Published:Updated:

உறுதியான பி.ஜே.பி - ஜே.ஜே.பி கூட்டணி! - ஹரியானாவில் மீண்டும் அரியணை ஏறும் மனோகர் லால் கட்டார்

ஹரியானா மாநிலத்தில் யார் ஆட்சியமைக்கலாம் என்கிற இழுபறி நீடித்து வந்த நிலையில், ஜே.ஜே.பி-யின் ஆதரவுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஹரியானா பி.ஜே.பி ஆதரவு கட்சிகள்
ஹரியானா பி.ஜே.பி ஆதரவு கட்சிகள்

ஹரியானாவில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில், பா.ஜ.க 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் சுயேச்சைகள் 6 மற்றும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கே யார் ஆட்சியமைப்பது என்ற இழுபறி நிலவியது.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஜே.ஜே.பி கட்சி, `ஹரியானாவின் கிங் மேக்கராக நாங்கள் உள்ளோம். எங்களுக்கு முதல்வர் பதவி வழங்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்’ என அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கூறினார். முதலில் ஜே.ஜே.பி-யுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதாகக் கூறப்பட்டது. அப்படி இரு கட்சிகளும் இணைந்தாலும் அங்கு ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், பா.ஜ.க-வுக்கு இன்னும் ஆறு இடங்கள் கிடைத்தால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், இரு தேசிய கட்சிகளும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் தீவிரம் காட்டிவந்தன. இதில் முந்திக்கொண்ட பா.ஜ.க, அனைத்து சுயேச்சை எம்.எல்.ஏ -க்களையும் தங்கள் பக்கம் இழுத்து, உடனடியாக அனைவரையும் டெல்லி அழைத்துச்சென்றது.

சுயேட்சை எம்.எல்.ஏ
சுயேட்சை எம்.எல்.ஏ
Twitter/@PadmajaJoshi

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை டெல்லியில் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் பல உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் பேசிய அமித் ஷா, ``மக்களின் ஆணையை மனதில் கொண்டு பா.ஜ.க, ஜே.ஜே.பி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஒரு அரசை அமைக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் முதல்வராகவும், ஜே.ஜே.பி-யைச் சேர்ந்தவர் துணை முதல்வராகவும் இருப்பார்” என்று அறிவித்தார்.

`சராசரி சொத்துமதிப்பு ரூ.18 கோடி; 93% கோடீஸ்வரர்கள்!' - `ரிச்'சான ஹரியானா எம்.எல்.ஏ-க்கள்

இதனால் ஹரியானாவில் பா.ஜ.க ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களின் 40 தொகுதி, ஜே.ஜே.பி-யின் 10 தொகுதி மற்றும் சுயேச்சைகளின் 6 தொகுதி என மொத்தம் 56 தொகுதிகளுடன் வலுவான கூட்டணியில் ஹரியானாவில் மீண்டும் அரியணை ஏறவுள்ளார், மனோகர் லால் கட்டார். துணை முதல்வராக ஜே.ஜே.பி-யின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்கவுள்ளார். கட்சி தொடங்கிய ஒரே வருடத்தில் துஷ்யந்த் துணை முதல்வராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துஷ்யந்த் - கட்டார்
துஷ்யந்த் - கட்டார்

எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுக் கடிதங்களுடன் மனோகர் லால் கட்டார், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.``ஹரியானாவில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது, முன் எப்போதும் இல்லாத ஒன்று. ஒரு முறை ஆட்சி செய்த அரசை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுப்பது இந்தக் காலத்தில் மிகவும் அரிதான ஒன்று. பா.ஜ.க மீண்டும் மிகப் பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது” எனப் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.