Published:Updated:

"போராட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் யாரை பலிகடாவாக்க நினைக்கிறார்கள்?" - கொதிக்கும் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

`சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்களை அரசியல் கட்சிகள் தூண்டி வருகின்றன' என்று குற்றம் சாட்டுகிற வானதி சீனிவாசன், தன் வாதத்துக்கு வலுசேர்க்கும்விதமாக, ''போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து சாப்பாடு வருகிறது?'' என்ற கேள்வியையும் கேட்கிறார்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான மக்கள் போராட்டம், சென்னையில் ஒரு வாரத்தைத் தாண்டி வலுத்து வருகிறது. மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திவரும் இப்போராட்டங்கள் ஆளும்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து, இப்போராட்டங்களின் பின்னணி குறித்து பா.ஜ.க தலைவர்களும் பல்வேறு எதிர் கருத்துகளைச் சொல்லிவருகின்றனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினேன்...

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்

"ஆளும்கட்சிக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை நடத்திவரும்போது, அதை எதிர்க்கட்சிகள் வரவேற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?''

''சி.ஏ.ஏ விஷயத்தில், `இந்திய முஸ்லிம்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை' என்று தெளிவாக விளக்கம் கூறிய பிறகும்கூட, திரும்பத் திரும்ப பொது மக்களை தெருவில் நிறுத்திப் போராடுகிற எதிர்க்கட்சிகள், யாரை பலிகடாவாக்க நினைக்கிறார்கள்?

அனுமதி கொடுக்கப்படாத இடத்தில் உட்கார்ந்து போராட்டம் செய்பவர்கள், நடவடிக்கைக்கு உள்ளாகும்போது, காவல்துறை மீதே கல்லெறிந்து அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள். இந்தப் போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் எந்த அடிப்படையில் ஆதரவு கொடுக்கிறார்கள்? இப்படி ஆதரவு கொடுப்பதன் மூலம் எந்த வழிமுறையை அவர்கள் தூண்டிவிடுகிறார்கள்?''

"ஆளும்கட்சிக்கு எதிராக எந்தப் போராட்டம் நடைபெற்றாலும், உடனே `எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள்', `சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள்' என்று பா.ஜ.க-வினர் தொடர்ந்து பேசிவருகிறீர்களே?''

"சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்று நான் சொல்ல வரவில்லை. நீங்களே சொல்வதுபோல் அது மக்களின் தன்னெழுச்சிப் போராட்டமாகவே இருக்கட்டும். ஆனால், சென்னையில் இப்படியான போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கென்றே வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், எத்திராஜ் சாலை அருகே என காவல்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் இருக்கிறதா இல்லையா?

அனுமதிக்கப்பட்டுள்ள இந்த இடங்களைத் தாண்டி எங்கள் கட்சியினரே ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோது காவல்துறை கைது செய்ததுதானே? அப்படியென்றால், வண்ணாரப்பேட்டையில் போராடியவர்களைக் காவல்துறை கைது செய்தபோது, `கைதானவர்களை விடுவிக்க வேண்டும்' எனக்கோரி எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? காவல்துறை, சட்டம் ஒழுங்குக்கு ஒரு மரியாதையும் கிடையாதா?''

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்
சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்

"கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்தது எந்த சட்டத்திட்டத்துக்கு உட்பட்டது என்று சொல்வீர்கள்?''

"ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு. அந்தப் பின்னணியோடு அந்த விஷயத்தை அணுகும்போதுதான் அது முழுமையானதாக இருக்கும். இல்லையென்றால், அரையும் குறையுமாகத்தான் இருக்கும். அதனால் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக்கூட வரலாற்றுப் பின்னணியோடு ஒப்பிட்டுச் சொல்கிறோம்.

அயோத்தி என்பது இந்நாட்டினுடைய மண் பிரச்னை. எனவே, எல்லா விஷயங்களையும் எல்லா விஷயத்தோடும் ஒப்பிட்டுப் பேசிவிட முடியாது.''

`எங்களின் பிரார்த்தனைக்குக் கிடைத்த பரிசு!' - மகளின் வரவால் நெகிழும் ஷில்பா ஷெட்டி

" 'போராடுகிறவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்', `சாக வேண்டும் என்றே போராட்டத்துக்கு வருகிறார்கள்' என்றெல்லாம் தொடர்ச்சியாக பா.ஜ.க தலைவர்கள் பேசிவருவது மறைமுக மிரட்டல்தானே?''

"போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள், `இந்த நாட்டின் சட்டத்தை மதிக்க மாட்டோம், காவல்துறையை மதிக்க மாட்டோம், நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்று நினைத்து செயல்படும்போதும் அசாதுதீன் ஓவைசி போன்றவர்கள், `குறிப்பிட்ட நேரம் கரன்ட் ஆஃப் செய்யுங்கள்; இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறோம்' என்று வன்முறையாகப் பேசும்போதும் அதற்கு எதிர்வினையாக இதுபோன்ற பேச்சுகள் வருகின்றன. ஆனால், அவை கட்சி ரீதியிலான அதிகாரபூர்வ பேச்சுகள் அல்ல.''

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

''சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தை அரசியல் கட்சிகள்தான் தூண்டிவிடுகின்றன என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?''

''தன்னெழுச்சியான ஒரு போராட்டத்துக்கு இவ்வளவு பேரை எப்படி, யார் திரட்டி வந்தார்கள்? போராட்டக்காரர்களுக்கு எப்படி சாப்பாடு கிடைக்கிறது... தானே வந்துவிடுகிறதா? இதன் பின்னணியில் மறைந்திருந்து ஒருங்கிணைப்பவர்கள் யார்? இவர்களுக்கு என்னவிதமான தகவல்கள் கொடுக்கப்படுகின்றன?

மத நிறுவனங்களே, சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஒலிபெருக்கியின் மூலம் வெளிப்படையாக பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்களே! ஆக மொத்தம் காவல்துறைக்கு ஒருவித நெருக்கடியைக் கொடுத்து, ஆளும்கட்சியை ஒரு சிக்கலில் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்பதுதான் இந்தப் போராட்டங்களின் நோக்கமாக இருக்கிறது. இதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்!''

''பெரும்பான்மை மக்கள் எதிர்த்தும்கூட, `குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாற்றமில்லை; பின்வாங்க முடியாது' என்கிறாரே மோடி?''

"நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமையைக் காக்க வேண்டிய தார்மிக பொறுப்பு ஓர் அரசாங்கத்துக்கு இருக்கிறது. தங்கள் நாட்டு குடிமக்களாக யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான், உலக நாடுகள் ஒவ்வொன்றுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவும் பங்களாதேஷும் செய்துவருகிற ஓர் நடைமுறையை இந்திய அரசாங்கம் செய்யும்போது மட்டும் நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள், எதிர்க்கிறீர்கள்?''

மோடி
மோடி
`காரைக்குடி நபருக்குக் கொரோனா அறிகுறி?!' - விளக்கமளித்த மதுரை டீன்

"அகதிகளாகக் குடியேறியவர்களிடையேயும் மத ரீதியான பாகுபாடு பார்த்து குடியுரிமை வழங்கும் இந்திய அரசை எதிர்க்கக் கூடாதா?''

"இந்த நாடு, 1947-ல் மத ரீதியான பிரிவினைக்கு உள்ளாக்கப்படாமல் இருந்திருந்தால், நீங்கள் கேட்கிற கேள்வி சரி. ஆனால், நமக்கென்று ஒரு வரலாறு ஏற்கெனவே இருக்கிறது. அந்த வரலாற்றின் சார்பில் நின்றுகொண்டுதான் பதிலளிக்க முடியும். ஒவ்வொரு நாடுமே ஒவ்வொரு வழிமுறையை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த நாட்டுக்கோ, மத ரீதியிலான பிரிவினைதான் வரலாறாக இருக்கிறது.''

"வரலாற்றிலுள்ள மத ரீதியான பிரச்னைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, பின்னோக்கிப் பயணிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா?''

"காஷ்மீரில் இன்றைக்கும் லட்சக்கணக்கில் இருந்துவரும் அகதிகளுக்காக நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?

கடந்த 5 ஆண்டில் மட்டும் நாட்டின் 10 கோடி மக்களுக்காக தனிநபர் கழிப்பறை வசதியை மத்திய அரசு செய்துகொடுத்திருக்கிறதே... அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா. 60 வருடங்களாக மின் வசதி கிடைக்கப்பெறாமல் இருந்த கிராமங்களுக்கு மின்வசதி, எரிவாயு வசதி என எத்தனையோ திட்டங்களை மத்திய அரசு செய்துகொண்டுதானே இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள்?''

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

"இதே மத்திய பா.ஜ.க அரசு, `தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெறும் 23 கோடி ரூபாயையும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 644 கோடி'யையும் ஒதுக்கியிருப்பது குறித்தும் பேசலாமே?''

``தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் எல்லாம் தனிப்பட்ட ஒரு மாநிலத்துக்கு மட்டுமேயான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் என்பதோ குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பொது மொழி! இந்த வகையில், சம்ஸ்கிருத மொழி ஆராய்ச்சிக்காகவும் அதுகுறித்த படிப்புக்காகவும் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதிகப்படியான நிதியை ஒதுக்கியிருக்கலாம். எனவே, மொழி அரசியல் செய்ய வேண்டாம்!''

அடுத்த கட்டுரைக்கு