Published:Updated:

செஸ் ஒலிம்பியாட் விளம்பர அரசியல்... பாஜக, திமுக சொல்வது என்ன?!

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

``இந்தியாவுக்குப் பெயர் எடுத்துத்தரத் தமிழ்நாட்டின் வரிப்பணத்தைச் செலவு செய்து வருகிறோம். ஜி.எஸ்.டி, சிலிண்டர் விலை ஏற்றத்தைத் திசை திருப்பவே இதுபோன்ற தேவையில்லாத அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது.” - திமுக தரப்பு

செஸ் ஒலிம்பியாட் விளம்பர அரசியல்... பாஜக, திமுக சொல்வது என்ன?!

``இந்தியாவுக்குப் பெயர் எடுத்துத்தரத் தமிழ்நாட்டின் வரிப்பணத்தைச் செலவு செய்து வருகிறோம். ஜி.எஸ்.டி, சிலிண்டர் விலை ஏற்றத்தைத் திசை திருப்பவே இதுபோன்ற தேவையில்லாத அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது.” - திமுக தரப்பு

Published:Updated:
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நேற்று தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளிலிருந்து 2,500க்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். போட்டியைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துவரும் வேலையில் பிரதமர் மோடியின் படத்தைத் தமிழ்நாடு அரசு தனது விளம்பரங்களில் புறக்கணித்தது பாஜகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் இடம்பெற்ற விளம்பர போர்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தத் தமிழ்நாடு அரசு ரூ.102 கோடி வரையில் ஒதுக்கிய போதிலும் விளம்பர படங்களில் பிரதமரின் படம் இடம்பெறாதது குறித்து பாஜகவினர் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தைத் தமிழக அரசு நேற்று அவசர அவசரமாகச் சேர்த்தது. சென்னை முதல் மாமல்லபுரம் வரையில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு விளம்பர பதாகைகளிலும், டிஜிட்டல் போர்டுகளிலும் பிரதமரின் படம் சேர்க்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் முதலில் பிரதமர் படம் புறக்கணிக்கப்பட்டதும், பின்னர் சேர்க்கப்பட்டதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இதுகுறித்து, திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டதில், ``தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பிரதமரின் படத்தைப் போட முடியாது. அப்படி எந்த சட்டமும் கிடையாது. செஸ் ஒலிம்பியாட்டிற்கு செலவு செய்வது எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் தான். மத்திய அரசு இதற்காக எந்த ஒரு பணத்தையும் தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. பிரதமர் வரும் அன்றைய தினம் மட்டும் பிரதமரின் படத்தை விளம்பரங்களில் போட்டால் போதும். அது மட்டுமே பண்பாடு. அதைத் தான் செய்திருக்கிறோம். தமிழக அரசு விளம்பரங்களில் மோடியின் படத்தை பாஜகவினர் ஏன் ஒட்ட வேண்டும். அப்படி ஒட்டியதால் தான் கருப்பு மையைக் கொண்டு அழிக்கிறார்கள்.

தமிழக அரசு போட்டியைச் சிறப்பாக நடத்தினால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தானே நல்ல பெயர் கிடைக்கப்போகிறது. இந்தியாவுக்குப் பெயர் எடுத்துத்தரத் தமிழ்நாட்டின் வரிப்பணத்தைச் செலவு செய்து வருகிறோம். ஜி.எஸ்.டி, சிலிண்டர் விலை ஏற்றத்தைத் திசை திருப்பவே இதுபோன்ற தேவையில்லாத அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மேலும், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, ``ரஷ்யாவில் நடந்திருக்க வேண்டிய சர்வதேச போட்டியைத் தமிழ்நாடு நடத்தவுள்ளது நமக்கு மகிழ்ச்சி தான். ஆனால், பிரதமரால் தொடங்கிவைக்கப்பட உள்ள சர்வதேச போட்டியில் அவருடைய புகைப்படம் இல்லாமல் இருப்பது மரியாதைக் குறைவான ஒன்று என்பது தான் எங்களின் எண்ணம். இதனால், தான் நாங்கள் எதிர்க்கிறோம். நம்முடைய பிரதமரை இருட்டடிப்பு செய்யும் மலிவான அரசியலாகவே இது பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலினின் படம் இருக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. எப்படி முதல்வர் என்ற அடிப்படையில் அவருடைய படம் முக்கியமோ அதே போலத் தான் பிரதமர் என்ற முறையில் மோடியின் படம் இருக்க வேண்டும். இதை திமுக உணராததால் தான் பிரதமரின் படத்தை நாங்கள் ஒட்டினோம். இன்று தவற்றை உணர்ந்து பிரதமர் படத்தை வைத்துள்ளார்கள். தமிழக அரசு பணம் செலவு செய்வதால் பிரதமரின் படத்தைப் போடத் தேவையில்லை என்று ஒருசில திமுகவினர் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்திவிட முடியுமா?” என்றார்.