அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் மாணவியின் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவரின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பாஜக-வின் மாணவர் அமைப்பான `ஏ.பி.வி.பி' இன்று டெல்லியிலுள்ள பழைய தமிழ்நாடு இல்லம் முன்பு, தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு வந்தவுடன் அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏறத்தாழ 100 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவ அமைப்பினர், பின்னர் ராணுவத்தினரின் பாதுகாப்புவேலியைத் தகர்த்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸார் ஏ.பி.வி.பி மாணவர்களைக் கைதுசெய்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
அதையடுத்து, `மாணவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த அத்துமீறல்கள் தொடர்ந்தால் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தத் தயங்க மட்டோம்' என ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருவதால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் தங்கியிருக்கின்றனர். அதனால் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது.