Published:Updated:

மாணவர்களுக்கு காவியும் வேண்டாம்... ஹிஜாப்பும் வேண்டாம்!

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

- வகுப்பெடுக்கிறார் வானதி சீனிவாசன்

மாணவர்களுக்கு காவியும் வேண்டாம்... ஹிஜாப்பும் வேண்டாம்!

- வகுப்பெடுக்கிறார் வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
வானதி சீனிவாசன்

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களைக் குறிவைத்து நடைபெற்றுவரும் ‘ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள்’ நாடு முழுக்கப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் ஹிஜாப் விவகாரத்தில் பா.ஜ.க-மீது எழுந்திருக்கும் விமர்சனங்கள், தமிழகத்தில் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் பா.ஜ.க-வின் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினோம்...

“ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்களை இதுவரை பா.ஜ.க நேரடியாகக் கண்டிக்காதது ஏன்?’’

“மாணவர்கள் காவி அணிவதையும் நாங்கள் ஏற்கவில்லை; ஹிஜாப் அணிவதையும் ஏற்கவில்லை; மாணவர்கள் சீருடை அணிந்து கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. மதச் சுதந்திரத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான். அதேசமயம் அந்தச் சுதந்திரம் எந்த இடத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறதோ, அந்த இடத்தில் எச்சரிக்கையோடு அணுக வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் பார்வை.’’

“பள்ளிகளில், ‘ஹிஜாப் அணியக் கூடாது’ என்று சொல்கிற பா.ஜ.க தலைவர்கள், ‘டர்பனும் அணியக் கூடாது’ என்று சொல்லத் தயங்குவது ஏன் என்றெல்லாம் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றனவே?’’

“சீக்கியர் சமூகத்தின் ஆண் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே டர்பன் அணியும் பழக்கத்தைக்கொண்டிருக்கின்றனர். எனவே, இது குறித்து நாம் எதுவும் சொல்லவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறோம். யாருடைய மத நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கம் பா.ஜ.க-வுக்கு இல்லை. ஆனால், ஹிஜாப் விவகாரத்தில் மத அடிப்படைவாதிகள் ‘ஹிஜாப்’ அணிவதை ஓர் அடையாளமாகக் கட்டாயப்படுத்துகிறபோதுதான் பிரச்னை எழுகிறது. ஆடைக் கட்டுப்பாடு இருக்கிற இடங்களிலும்கூட, வேண்டுமென்றே ஹிஜாப் அணியச் சொல்லி அரசியல் பின்னணியோடு யாரும் செயல்படக் கூடாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.’’

மாணவர்களுக்கு காவியும் வேண்டாம்... ஹிஜாப்பும் வேண்டாம்!

“மாணவி லாவண்யா தற்கொலைச் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணை, உண்மை அறியும் குழு, தேசிய குழந்தைகள் ஆணைய விசாரணை என சுறுசுறுப்பு காட்டிய பா.ஜ.க., கர்நாடகா சம்பவத்தில் கனத்த அமைதி காக்கிறதே?’’

“லாவண்யா மரணத்தையும், கர்நாடகா சம்பவத்தையும் ஒப்பிடுவதே தவறு. கர்நாடகத்தில் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுகிற வகையில், அமைதி திரும்புவதற்கான எல்லா வேலைகளையும் மாநில பா.ஜ.க அரசு முன்னின்று செய்துவருகிறது. இரண்டு மதத்தினருமே இது போன்ற பிரச்னையைச் செய்யக் கூடாது என்பதிலும் கண்டிப்பாக இருக்கிறது. நீதிமன்றமும் ‘இந்த நிலை இப்படியே தொடர வேண்டும்’ என்று அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில், ‘லாவண்யா தற்கொலையின் பின்னணியில் மதமாற்றம் எதுவும் இல்லை’ என்று மாநில அமைச்சர்களும், காவல்துறை அதிகாரியும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். ஆக இப்படியான முன்முடிவுகளை எடுத்துவிட்ட பிறகு நியாயமான உண்மைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். எனவே, அங்கே நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் இந்த விஷயத்தில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் வாய் மூடி மௌனம் காத்த வேளையில், பா.ஜ.க-தான் தொடர்ந்து குரல் கொடுத்தது. நீதிமன்றமும் இப்போது இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி நீதி வழங்கியிருக்கிறது.’’

“காவித்துண்டு அணிந்தவர்கள் வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைகிறார்கள், கற்களை வீசியெறிகிறார்கள், ஹிஜாப் அணிந்த மாணவியை வழிமறித்து கோஷமிடுகிறார்கள்... ஆனாலும்கூட தேசிய குழந்தைகள் ஆணையமும் களத்துக்கு வரவில்லையே ஏன்?’’

“எல்லா விஷயங்களையும், எல்லா விஷயங்களோடும் ஒப்பீடு செய்ய முடியாது. அப்படி ஒப்பிட்டால் பதிலும் வராது.

கர்நாடகாவில் நடைபெற்றது சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்ட விஷயம். கலவரத்துக்கான ஒரு விதையை அங்கே சிலர் விதைக்கப் பார்க்கிறார்கள். இந்தச் சூழ்நிலையை எப்படி அமைதிக்குக் கொண்டுவருவது என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.’’

மாணவர்களுக்கு காவியும் வேண்டாம்... ஹிஜாப்பும் வேண்டாம்!

“பா.ஜ.க-விலேயே வாரிசுத் தலைவர்கள் இருக்கும்போது, ‘வாரிசு அரசியல், ஜனநாயகத்துக்கு ஆபத்து’ என்று பிரதமர் மோடி யாரைக் குறிப்பிடுகிறார்?’’

“எங்கள் கட்சியிலும் வாரிசுகள் இருக்கிறார்கள்தான். ஆனால், வாரிசு என்பதாலேயே அவர்கள் பொறுப்புக்கு வந்துவிடவில்லை. கட்சிப் பணி, மக்கள் பணி எனக் களத்தில் பங்கெடுத்துத்தான் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். புதிதாகக் கட்சியில் இணைந்தவர்கள், நீண்டநாள் பணியாற்றுபவர்கள், பெண்கள், ஓ.பி.சி., எஸ்.சி என அனைத்துத் தரப்பினரையும் நாங்கள் வேட்பாளர்களாகத் தேர்வு செய்கிறோம். பிரதமர் மோடியும் இதை உன்னிப்பாக கவனிக்கிறார். ஆனால், மாநில அரசியலில் வேட்பாளர் தேர்விலேயே மாமன், மச்சான் என குடும்ப உறவினர்கள் ஆதிக்கம் பரவலாகிக்கொண்டே வருகிறது. ஆக, இவர்கள் எப்படி ஊழலற்ற, நேர்மையான ஆட்சியைக் கொடுப்பார்கள்? எனவே, மாநிலக் கட்சிகளில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் யார் இருக்கிறார்கள், அங்கே குடும்ப ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துவிட்டு அதை பா.ஜ.க-வோடு ஒப்பிடுங்கள் என்றுதான் பிரதமர் சொல்கிறார்.’’

“அப்படியென்றால், தேசிய அளவிலான வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறீர்கள்?’’

“தேசிய அளவில் பிரதமர் மோடியின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது மத்திய அமைச்சர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களோ எந்த இடத்திலாவது ஆதிக்கம் செலுத்துகிறார்களா? எனவே, ‘வாரிசு அரசியல்’ என்று பிரதமர் சொல்வதை நீங்கள் எந்த அர்த்தத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதுதான் இங்கே முக்கியம்!’’