Published:Updated:

பா.ஜ.க வி.ஐ.பி வேட்பாளர்கள்... பல்ஸ் என்ன?

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு

- இ.கே

பா.ஜ.க வி.ஐ.பி வேட்பாளர்கள்... பல்ஸ் என்ன?

- இ.கே

Published:Updated:
குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
குஷ்பு
சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்க நெருங்க களம் அனலாகக் கொதிக்கிறது. கூட்டணி, தொகுதிகளெல்லாம் முடிவாகி தலைவர்கள் பிரசாரத்தில் பிஸியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் வெறும் இரண்டு சதவிகித வாக்குவங்கியையே கொண்டிருக்கும் பா.ஜ.க-வுக்கு 20 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி. இவர்களில் நான்கு வி.ஐ.பி வேட்பாளர்களின் தொகுதி நிலவரங்களைப் பார்ப்போம்.

ஆயிரம் விளக்கு - குஷ்பு

இஸ்லாமியர் என்ற அடையாளத்தை வைத்து எப்படியாவது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்று மனக்கணக்கு போட்டார் குஷ்பு. அதற்காக, தொகுதியில் தேர்தல் பணிமனை அமைத்து சுற்றிச் சுழன்று வந்தார். ஆனால், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பா.ம.க-வுக்குக் கொடுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த குஷ்பு, ஒருவழியாக டெல்லியில் காய்நகர்த்தி ஆயிரம் விளக்கு தொகுதியை கைப்பற்றிவிட்டார்.

குஷ்புவை எதிர்த்து தி.மு.க சார்பில் கருணாநி தியின் வாக்கிங் நண்பர் நாகநாதனின் மகன் டாக்டர் எழிலன் நிறுத்தப்பட்டிருக்கிறார். சமீபத்தில் ஸ்டாலினுக்கு உடல்நிலை பாதிப் படைந்தபோது அருகிலிருந்து கவனித்துக் கொண்டதால் இந்தப் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக அறிவாலய பட்சி சொல்கிறது. அ.ம.மு.க-வில் வைத்தியநாதனும், மக்கள் நீதி மய்யத்தில் கே.எம்.சரீபும், நாம் தமிழர் கட்சியில் ஷெரினும் களத்தில் நின்றாலும், போட்டி என்பது குஷ்புவுக்கும் எழிலனுக்கும்தான்!

குஷ்பு
குஷ்பு

ஃபேமஸ் பர்சனாலிட்டி என்ற அடிப்படையில் குஷ்பு பிரசாரத்துக்கு செல்லும்போது அதிக கூட்டம் சேருகிறது. ஆனால், அவையெல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும். அ.தி.மு.க மாவட்டச் செயலாளரான ஆதிராஜாராம் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிடுவதால், லோக்கல் கட்சியினர் அவருக்கு வேலைசெய்ய அங்கு சென்றுவிட்டார்கள். இதனால், பூத் லெவலில் விழிபிதுங்கிக் கிடக்கிறது பா.ஜ.க. தி.மு.க சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரான சிற்றரசு போட்டியிடாததால், எழிலனுடன் ஒட்டுமொத்த உ.பி-க்களும் களத்தில் ஓடியாடிவருகிறார்கள். இதனால், “மாடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க வேண்டுமானால் குஷ்பு சட்டமன்றம் செல்லலாம்” என்று கமென்ட் அடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்!

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

காரைக்குடி - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா பிறந்து வளர்ந்தது எல்லாமே காரைக்குடிதான். தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்த போது 2001-ல் ஒருமுறை எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஹெச்.ராஜா போட்டியிடுவதை லோக்கலிலுள்ள அ.தி.மு.க-வினரே ரசிக்கவில்லை. “எப்போது பார்த்தாலும் அடிதடி, கலவரம் உருவாகும் அளவுக்குக் குண்டக்க மண்டக்க பேசுகிறார். இதனால், படித்தவர்கள் மத்தியில்கூட அவருக்குச் செல்வாக்கில்லை” என்பது சொந்தக் கட்சியினரே அவர்மீது வைக்கும் விமர்சனம். இதெல்லாம் ராஜாவுக்கு மைனஸ்.

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, அங்கு சிறுபான்மையினராக இருக்கும் வல்லம்பர் சமூகத்தைச் சேர்ந்தவர். பில்டர் தொழில் செய்துவரும் மாங்குடி, பழகுவதற்கு எளிமையானவர் என்கிறார்கள் கதர் பார்ட்டிகள். ‘‘இதற்கு முன்பு சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தலைவராக இருமுறை இருந்திருக்கிறார். மக்கள் பிரச்னை என்று போன் செய்தால், உடனே ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். தி.மு.க-வினர் கொஞ்சம் இறங்கி வேலை செய்தால் போதும்... அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிடுவார்’’ என்கிறார்கள்.

அ.ம.மு.க வேட்பாளர் தேர்போகி பாண்டி, கள்ளர் சமூகம் என்பதால் முழுக்க முழுக்க அந்தச் சமூகத்தை நம்பியே போட்டியிடுகிறார். ’காரைக்குடி மக்கள் மன்றம்’ அமைப்பை நடத்திவரும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ராஜ்குமாரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரை மாணிக்கமும் உள்ளூர்வாசிகள் என்றாலும், மக்களிடம் அறிமுகம் இல்லாதவர்கள். கூட்டிக்கழித்துப் பார்த்தால், ஹெச்.ராஜாவுக்கும் ஜார்ஜ் கோட்டைக்கும் எட்டாத தூரமே என்பதுதான் இன்றைய கள நிலவரம்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

பா.ஜ.க வேட்பாளர் வானதி, சென்ற முறை தோற்றதிலிருந்தே தேர்தலுக்காக ‘ஸ்கெட்ச்’ போட்டு தொகுதிவாசிகளுடன் நெருக்கமாகப் பழகிவருகிறார். தொகுதியைப் பொறுத்தவரை செட்டியார், நாயுடு சமூகத்தினர் அதிக அளவில் இருந்தபோதும், வட இந்தியர்களும் முஸ்லிம்களும் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களில் வட இந்தியர்களின் வாக்குகளை அதிகம் நம்புகிறார் வானதி. மோடியின் இமேஜ் தன்னைக் கரைசேர்க்கும் என்பது வானதியின் கணக்கு. முஸ்லிம்களின் வாக்குகளைக் குறிவைத்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் களத்தில் நிற்கிறார்.

பா.ஜ.க., காங்கிரஸ் இருதரப்புகளின் வாக்குகள் பிரியும்போது அது நமக்குச் சாதகமாக அமையும் என்பது ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனின் கணக்கு. சிறப்பு விமானத்தில் வருவதும், ஹெலிகாப்டரில் சுற்றுவதும், நட்சத்திர விடுதியில் தங்குவதுமாக இருக்கும் கமல், சாலையில் இறங்கியதுமே ஆட்டோவில் பயணிப்பதும், வாக்கிங் செல்வதுமாக ஷூட்டிங் ஸ்பாட் போலவே நடிக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கோவை வடக்குத் தொகுதியைக் கொடுத்ததால், இங்கு லோக்கல் கட்சியினர் வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அமைச்சர் வேலுமணி அனைவரையும் அழைத்து ரெய்டுவிட்ட பின்னர்தான் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க., காங்கிரஸ், கமல்ஹாசன் என்று மும்முனை போட்டி நிலவுவதால், யாருக்கு ஓட்டளிப்பது என்று மக்களே குழப்பத்தில் இருக்கிறார்கள். இவர்களின் அடுத்தடுத்த பிரசார வியூகங்களே தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும்.

பா.ஜ.க வி.ஐ.பி வேட்பாளர்கள்... பல்ஸ் என்ன?
எல்.முருகன்
எல்.முருகன்

தாராபுரம் - எல்.முருகன்

ராசிபுரம் அல்லது அவிநாசியை எதிர்பார்த்த தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு, தாராபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டையே ஆளும் பா.ஜ.க., அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக நியமித்ததை பெருமையாகச் சொல்லியே வாக்குச் சேகரித்துவருகிறார் முருகன். தி.மு.க சார்பில் போட்டியிடும் கயல்விழி செல்வராஜ் தொகுதியில் மக்களுக்கும் கட்சியினருக்கும்கூட பரிச்சயம் இல்லாதவர் என்பது முருகனுக்கான ப்ளஸ். முருகனை ‘மிஸ்டர் க்ளீன்’ என்று காட்ட வேண்டும் என்பதற்காகவே மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சந்திரசேகர் வீட்டிலும் ம.தி.மு.க பிரமுகரின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு, அது தி.மு.க-வுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. தொகுதி அ.தி.மு.க-வுக்குக் கிடைக்காததில் வருத்தம் இருந்தாலும், ஒரு கட்சியின் தலைவர் தங்களால் தோற்கக் கூடாது என்று அ.தி.மு.க-வினர் இறங்கி களப்பணியாற்றினால் மட்டுமே முருகனை சட்டமன்றத்துக்குள் அனுப்ப முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism