அலசல்
Published:Updated:

“வி.ஐ.பி-கள் ட்வீட் போடுவதில் என்ன தவறு?”

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் பேட்டி

தேர்தல் குளத்தில் மீனைப் பிடித்துவிட மாட்டோமா என்று தமிழக அரசியல் களத்தை உன்னிப்பாக கவனித்துவருகிறது பா.ஜ.க. இந்தநிலையில்தான் பா.ஜ.க தேசிய மகளிர் அணியின் தலைவர் வானதி சீனிவாசனிடம் டெல்லி விவசாயிகள் போராட்டம், சசிகலா அரசியல் விவகாரம் உள்ளிட்டவை குறித்துப் பேசினோம்...

“வெளிநாட்டுப் பிரபலங்கள் சிலர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்களே..?”

“பணத்தைப் பெற்றுக்கொண்டு கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார்கள். எனவேதான், ‘இது எங்கள் நாட்டின் பிரச்னை. நாங்கள் இது குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். உலகில் நடைபெற்றுவரும் எத்தனையோ மனித உரிமை மீறல்களைப் பற்றியெல்லாம் பேசாத நீங்கள், இந்திய விவசாயிகள் போராட்டத்தை மட்டும் பரபரப்பாக்குவதன் பின்னணி என்ன?’ என்று இந்திய இறையாண்மை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.’’

“வி.ஐ.பி-கள் ட்வீட் போடுவதில் என்ன தவறு?”

“போராட்டக்களத்தின் சாலைகளில் ஆணிகளைப் பதித்துவைப்பதுதான் இந்திய இறையாண்மையா?’’

“ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற போராட்டக் களத்தை நீங்களே பார்த்திருப்பீர்கள். இதுதான் அமைதி வழிப் போராட்டமா?

‘செங்கோட்டைக்குச் சென்று கொடியை ஏற்றியது தவறு; எங்கள் கூட்டத்துக்குள் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர்’ என்று விவசாய சங்கத்தினரே சொல்கின்றனர். ஆக, மறுபடியும் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறாமல் இருப்பதற்குக் காவல்துறையினர் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. உயிர்ச்சேதம் ஏற்படாமல், பாதுகாப்பு கொடுக்கும் நடவடிக்கைதான் இது.’’

“வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்துப் பேச ஒன்றும் இல்லாத காரணத்தால்தான், போராடும் விவசாயிகள் மீதே பழிசுமத்தித் தப்பித்துக்கொள்கிறீர்கள் என்று உங்கள் கட்சியினர் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே?’’

“வேளாண் சட்டங்களிலுள்ள சாதகங்கள் குறித்து நானே அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினரை அழைத்து மூன்று கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்ட சுமார் ஒரு லட்சம் பேர் வேளாண் சட்டங்களின் சாதக அம்சங்களை உள்வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றனர். ஆனால், 100 பேர் சாலையில் இறங்கிப் போராடினால், அந்த எதிர்ப்பு மட்டும்தான் உங்கள் கண்களில் படுகிறது.’’

“உலகப் பிரபலங்களுக்கு பதிலடி கொடுக்கச் சொல்லி இந்தியப் பிரபலங்களுக்கு மத்திய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுப்பதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளனவே?”

“நம் நாட்டுக்கு எதிராக வெளிநாட்டிலுள்ள ஒரு பாப் பாடகி ட்வீட் போடுகிறார் என்றால், அதற்கு எதிர்வினையாக நம்மூரிலுள்ள வி.ஐ.பி-கள் ட்வீட் போடுவதில் என்ன தவறு? அழுத்தத்தின் காரணமாகத்தான் ட்வீட் போட்டிருக்கின்றனர் என எப்படிச் சொல்ல முடியும்.”

“பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?’’

“அவருடைய கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை!’’

“எழுவர் விடுதலை விவகாரத்தில், ஏன் இத்தனை அலைக்கழிப்புகள்... மத்திய பா.ஜ.க அரசின் நிலைப்பாடுதான் என்ன?’’

“இந்த விஷயத்தில் ஆளுநரையும் குடியரசுத் தலைவரையும் அரசியல்ரீதியாகப் பார்ப்பது தவறு. அரசியல் அமைப்புச் சட்டப்படி, இவர்கள் இருவரையும் மத்திய அரசு நிர்பந்திக்க முடியாது. அவர்கள் இடத்திலிருந்து நாங்கள் பதில் சொல்லவும் முடியாது. எனவே, சட்டப்படி அவர்கள் தங்கள் கடமையைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’’

“வி.ஐ.பி-கள் ட்வீட் போடுவதில் என்ன தவறு?”

“டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.க-வில் சசிகலாவை இணைக்கும் முயற்சியில் பா.ஜ.க ஆர்வம் காட்டுகிறதுதானே?’’

“சசிகலாவை கட்சியில் இணைக்கலாமா, வேண்டாமா என்பதெல்லாம் அ.தி.மு.க சம்பந்தப்பட்ட விவகாரம். தினகரன் இது குறித்து அதிகாரபூர்வமாக ஏதேனும் கருத்து தெரிவித்திருந்தால் நான் பதில் சொல்லலாம். மற்றபடி பா.ஜ.க தலைவர்களை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும்தான் சந்திக்கிறார்கள்.’’

“ஆனால், ‘அ.தி.மு.க-வில் சசிகலாவை இணைத்துக்கொண்டால்தான் தி.மு.க-வை வெற்றிகொள்ள முடியும்’ என்று ஆடிட்டர் குருமூர்த்தியும் சொல்கிறாரே?’’

“சசிகலா விவகாரத்தில், அ.தி.மு.க-வே முடிவெடுத்துக்கொள்ளும் என்பதுதான் கட்சிரீதியாக எங்களுக்குச் சொல்லப்பட்ட விஷயம். மற்றபடி இது குறித்து வேறெந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக யாரேனும் பேசியிருந்தால் மட்டுமே நான் கருத்து சொல்வது சரியாக இருக்கும்.’’

“உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க-வினரே போராட்டம் நடத்துவதைக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரான நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“நிச்சயமாக அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை.... உள்ளூரிலுள்ள சில தலைவர்களின் பிரச்னைகளுக்காக யாரேனும் இது போன்ற போராட்டங்களுக்கு வந்திருக்கலாமே தவிர... கட்சிரீதியாக எந்தவொரு பேரணியோ, போராட்டமோ இதுவரை நடைபெற்றதில்லை!’’-