Published:Updated:

``முரண்டு பிடிக்கும் பா.ஜ.க, அமைதி காக்கும் ரங்கசாமி!” என்ன நடக்கிறது புதுச்சேரி அரசியலில்?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

’காங்கிரஸ் கட்சியில் இருந்து பா,ஜ.கவுக்கு தாவிய நமச்சிவாயம் துணை முதல்வர் பதவியை கேட்டு நச்சரிப்பதுதான் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணியில் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதற்கு காரணம்’ என்று சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள்.

புதுச்சேரி மாநிலத்தின் 15-வது சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி பொதுத் தேர்தல் நடைப்பெற்ற நிலையில், அதன் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், 9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. அதே வேகத்தில் துணை முதல்வர், சபாநாயகர் பதவிகளுடன் இரண்டு அமைச்சர் பதவியையும் கேட்டு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால் துணை முதல்வர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் பா.ஜ.கவுக்கு கொடுக்க விருப்பமில்லாததால் மௌனமாகவே இருந்தார் முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

இருதரப்புக்கும் பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததால், மே 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ’முதல்வர் உள்பட இருப்பதே மொத்தம் 6 அமைச்சர் பதவிகள்தான். வெறும் 6 இடங்களில் வெற்றிபெற்ற உங்களுக்கு எப்படி இத்தனை பதவிகளை கொடுக்க முடியும்?’ என்று பா.ஜ.கவிடம் கேட்ட ரங்கசாமி, கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாநிலத்தின் முதல்வர், கூட்டணியின் தலைவர் மருத்துவனையில் இருக்கிறார் என்றுகூட பாராமல், தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்றுபேரை நியமன எம்.எல்.ஏக்களக நியமித்துக் கொண்டது என்.ஆர்.காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது.

அதையடுத்து மூன்று சுயேட்சை எம்.எல்.ஏக்களையும் வளைத்து தனது எம்.எல்.ஏக்கள் பலத்தை 12 ஆக உயர்த்திக் கொண்டு ரங்கசாமியின் முன்பு பேச்சு வார்த்தைக்கு அமர்ந்தது. ஆனால் இரண்டு அமைச்சர்களில் உறுதியாக இருந்தார் ரங்கசாமி. அதன்பிறகு பா.ஜ.கவின் உள்ளூர் நிர்வாகிகள் மட்டுமல்லாமல் அமித் ஷா உள்ளிட்டவர்களின் போனையே எடுக்காமல் அமைதியாக இருந்தார் ரங்கசாமி. இந்த பதவிச் சண்டையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறியதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்
புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்

’காங்கிரஸ் கட்சியில் இருந்து பா,ஜ.கவுக்கு தாவிய நமச்சிவாயம் துணை முதல்வர் பதவியை கேட்டு நச்சரிப்பதுதான் அமைச்சரவை தாமதத்திற்கும், கூட்டணி குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதற்கும் காரணம்’ என்று சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள். அதேபோல ‘இருபது வருடங்களுக்குப் பிறகு வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் செல்கிறோம். அமைச்சரவையிலும் இடம் கிடைக்கிறது. கிடைத்ததை பெற்றுக்கொண்டு கட்சியை வளர்க்கலாம் என்று நினைத்தோம். ஆனால் தனி நபர் ஒருவரின் பதவி ஆசையால் கட்சியின் பெயர் கரைந்து கொண்டிருக்கிறது” என்று முனகிக் கொண்டிருக்கின்றனர் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகள்.

இந்நிலையில்தான் ’இனிமேல் நமது ஆட்களை நம்பினால் வேலைக்கு ஆகாது. அதனால் நீங்களே களத்தில் இறங்கி பேசி முடியுங்கள்’ என்று ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிட்டதாம் மத்திய உள்துறை. அதனடிப்படையில் பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற முதல்வர் ரங்கசாமியிடம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனே இது தொடர்பாக பேசியிருப்பதாக தகவல். அங்கிருந்தே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நமச்சிவாயம்
நமச்சிவாயம்

சுமார் 3 நிமிடங்கள் நீடித்த உரையாடலுக்குப் பிறகு, ஆழ்ந்த யோசனையுடன் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறினார் ரங்கசாமி. அதற்கு மறுநாள் தங்கள் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், ‘கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏதான் சபாநாயகர் வேட்பாளர். அமைச்சர்கள் எண்ணிக்கை குறித்து கட்சி மேலிடம் அறிவிக்கும்” என்றார்.

தேர்தலுக்கு, முன்பு ’தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை வகிப்பார்’ என்று கூறிய பா.ஜ.கவின் இந்த தன்னிச்சையான அறிவிப்பு, கூட்டணிக்குள் நிலவும் குழப்பங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. வெளிப்படையாக எதையும் பேசாமல் பிரச்னையை அதன் போக்கிலேயே விட்டு முடிக்க நினைப்பவரான முதல்வர் ரங்கசாமி, இந்த விவகாரத்திலும் அதனையே கடைப்பிடிக்கிறார்.

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் ரங்கசாமி பதவியேற்பு வரை! - பா.ஜ.க-வின் ரோல் என்ன?

இந்நிலையில் பா.ஜ.க மேலிட தலைவர்களான சி.டி.ரவி மற்றும் ராஜூ சந்திரசேகர் எம்.பி இருவரும் இன்று புதுச்சேரிக்கு வரவிருப்பதாக கூறியிருக்கும் பா.ஜ.க தரப்பு, தங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் சபாநாயகர் வேட்பாளரின் பெயர், அமைச்சர்கள் பட்டியலையும் ரங்கசாமியிடம் கொடுக்க இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் பா.ஜ.கவின் நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரான அசோக் பாபு சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் முதல்வர் ரங்கசாமி மௌனம் கலையும் வரை எதுவும் நிரந்தரமில்லை என்பதே புதுச்சேரி அரசியலின் கடந்தகால வரலாறு.

அடுத்த கட்டுரைக்கு