Published:Updated:

“பசியிலோ பட்டினியிலோ யாரும் வாடவில்லை!”

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி சீனிவாசன்

- வானதி சீனிவாசன்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய பா.ஜ.க அரசுமீது ஏராளமான விமர்சனங்கள். இந்தச் சூழலில், தமிழக பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த கரு.நாகராஜன் பேசியது சரியா... அவர் மீது பா.ஜ.க தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன்?”

“முதலில் கரு.நாகராஜன் தவறாகப் பேசியிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவரின் பேச்சைக் கண்டித்திருப்போம். ‘பிரதமரை மக்கள் கல்லால் அடிப்பார்கள்’ என்று ஜோதிமணி பேசியதால்தான் கரு.நாகராஜன் அப்படிப் பேசினார். கரு.நாகராஜன் பேசியது தவறென்றால், ஜோதிமணி பேசியதும் தவறுதான். ‘பெண் என்பதற்காகவே அவரிடம் அப்படிப் பேசவில்லை’ என்று கரு.நாகராஜனே விளக்கம் கொடுத்திருக்கிறார். தரம் தாழ்ந்த விமர்சனங்களை யார் முன்வைத்தாலும் அது தவறுதான். அதில் ஆண், பெண் பேதமெல்லாம் இல்லை. பெண்களுக்கென்று சிறப்புச் சலுகைகளெல்லாம் தர வேண்டாம்.”

“தேசியப் பட்டியலின நல ஆணையத்தில் பதவி கொடுப்பதாகச் சொல்லித்தான் தி.மு.க-வின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமியை பா.ஜ.க-வில் இணைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே..?’’

“ ‘தி.மு.க-வில் சாதியப் பாகுபாடு இருக்கிறது; அங்கு எனக்கான அங்கீகாரம் இல்லை’ என்ற காரணத்தைச் சொல்லி தி.மு.க-விலிருந்து வெளியேறிய அவர், பா.ஜ.க-வின் கொள்கைகள் பிடித்துப்போய் எங்கள் கட்சியில் இணைந்திருக் கிறார். மற்றபடி, வேறு எந்தக் காரணமும் இல்லை.”

“20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில், விவசாய மானியம், வழக்கமான ரேஷன் பொருள்கள் வழங்கல் போன்றவற்றையும் சேர்த்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து...?”

“ `20 லட்சம் கோடி ரூபாய் என்பது நேரடியான நிதி அல்ல’ என்று ஆரம்பத்திலேயே பிரதமர் சொல்லியிருக்கிறார். இது, 20 லட்சம் கோடி ரூபாயை உருவாக்குவதற்கான திட்டம் மட்டுமே. பல்வேறு தொழில்கள், முதலீடுகள் மூலம் இது கொண்டுவரப்படும்.”

“அப்படியென்றால், ‘20 லட்சம் கோடி ரூபாய் அல்ல; வெறும் ரூ.1,86,650 கோடிதான். இந்த எண்ணை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற ப.சிதம்பரத்தின் ட்வீட் சரிதானா?”

“அவரை அப்படியே நினைவு வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அவருக்கான பதிலை இன்னும் சில நாள்கள் கழித்துச் சொல்கிறோம்.”

“தன்னாட்சி அமைப்பான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசின் நீர்வளத்துறைக்குக் கீழ் கொண்டுவருவது சரியா?”

“நிர்வாக வசதிக்காகத்தான் ஜல்சக்தி துறையின் கீழ் ஆணையங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அதிகமாகப் பலனடையப்போவது தமிழ்நாடுதான்.’’

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

“புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் மெத்தனமாக இருந்தது ஏன்?”

‘‘புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய சரியான கணக்கெடுப்புகள் நம்மிடம் இல்லாததால் ஆரம்பத்தில் நடவடிக்கைகள் எடுப்பதில் சிரமம் இருந்தது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் நடக்க ஆரம்பித்த 24 மணி நேரத்திலேயே மாநிலப் பேரிடர் நிதிக்கு அதிகப்படியான நிதியை அனுப்பிய மத்திய அரசு, அதைப் புலம்பெயர் தொழிலாளர் களுக்கு உணவளிக்கப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் எங்கேயும் பசியாலும் பட்டினியாலும் வாடவில்லை. அவர்கள் உடனடியாகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பியதுதான் நடந்ததற்குக் காரணம். புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ரயில்களை இயக்க மத்திய அரசு தயாராகத்தான் இருந்தது. ஆனால், மாநில அரசுகளிடம் அவர்கள் குறித்த முறையான தகவல்கள் இல்லை. அதுவும் தாமதத்துக்கான காரணம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“உத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை உ.பி அரசு இழுத்தடித்து அனுமதி கொடுத்தது ஏன்?”

‘‘காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலிருந்து தான் அதிக அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்துவந்தனர். அப்படியான சூழலில், ஆயிரம் பேருந்துகளையும் ஏன் உ.பி-யிலேயே கொடுக்க வேண்டும்... உ.பி முதல்வர், கேட்ட தகவல்களையும் சரியாகக் கொடுக்க வில்லை. பேரழிவிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய நேரத்தில், பேருந்துகளைக் கொடுப்ப தாகச் சொல்லி அரசியல் செய்தது காங்கிரஸ்தான்.’’

“விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் நோக்கில்தான் ‘மின்சார சீர்திருத்த வரைவு மசோதா’ கொண்டு வரப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?’’

‘‘இலவச மின்சாரம் என்பது மாநில அரசின் உரிமை சார்ந்த விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மின்சாரத்துறையில் ஏற்படும் நஷ்டங்களைச் சரிசெய்ய மாற்று வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு, மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.”

‘‘உங்களின் இந்த பதில் தமிழக அரசை மிரட்டும் தொனியில் இருக்கிறதே?”

‘‘அப்படி அல்ல. 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் ஒரு மாநிலத்தின் பிரதிநிதியாகவே நான் இதைச் சொல்கிறேன்.”

“கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வேலையை பா.ஜ.க செய்துவருவதாக விமர்சிக்கப்படுகிறதே?”

‘‘நரசிம்ம ராவ் காலத்திலேயே தனியார் மயத்துக்கான கதவுகள் இந்தியாவில் திறந்துவிடப் பட்டுவிட்டன. அதனால், நாட்டுக்கு நிச்சயமாக நன்மைதான். இன்று அதனுடைய வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றும் முயற்சிதான் இது. இதனால் பயனடையப்போவது நாட்டு மக்கள்தான்.”

“பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆன பிறகு, அங்கு இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுமா?”

‘‘இப்போதைய முதன்மையான நோக்கம் தனியார்மயத்தின் மூலமாக வேலைவாய்ப்பைப் பெருக்குவதுதான். அதன் மூலம் அனைவரும்தான் பயனடைவார்கள். அதன் வளர்ச்சிப்போக்கில் இடஒதுக்கீடு போன்ற விஷயங்களைக் கொண்டு வரலாம். ஆரம்பத்திலேயே இதைப்பற்றிப் பேசி முட்டுக்கட்டை போடுவது சரியாக இருக்காது.”

‘‘வெளிநாட்டில் இருப்பவர்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தில் இனப் பாகுபாடு காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளதே?’’

‘‘ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு எத்தனை கப்பல் வேண்டும், விமானங்கள் வேண்டும் என்பதை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அதன்படிதான் வெளிநாட்டிலிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். தமிழ்நாட்டுக்குள் ஆறு விமானங்கள் வந்தவுடனேயே, ‘அழைத்து வந்தது போதும். இனி யாரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க முடியாது’ என்று தமிழக முதல்வர்தான் சொன்னார். அதன் காரணமாகவே அதிகமானோரை அழைத்து வர முடியவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருபவர் களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் வசதிகள் இல்லாமலிருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.’’