Published:Updated:

சிவசேனா Vs பாஜக: 30 ஆண்டுகள் கூட்டணி... ஒரே கொள்கை... இருந்தும் பரம எதிரிகளானது எப்படி?!

பாஜக - சிவசேனா

கிட்டத்தட்ட ஒரே கொள்கைகொண்ட சிவசேனாவும் பா.ஜ.க-வும் பரம எதிரிகளைப்போல மோதிக்கொள்வது ஏன்?!

சிவசேனா Vs பாஜக: 30 ஆண்டுகள் கூட்டணி... ஒரே கொள்கை... இருந்தும் பரம எதிரிகளானது எப்படி?!

கிட்டத்தட்ட ஒரே கொள்கைகொண்ட சிவசேனாவும் பா.ஜ.க-வும் பரம எதிரிகளைப்போல மோதிக்கொள்வது ஏன்?!

Published:Updated:
பாஜக - சிவசேனா

மகாராஷ்டிர அரசியலில் தினம்தோறும் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன. சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 40 பேர் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சிவசேனாவின் முக்கிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களோடு அஸ்ஸாமில் தஞ்சமடைந்திருக்கிறார். இதனால், சிவசேனா அரசு கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தற்போது பரம எதிரிகளைப்போல மோதிக்கொள்ளும் சிவசேனாவும் பா.ஜ.க-வும் 30 ஆண்டுகளாகக் கூட்டணியிலிருந்தன. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் எங்கே தொடங்கியது?

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

எப்போது தொடங்கியது கூட்டணி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1989-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் சிவசேனாவும்-பா.ஜ.க-வும் முதன்முதலாகக் கூட்டணி அமைத்தன. 25 ஆண்டுகளாக இருந்த கூட்டணியில் 2014-ம் ஆண்டு முறிவு ஏற்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்தக் கூட்டணி முறிந்ததாகச் செய்திகள் சொல்லப்பட்டன. இரு கட்சிகளும் 2014 சட்டமன்றத் தேர்தலைத் தனித் தனியே எதிர்கொண்டன. பா.ஜ.க 122 இடங்களில் வெற்றிபெற்றது. சிவசேனா 63 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தேர்தலுக்குப் பிறகு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து பா.ஜ.க-வும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாட்டிறைச்சித் தடையும்... மோதலும்!

பா.ஜ.க., சிவசேனா இடையே 2014-ம் ஆண்டு வரையிலும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவந்தன. ஆனால், 2015-ம் ஆண்டு இவ்விரு கட்சிகளுக்குமிடையே மிகப்பெரிய சண்டைகள் நிகழத் தொடங்கின. 2015-ல் நடைபெற்ற ஜெயின் மதத்தினர் திருவிழாவையொட்டி மாட்டிறைச்சிக்குத் தடைவிதித்து, மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா வசமுள்ள மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதைக் கடுமையாக எதிர்த்தது சிவசேனா. எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி விற்பனையிலும் களமிறங்கியது. கூட்டணியில் இருந்துகொண்டு இரு கட்சிகள் வெளிப்படையாக இப்படி மோதிக்கொள்வது அந்தச் சமயத்தில் பெரும் சர்ச்சையானது.

அத்வானியின் உதவியாளர்மீது மை வீச்சு!

இதையடுத்து மும்பையில், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கசூரியின் புத்தக வெளியீட்டுவிழாவுக்கு, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளராக இருந்த சுதீந்தரா குல்கர்னி ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சுதீந்தரா குல்கர்னிமீது கறுப்பு மை வீசி தாக்குதல் நடத்தியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

குல்கர்னி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்வானியும் இதைக் கடுமையாக விமர்சித்திருந்தார். சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான `சாம்னா'வில், ``குல்கர்னியும், மும்பையில் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப்பும் ஒன்றுதான்'' என்று எழுதப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ``குல்கர்னிக்கு எதிரான எங்களது போராட்டத்தால் மாநிலத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டதாக முதல்வர் சொல்கிறார். அவர் மகாராஷ்டிரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. குல்கர்னியின் முகத்தில் கறுப்பு சாயம் பூசியது, மகாராஷ்டிராவின் நலனுக்காகத்தான். அதை பா.ஜ.க ஆதரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு உபதேசம் செய்கிறது. முதலில், நாட்டுப்பற்றுடன் தொடர்புடைய ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்னை ஆகியவை பற்றி பா.ஜ.க பேசட்டும். எங்கள் கட்சியின் தேசப்பற்று சார்ந்த நடவடிக்கைகள் பிடிக்காவிட்டால் மகாராஷ்டிர மாநில கூட்டணி அரசிலிருந்து பா.ஜ.க வெளியேறலாம்'' என்றார் காட்டமாக.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

தொடர்ந்து சண்டைகள் நடந்துவந்தாலும், கூட்டணி ஆட்சியில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இவ்விரு சம்பவங்களைத் தொடர்ந்து, வேறெந்த சம்பவத்திலும் சிவசேனாவும் பா.ஜ.க-வும் பெரிய அளவில் முட்டி மோதிக்கொள்ளவில்லை. என்றாலும், இரு கட்சிகளுக்குமிடையே முன்னர் இருந்த அளவுக்கு நட்புறவு இல்லை என்றே சொல்லப்பட்டது. தொடர்ந்து 2018 ஜனவரியில், ``2019 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டியிடும்'' என்று அறிவித்தார் உத்தவ் தாக்கரே. இதையடுத்து, ``இது சிவசேனாவுக்குத்தான் பின்னடைவு'' என்று சொல்லி கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது பா.ஜ.க. 2019 பிப்ரவரியில், பா.ஜ.க மேலிடத்திலிருந்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மீண்டும் பா.ஜ.க-வுடன் கைகோத்தது சிவசேனா. அந்தச் சமயத்தில் பா.ஜ.க தலைவராகச் செயல்பட்ட அமித் ஷா முன்னிலையில் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், ``ஆட்சிப் பொறுப்பு மற்றும் பதவிகளில் இரு கட்சிகளுக்கும் சமமான பங்குண்டு'' என்று உறுதியளித்தார்.

கூட்டணியில் முறிவு!

2019 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க - சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி கண்டன. வெற்றிக்குப் பின்னர் பேசிய பட்னாவிஸ், ``இரண்டரை வருடம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத்தருவதாக நாங்கள் சொல்லவேயில்லை'' என்றார். `ஆட்சிப் பொறுப்பில் சம பங்கு என்று சொல்லிவிட்டு, இப்போது பேச்சை மாற்றுகிறார்கள்' என்று கொந்தளித்தனர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், பா.ஜ.க-வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறியது சிவசேனா. அதுமட்டுமல்லாமல் தங்கள் கட்சியோடு கருத்தியல் முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.

சிவசேனா
சிவசேனா
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை நகரம் அமைந்திருக்கும் மகாராஷ்டிராவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றிருந்த பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தது சிவசேனா.

தொடர்ந்து, சிவசேனா ஆட்சியமைத்த பிறகும் இந்த மோதல்கள் நடந்துகொண்டேயிருந்தன. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில், முதல்வர் உத்தவ் தாக்ரேவின் மகனும், மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்ரேவின் பெயர் அடிபட்டது. இது போன்ற வதந்திகளை பா.ஜ.க-தான் திட்டமிட்டு பரப்புகிறது என சிவசேனா தொண்டர்கள் கொந்தளிந்தனர்.

உத்தவ் தாக்ரே, ஆதித்யா தாக்ரே
உத்தவ் தாக்ரே, ஆதித்யா தாக்ரே
ANI
எனது அரசியல் வளர்ச்சி பிடிக்காத சிலர் இது போன்ற குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் மோசமான அரசியல் செய்கின்றனர். நான் எந்த சினிமா பிரபலத்துடனும் இதுவரை தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்திருந்ததே இல்லை.
- என்று விளக்கமளித்தார் ஆதித்யா தாக்ரே

இதையடுத்து, பாலிவுட் நடிகை கங்கனா தொடர்ந்து சிவசேனா அரசை தாக்கிப் பேசிவந்தார். இதன் பின்னணியிலும் பா.ஜ.க-தான் இருக்கிறது என்றார்கள் சிவசேனா கட்சியினர். அதை உறுதி செய்யும் வகையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் கங்கனாவை ஏகத்துக்குப் புகழ்ந்து தள்ளினர். பதிலுக்கு கங்கனாவின் மும்பை அலுவலகம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லி, பாதி அலுவலகத்தை இடித்துத் தள்ளியது மாநகராட்சி.

அமலாக்கத்துறை ரெய்டுகள்!

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி-யுமான சஞ்சய் ராவத்தின் மனைவியிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், `பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகம்' என்று பேனர் வைத்தனர் சிவசேனா தொண்டர்கள்.

இவ்வாறு இரு கட்சிகளும் மோதிக்கொண்டிருந்த நிலையில், சிவசேனாவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க பக்கம் சென்றுவிட்டார். எனவே, சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க பக்கம் சென்றிருக்கும் ஷிண்டே, `பா.ஜ.க-வோடு சிவசேனா கூட்டணி அமைத்தால், மீண்டும் கட்சிக்குத் திரும்பத் தயார்' என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், சிவசேனா அதற்குத் தயாராக இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

சிவசேனா Vs பா.ஜ.க
சிவசேனா Vs பா.ஜ.க

``உத்தவ் தாக்ரே, பா.ஜ.க தனது கட்சிக்கு தூரோகம் செய்துவிட்டதாக நினைக்கிறார். எனவே, 30 ஆண்டுகளாக கூட்டணியிலிருந்த சிவசேனாவும், பா.ஜ.க-வும் இனி கூட்டணி சேர வாய்ப்பேயில்லை. அப்படியே கூட்டணி அமைத்தாலும், அது பல ஆண்டுகள் கழித்தே நிகழும்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism