நவம்பர் 22-ம் தேதி நள்ளிரவு நடந்த அதிகார அரசியல் வேட்டையில் ஜனநாயகத்தை அப்பட்டமாகக் கொலைசெய்திருக்கிறது பா.ஜ.க.

மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 145 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலையில், 105 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள பா.ஜ.க-வால் கூட்டணிக் கட்சியான சிவசேனாவைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. 56 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியுடன் அமைச்சரவையிலும் 50:50 பங்கு கேட்டார். ஆனால், `105 இடங்களைப் பெற்றிருக்கும் கட்சியான எங்களுக்குத்தான் முதல்வர் பதவி’ என்று கறாராக மறுத்துவிட்டது பி.ஜே.பி. விளைவு, 20 ஆண்டுகளாக நீடித்த பா.ஜ.க - சிவசேனா உறவு முறிந்தது.

இதையடுத்து, தன்னுடைய பரம வைரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டுசேரும் முயற்சிகளில் இறங்கியது சிவசேனா. பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணிக்குத் தான் மக்கள் பெரும்பான்மையைத் தந்துள்ளனர் இந்தத் தேர்தலில். இருந்தும் பதவி வெறியோடு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது சிவசேனா. சபாநாயகர் பதவிக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே போட்டி எழுந்ததால், இறுதி முடிவு எட்டப்படவில்லை. யாரும் ஆட்சியமைக்க முடியாத சூழலில், ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரைத்தார் ஆளுநர் பக்த்சிங் கோஷ்யாரி. அதன்படி நவம்பர் 12-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. நவம்பர் 22-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, உத்தவ் தாக்கரேதான் அடுத்த முதல்வர் என்று கூட்டணிக்குள் முடிவானது. இதை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் அறிவித்தார். ஆனால், அடுத்த 12 மணி நேரத்தில் அங்கு நடந்தது நாடே எதிர்பாராதது. `ஜனநாயகப் படுகொலை’ என்று அதை விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சில சுயேச்சைகள், உதிரிக்கட்சிகளின் ஆதரவு இருந்தாலும் 145 என்கிற மேஜிக் நம்பர் பா.ஜ.க-வுக்குக் கிடைக்கவில்லை. இதனால், 54 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க பா.ஜ.க முடிவுசெய்தது. சரத் பவாரின் அண்ணன் மகனும், என்.சி.பி-யின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அஜித் பவாரை வளைத்த பா.ஜ.க, அவருக்கு துணை முதல்வர் பதவி ஆசைகாட்டி வழிக்குக் கொண்டுவந்தது என்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலக் கூட்டுறவு வங்கியில் 25,000 கோடி ரூபாய் மோசடி புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஜித் பவார்மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்துள்ளது. இதைவைத்துதான் பா.ஜ.க தேர்தல் பிரசாரமே செய்தது. இப்போது அதே அஜித் பவாருடன் கைகோத்துள்ளது பா.ஜ.க.

நவம்பர் 22-ம் தேதி இரவு அமித் ஷாவிடம் பேசிய அஜித் பவார், பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பதாக உத்தரவாதம் அளித்தார். இரவு 11:55 மணிக்கு அமித் ஷாவிடம் பேசிய மகாராஷ்டிர பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ‘விடிவதற்குள் பதவியேற்பு விழாவை வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிவசேனா, என்.சி.பி கட்சிகள் பிரச்னை செய்ய ஆரம்பித்து விடும்’ என்று ஆலோசனை வழங்குகிறார்.

மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைத் தொடர்புகொண்ட அமித் ஷா அலுவலகம், ஆளுநரின் டெல்லி பயணத்தை ஒத்திவைக்கும் படியும், ஜனாதிபதி ஆட்சியை ரத்துசெய்வதற்கான பரிந்துரையை உடனடியாக அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டது. அதன்படி நள்ளிரவு 2 மணிக்கு அனுப்பப்பட்ட பரிந்துரையை ஏற்ற மத்திய உள்துறை அமைச்சகம், பிரதமருக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அமைச்சரவையைக் கூட்டாமலேயே மகாராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சியைத் திரும்பப் பெறும் பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பியது. விடியற்காலை 5:47 மணிக்கு ஜனாதிபதி ஆட்சியை ரத்துசெய்து குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவு பிறப்பித்தது. காலை 8 மணிக்கு மகாராஷ்டிர முதல்வராக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர். மகாராஷ்டிர மக்கள் தூங்கி எழுவதற்குள் இவ்வளவும் நடந்து முடிந்துவிட்டன.

நள்ளிரவு நடந்த இந்தக் கலகத்தில் தங்கள் கட்சியே இரண்டாக உடைந்துள்ளதை தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.க-வின் இந்த ‘அட்டாக்’கால் நிலைகுலைந்த சரத் பவார், ‘பா.ஜ.க-வுக்கு எந்தச் சூழலிலும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை. அஜித் பவாரின் செய்கைகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என அறிவித்தார். என்.சி.பி கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி யிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்டு, ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டார். விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரம் குறித்த வழக்கு, நீதிபதி ரமணா முன்பு நவம்பர் 24 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரிடம் பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் கொடுத்த பட்டியலைக் கேட்டிருக்கிறார் நீதிபதி. அதேபோல் ஆளுநர் தரப்பிலிருந்து மத்திய அரசுக்குக் கொடுத்த கடிதத்தையும் சமர்ப்பிக்கச் சொன்னார். அஜித் பவார் கொடுத்த பட்டியல்தான் இப்போது மத்திய அரசுக்கு தலைவலியாக மாறிவிட்டது என்கிறார்கள். காரணம், நவம்பர் 20-ம் தேதி அன்று சரத் பவார் தலைமையில் அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மும்பையில் நடந் துள்ளது. அப்போது வருகைதந்த எம்.எல்.ஏ-க்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளனர். அந்தப் பட்டியலைத்தான் ‘ஆதரவு எம்.எல்.ஏ-க் கள்’ என்று அஜித் பவார் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார். இதுவும் இப்போது சிக்கலாகிவிட்டது. அதேபோல் ‘இரவுக்குள் ஆளுநரின் ஒப்புதல் பெற்று, உள்துறை அமைச்ச கத்தின் கடிதத்தில் நள்ளிரவு 2 மணிக்குமேல் ஜனாதிபதி எப்படிக் கையெழுத் திட்டார்?’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா முன்பு வாதாடிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷரத் மேத்தா, “யாருக்காக ஆஜராகி யுள்ளேன் என எனக்கே தெரியவில்லை. எனக்கு சம்மன் வந்தது. நீதிமன்றம் வந்துவிட்டேன்” என்று கூற, நீதிபதி கடுப்பாகிவிட்டார். அதற்குப் பிறகுதான் ஆளுநரிடம் கொடுத்த பட்டியலை நவம்பர் 25-ம் தேதி காலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று கடுமையாகச் சொல்லியிருக்கிறார் நீதிபதி. மொத்தம் 52 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு சரத் பவாருக்கு இருப்பதாக என்.சி.பி கூறியது. அதுவே உண்மையாகவும் ஆகிவிட்டது.

ஒரே இரவில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, `அதைத் தக்கவைத்துக்கொள்வது சிரமம்’ என்கி றார்கள் அரசியல் பார்வையாளர்கள். 1975-ம் ஆண்டில் மத்திய அமைச்சரவையைக் கூட்டாமலேயே தன்னிச்சையாக எமர்ஜென்சியை அமல்படுத்தும் உத்தரவை, அரசாங்கப் பரிவர்த்தனை விதிகள் சட்டப்பிரிவு 12-ஐப் பயன்படுத்தி அறிவித்தார் இந்திரா காந்தி. அதே சட்டப்பிரிவைத்தான், தற்போது மோடியும் பயன் படுத்தியுள்ளார். அதாவது, அமைச்சர வையைக் கூட்டாமலேயே மகாராஷ்டிரத்தில் ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக்கொள்ளும்படி ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்துள்ளார். அதை ஏற்று ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சியை ரத்துசெய்துள்ளார்.

மறுபுறம் சரத் பவார், அஜித் பவார் ஆகியோருக்கு இடையிலான ‘பவர் வார்’ என்றும் இதை வர்ணிக்கிறார்கள். அஜித் பவார், கட்சியின் அடுத்த தலைவர் எனும் அளவுக்கு வளர்ந்தவர். இவரால் பல தலைவர்கள் கட்சியைவிட்டு விலகியிருக் கிறார்கள், ஒருகட்டத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் வளர்ச்சிக்கே தடையானார் அஜித். ஆனாலும், அமைதிகாத்தார் சரத் பவார். ‘எதிரி தவறு செய்யும்போது அமைதி யாக இருங்கள்’ என்று அடிக்கடி சொல்வார் சரத் பவார். அந்த அமைதிதான் இன்று அஜித் பவாரை கட்சியைவிட்டுக் காலிசெய்யும் நாடக மாக அரங்கேறியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

இது, அறுபதாண்டு அரசியல்வாதியான சரத் பவாருக்கான சவால். அவர் இப்போதுதான் தன் ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆதரவளிப்பதாக அஜித் பவார் அளித்துள்ள ஆதரவுக் கடிதங்கள் போலியானவை என நிரூபிக்க, தாக்கரேவும் சரத் பவாரும் கைகோத்துள்ளனர். சூழலைப் பார்த்தால், பின்வாசலில் சிம்மாசனத்தைப் பிடித்த பா.ஜ.க-வின் ஆட்சிக்கு விரைவில் சிக்கல் எழலாம்.

நள்ளிரவில் புதைக்கப்பட்ட ஜனநாயகம் உயிர்த் தெழ வேண்டும் என்பதே தேசத்தின் எதிர்பார்ப்பு.