Published:Updated:

பாஜக Vs ஆம் ஆத்மி Vs காங்கிரஸ்: குஜராத் தேர்தல் பிரசாரக் களத்தில் கவனம் ஈர்த்தது யார்?

குஜராத் தேர்தல்

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என குஜராத் தேர்தல் களம் மும்முனைப் போட்டியில் சூடுபிடித்திருக்க, மூன்று கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் ஆட்சியைப் பிடித்துவிடும் நோக்கத்தில் சூறாவளியாகச் சுழன்று வந்திருக்கின்றனர்.

பாஜக Vs ஆம் ஆத்மி Vs காங்கிரஸ்: குஜராத் தேர்தல் பிரசாரக் களத்தில் கவனம் ஈர்த்தது யார்?

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என குஜராத் தேர்தல் களம் மும்முனைப் போட்டியில் சூடுபிடித்திருக்க, மூன்று கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் ஆட்சியைப் பிடித்துவிடும் நோக்கத்தில் சூறாவளியாகச் சுழன்று வந்திருக்கின்றனர்.

Published:Updated:
குஜராத் தேர்தல்

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நேற்று(நவம்பர் 29) மாலையுடன் முடிவடைந்திருக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி என குஜராத் தேர்தல் களம் மும்முனைப் போட்டியில் சூடுபிடித்திருக்க, மூன்று கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் ஆட்சியைப் பிடித்துவிடும் நோக்கத்தில் சூறாவளியாகச் சுழன்று வந்திருக்கின்றனர். இவர்களில் தேர்தல் அறிக்கைகள், பேச்சுகள் மூலம் பிரசாரக் களத்தில் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர்கள் யார்?

குஜராத் தேர்தல்
குஜராத் தேர்தல்

பாஜக:

குஜராத்தில் கடந்த 1995 முதல் தொடர்ந்து ஆறு முறையாக ஆட்சியிலிருந்து வரும் பா.ஜ.க, தற்போது 7-வது முறையாக எப்படியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற முயற்சியில் மிகத் தீவிரமாக இறங்கியது. பா.ஜ.க தலைவர்களான மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா, ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டனர். முக்கியமாக பிரதமர் மோடி, கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில் மிக அதிகமான நாள்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காரணம் காங்கிரஸ் தவிர்த்து, ஆம் ஆத்மியும் தேர்தல் களத்தில் மிகத்தீவிரமாகக் குதித்தது, சொந்த பா.ஜ.க பிரமுகர்களே தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் கட்சிக்கு எதிராக திரும்பியது, மோர்பி பாலம் விபத்தால் ஏற்பட்ட அவப்பெயர் என பல சவால்களை பா.ஜ.க சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது.

மிகத்தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்ட மோடி, ஆம் ஆத்மிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தல் நேர இலவசத் திட்டங்களைக் கடுமையாகச் சாடினார். ஆனால், கடைசியில் அதற்கு நேர்மாறாக குஜராத் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை அள்ளித்தெளித்தது பா.ஜ.க. குறிப்பாக, பா.ஜ.க தேர்தல் அறிக்கையில், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், குடும்ப பெண்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு இலவச எரிவாயு சிலிண்டர்கள், பொது விநியோக திட்டத்தில் மாதத்துக்கு ஒரு கிலோ பருப்பு, ஆண்டுக்கு 4 முறை ஒரு கிலோ சமையல் எண்ணெய் என இலவச வாக்குறுதிகளை வாரிவழங்கியது.

குஜராத் பா.ஜ.க கூட்டத்தில் தொண்டர்கள்
குஜராத் பா.ஜ.க கூட்டத்தில் தொண்டர்கள்
ட்விட்டர்

மேலும், கோயில்களைப் புதுப்பிக்க ரூ.1,000 கோடி, 100 இடங்களில் அன்னபூர்ணா உணவகங்கள் அதில் ரூ.5-க்கு உணவு, ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, பொது சிவில் சட்டம் அமல், கோசாலை திட்டத்துக்கு ரூ.500 கோடி, கால்நடைகளின் சிகிச்சைக்காக 1,000 நடமாடும் மருத்துவக் குழுக்கள் என அதிரடி காட்டியது. இதில், இதில் அன்னபூர்னா உணவகங்கள் அமைத்து 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேபோல, மாணவர்கள் மத்தியில் இலவச ஸ்கூட்டர், இலவச சைக்கிள் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆம் ஆத்மி:

டெல்லி, பஞ்சாப்புக்கு அடுத்து குஜராத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் மிகத்தீவிரமான பிரசாரங்களில் இறங்கியது ஆம் ஆத்மி. டெல்லி மாடல் எனும் பெயரில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து மானியத்திட்டங்களும் குஜராத்தில் அமல் படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தது. குறிப்பாக, 300 யூனிட் இலவச மின்சாரம், கல்வி, மருத்துவம் இலவசம், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை, வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி என வாக்குறுதி கொடுத்தது. மிகமுக்கியமாக, குஜராத் மக்களின் மனதைக் கவர பா.ஜ.க பாணியில் மதரீதியிலான பிரசாரத்தைக் கையிலெடுத்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

குறிப்பாக குஜராத் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளிலேயே, ``ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா" என்ற கோஷங்களை பேரணியின்போது எழுப்பினார். மேலும், ``நான் கிருஷ்ண ஜென்மாஷ்டமியன்று பிறந்தேன். கம்சரின் வழித்தோன்றல்களை அழிக்கவும், ஊழல் மற்றும் குண்டர்களிடமிருந்து பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிறப்பு வேலைக்காகவும் கடவுள் என்னை அனுப்பியுள்ளார். நான் ஹனுமான் ஜியின் தீவிர பக்தன். எனக்கு ஹனுமான் ஜியின் எல்லையற்ற அருள் உள்ளது. கடவுளின் ஆசையை நிறைவேற்ற நாம் இணைந்து செயல்படுவோம். கடவுள் என்னுடன் உள்ளார்" என்று பேசினார். அதேபோல, ``அடுத்த ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக தயாராகிவிடும். உங்கள் அனைவருக்கும் ராமரை தரிசிக்க ஆசை இருக்கும். ஆனால் நீங்கள் குடும்பத்துடன் சென்று தங்கி சாப்பிட்டு வந்தால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். எனவே, குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், நாங்கள் அயோத்திக்கு இலவச தரிசன திட்டத்தை செயல்படுத்துவோம்!" என ஓர் இந்துத்துவவாதியாகவே பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவால்.

உச்ச பட்சமாக, ``புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்துடன், லட்சுமி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் என்பது 130 கோடி இந்தியர்களின் விருப்பம்'' என ட்விட்டரில் பதிவிட்டதோடு, அதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி பா.ஜ.க-வினருக்கே டஃப் கொடுத்தார். மேலும், ``மோர்பி பாலம் இடிந்தது, பா.ஜ.க ஊழலின் பெரும் விளைவு, குஜராத் முதல்வர் பதவி விலகவேண்டும்" என விமர்சனம் செய்தார். ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையைவிட, அரவிந் கெஜ்ரிவாலின் பேச்சுதான் குஜராத் தேர்தல் பிரசார களத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.

காங்கிரஸ்:

மற்ற மாநிலங்களைப் போல, குஜராத் தேர்தலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் போராட்டமாய் உருவாகியிருக்கிறது. நீண்டகாலமாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க மீதான மக்களின் அதிருப்தி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டாக விழும் என்ற கனவில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, ஆம் ஆத்மியின் வருகை காங்கிரஸ் கட்சியின் தூக்கத்தைக் கலைத்தது. மேலும், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி `பாரத் ஜோடோ' யாத்திரையில் பிஸியாக இருந்ததால் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் அவரால் முழுவீச்சில் ஈடுபட முடியவில்லை.

யாத்திரையில் ராகுல் காந்தி
யாத்திரையில் ராகுல் காந்தி

இருப்பினும் சில நாட்கள் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ``மோர்பி பால விபத்தில் பலர் உயிரிழந்ததுக்குக் காரணமானவர்கள் மீது எஃப்.ஐ.ஆரை கூட பா.ஜ.க அரசு பதியவில்லை. பால விபத்தில் தொடர்புடையவர்கள் பா.ஜ.க.வுடன் நெருக்கமானவர்கள் என்பதால்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிலதிபர்கள் வாங்கிய பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் பா.ஜ.க அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடிசெய்யாமல் அவர்களை கடன் கட்டத்தவறியவர்கள் என முத்திரை குத்தி அவமதிக்கிறது. மேலும், பழங்குடியின மக்களின் நிலங்களைப் பறித்து தொழிலதிபர்களுக்கு வழங்கி வருகிறது" என தர்க்கரீதியில் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ``10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மாதத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3,000 உதவித்தொகை, ரூ. 500-க்கு எரிவாயு சிலிண்டர்கள். தனியாக வசிக்கும் பெண்கள், முதியவர்கள் மற்றும் விதவைப்பெண்களுக்கு மாதம் ரூ. 2,000, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்" என வாக்குறுதிகள் அளித்து கவனம் ஈர்த்தது.

காங்கிரஸ் - பா.ஜ.க - ஆம் ஆத்மி
காங்கிரஸ் - பா.ஜ.க - ஆம் ஆத்மி

கவனம் ஈர்த்தது யார்?

மும்முனைப் போட்டி நிலவும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில், `தேர்தல் வாக்குறுதியில் கவனம் ஈர்த்திருப்பது பா.ஜ.க; அதேபோல, யாரும் எதிர்பாராத பேச்சுக்களில் கவனம் ஈர்த்தது ஆம் ஆத்மி; ஆனால், காங்கிரஸ் கட்சியின் பிரசார கூட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் மற்ற இரு கட்சிகள் அளவுக்கு கவனம் பெறவில்லை' என்கிறார்கள் குஜராத் தேர்தலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள்!