Published:Updated:

``செந்தில் பாலாஜியின் மிரட்டலுக்கெல்லாம் பாஜக ஒருபோதும் அஞ்சாது" - வானதி சீனிவாசன் காட்டம்

வானதி சீனிவாசன்

``மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை உயரதிகாரிகளை வைத்துக்கொண்டு அரசியல் பேச விரும்பவில்லை' என்று கூறிக்கொண்டே, முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே பேசியிருக்கிறார் செந்தில் பாலாஜி.’’ - வானதி சீனிவாசன்

``செந்தில் பாலாஜியின் மிரட்டலுக்கெல்லாம் பாஜக ஒருபோதும் அஞ்சாது" - வானதி சீனிவாசன் காட்டம்

``மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை உயரதிகாரிகளை வைத்துக்கொண்டு அரசியல் பேச விரும்பவில்லை' என்று கூறிக்கொண்டே, முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே பேசியிருக்கிறார் செந்தில் பாலாஜி.’’ - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜி பாஜக மீதும், தமிழக பாஜக தலைவர் சகோதரர் அண்ணாமலை மீதும் பல தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அக்டோபர் 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்து நான்கு நாள்கள், கோவைப் பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர், பா.ஜக முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததும் கோவைக்குப் பறந்து வந்திருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

தீபாவளிக்கு முந்தைய தினம் அதிகாலை, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்துச் சிதறியதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் இதை 'சிலிண்டர்  வெடிப்பு' எனக் கூறி மறைக்கப் பார்த்தார்கள். ஆனால், பா.ஜ.க இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு சென்று, அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகே உண்மை வெளிவந்தது.

2019 ஈஸ்டர் நாளில், இலங்கையில் கிறிஸ்தவ சர்ச்சில் குண்டு வைக்கப்பட்டதுபோல, தீபாவளி நாளில் கோவையைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்தது. ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 75 கிலோ வெடிபொருள்கள் உள்ளிட்ட தகவல்கள் மக்களின் அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தன.

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை உண்மையை வெளிப்படுத்திய பிறகே, காவல் துறையும் அதை ஒப்புக்கொண்டிருக்கிறது. 'கோவையில் எந்தப் பதற்றமும் இல்லை. எல்லாம் இயல்பாகவே இருக்கின்றன. பா.ஜ.க-தான் அரசியல் செய்துவருகிறது' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

'கோவையில் 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகர், புறநகர்ப் பகுதிகளில் சுமார் 40 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகின்றன. தமிழகம் கடந்தும்  விசாரிக்க வேண்டி இருப்பதால்தான் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்திருக்கிறார்' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அதே பேட்டியில் கூறியிருக்கிறார்.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

'கோவையில் எந்தப் பதற்றமும் இல்லை. இயல்புநிலைதான் நீடிக்கிறது' என்றால் 3,000 போலீஸார் ஏன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்... 40 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்... மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?

செந்தில் பாலாஜி தன்னை அறியாமலேயே, 'கோவை பதற்றத்தில் இருக்கிறது. இயல்புநிலை இல்லை' என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால்தான் 3,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 40 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 'மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை உயரதிகாரிகளை வைத்துக்கொண்டு அரசியல் பேச விரும்பவில்லை' என்று கூறிக்கொண்டே,

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே பேசியிருக்கிறார் செந்தில் பாலாஜி. பத்திரிகைகள், தொழில்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரையும் மிரட்டும் வகையில் அவரின் பேட்டி அமைந்திருக்கிறது.

மாநில காவல்துறையால் விசாரிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானதால்தான், அக்டோபர் 31-ம் தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது. இதைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் அமைச்சர் கோவைக்கு வந்திருக்கிறார். முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று வணிகர்கள், தொழில்துறையினரை அமைச்சர் மிரட்டியிருப்பதாகவும் தகவல் வருகிறது.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. முழு அடைப்புப் போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கெல்லாம் பாஜக ஒருபோதும் அஞ்சாது.

உயரதிகாரிகளை இரு பக்கமும் அமர வைத்துக்கொண்டு, பதற்றத்துடன் பேட்டி அளிப்பதற்கு பதிலாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். கோவை கார் வெடிப்புச் சம்பவத்தைவைத்து அரசியல் நடத்தவேண்டிய அவசியம் பாஜக-வுக்கு இல்லை.  பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி பாஜக-தான். இதுவரை 200 நிர்வாகிகளை பாஜக-வும், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட  அமைப்புகளும் இழந்திருக்கின்றன. 1998-ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டுவெடிப்பு  நடத்தப்பட்டது. அப்போதும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் இருந்தது. இப்போதும் திமுக ஆட்சியில்தான், மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.