Published:Updated:

`குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித் விரோதிகள்!' - ஜே.பி. நட்டா #CAA

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

ஜே.பி. நட்டா
ஜே.பி. நட்டா

மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதிலிருந்தே அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. வடகிழக்கில் தொடங்கிய போராட்டம், மெள்ள நாடு முழுவதும் பரவியது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுமே தங்களுடைய மாநிலத்தில் என்.ஆர்.சி மேற்கொள்ள மாட்டோம் என அறிவித்திருக்கின்றன.

CAA
CAA

கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த என்.பி.ஆர் பணிகளை அந்த அரசுகள் நிறுத்திவைத்துள்ளன. ஆனால் பா.ஜ.க தலைமையோ, குடியுரிமை திருத்தச் சட்டம் - என்.பி.ஆர் பணிகளை மேற்கொள்வதில் உறுதியாக உள்ளது. சமீபத்தில், என்.பி.ஆர் பணிகளுக்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் - என்.ஆர்.சி -க்கும் சம்பந்தமில்லை எனப் பிரதமர் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், பிரதமரின் கருத்து உள்துறை அமைச்சரின் கருத்துடன் முரண்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. என்.ஆர்.சி -யும் குடியுரிமை திருத்தச் சட்டமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்று அமித் ஷா பலமுறை பேசியுள்ளதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. பின்னர் அமித் ஷா, பிரதமரின் கருத்துதான் சரி என விளக்கம் அளித்தார்.

அரசியல் களத்தில் மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பது ரஜினியா, கமலா? - ஒரு விரிவான அலசல்

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித் விரோதிகள் எனப் பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜே.பி. நட்டா, "புதிய சட்டத்தால் அதிகம் பயன்பெறக்கூடியவர்கள் தலித்துகளே. இதை எதிர்க்கும் தலித் தலைவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொணர வேண்டும்.

ஜே.பி. நட்டா
ஜே.பி. நட்டா

யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக இந்தச் சட்டம் கிடையாது. புதிய குடியுரிமைச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி பொய் பிரசாரம் செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்குவதே புதிய சட்டம்" என்றார்.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், ஜே.பி. நட்டா இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.