பாஜக-வின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, ``மேற்கு வங்கத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல. ஆட்சியாளர்களின் சட்டமே இங்கு நடக்கிறது" என ஆளும் மம்தா அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்குச் சென்றிருந்த நட்டா, கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் நாகரிக் சம்மேளனத்தில் நேற்று கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நட்டா, ``இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல. ஆட்சியாளர்களின் சட்டமே இங்கு நடக்கிறது. இதுதான் இங்குள்ள கொள்கை. பாஜக-வைத் தவிர யார் இதை எதிர்த்து போராடுவார்கள். மேலும் பாஜக மட்டுமே இதில் வெல்லும். 2014-க்கு முன்பு இந்தியா எப்படி இருந்ததோ, அதேபோல்தான் ஊழல், மோசடி என மேற்கு வங்கத்தின் நிலை தற்போது உள்ளது" என மம்தா அரசை சாடினார்.

மேலும் தொடர்ந்து பேசிய நட்டா, ``கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் நிலை மேம்பட்டிருக்கிறது. அதில் அரசியல் பணிக்கான புதிய கலாசாரத்தை பிரதமர் மோடி கொண்டுவந்திருக்கிறார். நாடு மாறுகிறது என மக்கள் என்னிடம் கூறும்போதெல்லாம், இல்லை மாறிவிட்டது என்றுதான் கூறுகிறேன். புள்ளிவிவரங்களே அதை நிரூபிக்கின்றன. அதனால்தான் மேற்கு வங்கத்தைப் பற்றி நான் கவலைகொள்ளவில்லை. நிச்சயம் இங்கேயும் மாற்றம் வரும்" என்று கூறினார்.
