Election bannerElection banner
Published:Updated:

``மனுதர்ம கருத்துகளுக்கும் பி.ஜே.பி-க்கும் என்ன சம்பந்தம்?" - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளை தூக்கி எறிவதுதான் மனுதர்மம். அதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது மனுதர்மம் அல்ல.'' - வானதி சீனிவாசன்

சென்னையில் நடந்த யூடியூப் சேனல் நிகழ்வு ஒன்றில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுதர்மம் குறித்துப் பேசினார். அதில், மனுவில் பெண்கள் பற்றி எப்படியெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களைத் திருமாவளவன் தெரிவித்தார். அந்த வீடியோ `க்ராப்' செய்யப்பட்டு, `திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திப் பேசினார்' என்ற குற்றச்சாட்டுடன் பகிரப்பட்டது.

சென்னை குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர், பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கொடுத்த ஆன்லைன் புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்தனர். அதற்கு தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

குஷ்பு, பா.ஜ.க மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம், `பெண்களை மோசமாகச் சொல்வதுதான் உங்கள் கொள்கையா...' என மனு சர்ச்சை குறித்து திருமாவளவனுக்கு கண்டனங்களைத் தெரிவித்தார்.

திருமாவளவன்
திருமாவளவன்

தொடர்ந்து, மனுதர்மத்தைத் தடைசெய்யக்கோரி சனிக்கிழமை திருமாவளவன் போராட்டம் நடத்தினார். அவர் மீது சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று, திருமாவளவனின் மக்களவை தொகுதியான சிதம்பரத்தில், பா.ஜ.க மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தச் சென்ற குஷ்புவை முட்டுக்காடு அருகே கைது செய்துள்ளது போலீஸ்.

இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் இது குறித்துப் பேசினோம்.

``மனுதர்மத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள், அந்தந்த காலங்களில் சொல்லப்பட்ட கருத்துகள். அது எப்போதும் நிரந்தரமாகப் பின்பற்றப்படுவதில்லை. தற்போது மனுதர்மத்தின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. அனைவருக்கும் சமமான அரசியல் அமைப்பில், மக்களே மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சி செய்து வருகிறோம். அப்படி இருக்கும்போது, சம்பந்தமே இல்லாமல் மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் பேசி, திருமாவளவன் சர்ச்சையாக்கியுள்ளார்.

மனுதர்மத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கும் பி.ஜே.பி-க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? மனுவை பி.ஜே.பி உருவாக்கவில்லை. அதைப் பின்பற்றுகிறோம் என்றும் நாங்கள் சொல்லவில்லை. கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது அதிக அக்கறை காட்டுவதால் மனுதர்மத்தை பி.ஜே.பி-தான் உருவாக்கியது என்பது போன்ற பிம்பத்தை திட்டமிட்டு கட்டமைக்கின்றனர்.

தீண்டாமைக்கு எதிராகவும், பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலும் பி.ஜே.பி இயங்கி வருகிறது. நாட்டிலேயே பெண்களுக்கு 33% பொறுப்புகளைக் கொடுக்கும் மாற்றத்துக்கான கட்சியாக பி.ஜே.பி இருக்கிறது. அப்படி இருக்கும்போது, காலத்துக்கு ஒவ்வாத மனுதர்ம கருத்துகளைத் திருமாவளவன் எதற்காகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்?

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அவற்றையெல்லாம் கடந்து, மிக முக்கியமான காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது, திருமாவளவன் பெண்களை ஏன் மீண்டும் அந்த சிந்தனைகளுக்குள் புகுத்தப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை. தன்னுடைய அரசியலுக்காக, இந்து மத எதிர்ப்புக்காக அவர் சம்பந்தமில்லாமல் மனுவை கையில் எடுக்கிறார்.

இந்து மதம் உலகின் பாரம்பர்ய மதமாக இருந்தாலும், காலத்தால் அறுபடாமல் அதன் தொன்மை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சக மனிதனை நேசிக்க வேண்டும் என்ற பார்வையால்தான் அந்த மதம் இப்போதும் நிற்கிறது. இந்து மதத்தில்தான் சீர்திருத்தவாதிகள் அதிகம். காலம் காலமாகச் சீர்திருத்தங்களை அனுமதித்து, அதற்கென பெரியவர்களை உருவாக்கி, கோட்பாடுகளை உருவாக்கி தர்ம சிந்தனையில் இயங்கும் மதமாக இந்து மதம் இருக்கிறது. காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளைத் தூக்கி எறிவதுதான் மனுதர்மம்.

திருமாவளவன்
திருமாவளவன்

அதைப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது மனுதர்மம் அல்ல. கடந்த 50 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு சூழ்நிலைக்கு மத்தியில், பெண்கள் கல்விபெற்று, வேலைவாய்ப்புப் பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களை, மீண்டும் காட்டுமிராண்டி காலத்துக்கு அழைத்துச் செல்வதற்காகத்தான் இந்தச் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமத்துவம் இல்லாத, பெண்களுக்கு மரியாதை கொடுக்காத எந்த விஷயமும், எந்தப் பெயரில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அந்தந்த மத சீர்த்திருத்தவாதிகள், அவரவர் மதங்களில் சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும். மற்ற மதங்களில் உள்ள பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை, அந்தந்த மதங்களில் உள்ளவர்கள் எதிர்த்துப் போராடி தீர்வு கொண்டு வர வேண்டும்.

திருமாவளவன்
திருமாவளவன்

சமகாலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேறு. கல்வி, பணியிடம் என்று பெண்கள் கவனம் பெற ஏராளமான விஷயங்கள் உள்ளன. எனவே, திருமாவளவன் போன்றோர் ஆக்கபூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

இந்த சம்பவம் மற்றும் பா.ஜ.கவினரின் கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்.

``மனுதர்மத்திலும், மற்ற நூல்களிலும் பெண்களுக்கு எதிராகச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை எதிர்த்து நாங்கள் நடத்தும் போராட்டம் இன்று, நேற்று தொடங்கியதல்ல. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேராசிரியர் வீரமணி போன்றோர் எல்லாம் தொடங்கி வைத்ததுதான் இந்தப் போராட்டம். பா.ஜ.கவினர் சொல்வதுபோல, திடீரென யாரும் இப்போது மனுதர்ம கருத்துகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கவில்லை. பல ஆண்டுக்காலமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சனாதன கொள்கைகளுக்கு எதிராக மாநாடுகள், பேரணிகளை நடத்தி வருகிறோம்.

`மனுதர்மத்தில் கூறப்பட்டிருக்கும் பெண்களுக்கு எதிரான கருத்துகளை நாங்கள் ஆதரிக்கவுமில்லை, பின்பற்றவுமில்லை' என்று பா.ஜ.கவினர் கூறுகின்றனர். ஆனால், எப்போது இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததோ அப்போதிலிருந்தே அவர்கள் மனுதர்ம கொள்கைகளை நம் நாட்டின் பெண்களின் மீது திணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு

இதற்கு உதாரணமாக சபரிமலை பிரச்னையை சொல்லலாம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பிறகு ஒரு கூட்டம் இதை எதிர்த்து, `பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்றால் ஐதீக, ஆகம விதிமுறைகள் சீர்குலைந்துவிடும்' என்று கூறி பெண்களைக் கோயிலுக்குள் விடாமல் தடுத்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு சாதகமாக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே ஒரு கும்பல் ஐதீக, ஆகம விதிகளைக் காரணம் காட்டி எதிர்த்துவிட்டு, `நாங்கள் பெண்களுக்கு எதிரான மனுதர்ம கருத்துகளை ஆதரிக்கவில்லை' என்று கூறுவது அப்பட்டமான ஏமாற்று வேலை.

இந்தியாவிலுள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இது நீண்ட நெடிய போராட்டம். சனாதனத்திற்கும், ஜனநாயகத்திற்குமான போராட்டம். இந்தப் போராட்டத்தில் எக்காரணம் கொண்டும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. எங்கள் போராட்டம் தொடரும்" என்றார் வன்னி அரசு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு