அரசியல்
அலசல்
Published:Updated:

பா.ஜ.க Vs காங்கிரஸ் கூட்டணி... எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு இருக்கிறதா?

மோடி, ராகுல்காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, ராகுல்காந்தி

பத்தாண்டுக்கால பா.ஜ.க அரசுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இருக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அமைப்புரீதியாக பா.ஜ.க வலுவாக இருக்கிறது

2014, 2019 எனத் தொடர்ச்சியாக இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., 2024 தேர்தலிலும் வெற்றிபெற்று ‘ஹாட்ரிக்’ அடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம் ஆகிய முக்கிய கட்சிகள், தற்போது பா.ஜ.க கூட்டணியில் இல்லை. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துவருகிறார்.

சமீபத்தில், பீகாரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ் குமார் முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். ‘ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதை இத்துடன் நிறுத்திவிடாமல், பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியை காங்கிரஸ் கட்டமைக்க வேண்டும். பழம்பெருமையைப் பேசுவதை நிறுத்திவிட்டு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை காங்கிரஸ் செய்ய வேண்டும். எனது அறிவுரையை காங்கிரஸ் கட்சி கேட்டு நடந்தால், பா.ஜ.க-வை 100 இடங்களுக்குள் சுருட்டிவிடலாம்’ என்று பேசியிருக்கிறார் நிதிஷ் குமார்.

இதே போன்ற ஒரு கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கு ஒன்றுபட்ட முன்னணியை எதிர்க்கட்சிகள் உருவாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்துவருகிறது. இதற்காக, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் பணிவுடனும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் அணுக வேண்டும்’ என்று ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டினால்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என்கிற யதார்த்தத்தை நிதிஷ் குமார், ப.சிதம்பரம் போன்ற தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

அதேநேரம், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது அவ்வளவு எளிதானதல்ல. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் போன்றவர்கள் பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதே சமயத்தில், காங்கிரஸையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். இவர்களை ஓர் அணிக்குள் காங்கிரஸ் கட்சி எப்படிக் கொண்டுவரப்போகிறது என்பதுதான் கேள்வி.

மோடி, ராகுல்காந்தி
மோடி, ராகுல்காந்தி

“இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலமாக ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு அடுத்தகட்டமாக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க அவர் என்ன செய்யப்போகிறார் என்பது முக்கியம்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். அவரிடம் பேசினோம்.

“பத்தாண்டுக்கால பா.ஜ.க அரசுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இருக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அமைப்புரீதியாக பா.ஜ.க வலுவாக இருக்கிறது. மேலும், மோடிக்கு நிகரான செல்வாக்குள்ள தலைவர்கள் காங்கிரஸில் இல்லை என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும்கூட, ஆட்சியை மாற்ற வேண்டுமென்று மக்கள் முடிவுசெய்துவிட்டால், எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் தூக்கியெறிந்துவிடுவார்கள். அத்தகைய மனநிலை மக்கள் மத்தியில் உருவானால், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைத் தனதாக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் காங்கிரஸுக்கு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட வேண்டும் என்பது ஓர் உத்தி. அதைப்போலவே, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியும் முக்கியமானது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பி.ஆர்.எஸ் போன்ற கட்சிகள் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. இந்தக் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸுடன் கூட்டணி சேர முன்வராதபட்சத்தில், தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் முயலலாம்” என்கிறார் ப்ரியன்.

“வலிமையாக இருக்கும் ஆளுங்கட்சியை நாமெல்லாம் ஒன்று சேர்ந்து தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டுவது இந்திய அரசியலில் வழக்கமான ஒன்றுதான். இதனால், பிரதமர் மோடி தலைமையில் வலிமையாக இருக்கும் பா.ஜ.க-வுக்கு எந்த பாதிப்பும் வராது” என்கிறார் பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன். இது குறித்து அவரிடம் பேசினோம்.

ப்ரியன் - இராம.ஸ்ரீநிவாசன்
ப்ரியன் - இராம.ஸ்ரீநிவாசன்

“பா.ஜ.க-வுக்கு எதிராகத் திரள வேண்டுமென்று சில தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முந்தைய கூட்டணியால் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பலனும் கிடையாது. தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் வேண்டுமானால், இத்தகைய முயற்சிக்குக் கொஞ்சம் பலன் கிடைக்கலாம். ஏனென்றால், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் என ஒவ்வொரு கட்சியும் பெற்ற இடங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, நாங்களெல்லாம் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று காண்பித்துக்கொள்ள அது உதவலாம். எதிர்க்கட்சிகள் என்னதான் முயற்சிகள் எடுத்தாலும், நிதிஷ் குமாரைப் போன்றவர்கள் எங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், மத்தியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சியமைக்கும்” என்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்.

எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, மார்ச் 1-ம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்திருக்கிறது தி.மு.க என்கிறார்கள். முரண்பாடுகளைக் கலைந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி போன்றவர்களையும் ஓர் அணிக்குள் கொண்டுவந்தால் மட்டுமே, காங்கிரஸால் பா.ஜ.க-வுக்குச் சவால்விட முடியும்!