் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளிலும், சத்திஸ்கரில் உள்ள 29 ரிசர்வ் தொகுதிகளில் மூன்று தொகுதிகளிலும் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 47 ரிசர்வ் தொகுதிகளில் 16 தொகுதிகளிலும் மட்டுமே பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. மற்ற தொகுதிகளில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

ஆகவே, பழங்குடியினர் அதிகமாக வாழும் ரிசர்வ் தொகுதிகளில், வாங்குவங்கியை அதிகரிக்கவும், தோல்வியடைந்த தொகுதிகளில் மீண்டும் வெற்றிபெறவும், வெற்றிபெற்ற தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துகொள்வதற்காகவும் பாஜக மேற்கொண்டுவரும் மெகா திட்டத்தின் ஒரு பகுதியே, பழங்குடிகள் மீதான அக்கறையும், பிர்சா முண்டா பிறந்தநாள் கொண்டாட்டம், அவர்கள் நலன்சார்ந்த திட்டங்களும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு