Published:Updated:

ஜி.கே.வாசனை எம்.பி.யாக்கும் பி.ஜே.பி... பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்
எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன்

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி-க்கள், மாவட்டச் செயலாளர்கள் என அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் பலரும் ராஜ்யசபா எம்.பி கனவில் இருந்த நிலையில், ராஜ்யசபா எம்.பி-யாகும் வாய்ப்பு ஜி.கே.வாசனுக்குக் கிடைத்துள்ளது.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. பா.ஜ.க-வும் இடம்பெற்றுள்ள இந்தக் கூட்டணியில் இருந்துதான் 2019-ல் மக்களவைத் தேர்தலை த.மா.கா சந்தித்தது. தஞ்சாவூர் தொகுதி த.மா.கா-வுக்குத் தரப்பட்டு என்.ஆர்.நடராஜன் போட்டியிட்டார். அவர் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றார்.

காங்கிரஸ் பாரம்பர்யத்திலிருந்து வந்தவரும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவருமான த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், கடந்த மக்களவைத் தேர்தலிலிருந்தே பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருந்துவருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் திடீரெனச் சந்தித்தார். அதையடுத்து, த.மா.கா-வைக் கலைத்துவிட்டு பா.ஜ.க-வில் ஜி.கே.வாசன் இணையப்போகிறார் என்ற செய்தி பரபரப்பைக் கிளப்பியது. `காங்கிரஸ் பாரம்பர்யத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன், மதவாதக் கட்சியான பா.ஜ.க-வில் சேருவதா...’ என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், அந்தச் செய்தியை மறுத்த ஜி.கே.வாசன், பா.ஜ.க-வில் தான் இணையப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆனாலும், அதற்குப் பின்னரும் பா.ஜ.க-வில் த.மா.கா இணையப்போகிறது என்ற செய்திகள் அரசல்புரசலாக வந்து கொண்டிருந்தன. பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பா.ஜ.க-வுக்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க-வை பலப்படுத்துவதற்குப் பல்வேறு வியூகங்களை வகுத்துவரும் அமித் ஷா, பா.ஜ.க-வில் ஜி.கே.வாசனை இணைத்து, அவரை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவந்தது.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

இதற்கிடையில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் பதவிக்கு ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உட்பட ஏராளமான பெயர்கள் டெல்லிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகச் சில மாதங்களுக்கு முன்பாகச் செய்தி பரபரத்தது. அதன் பிறகு அது குறித்து எந்தப் பேச்சும் எழவில்லை. இந்நிலையில்தான், ராஜ்ய சபா எம்.பி பதவிக்குப் போட்டியிட அ.தி.மு.க-வின் சீனியர்களான கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பெயர்களை அ.தி.மு.க-தலைமை அறிவித்துள்ளது. பி.ஜே.பி தலைமையின் அழுத்தம் காரணமாகவே ஜி.கே.வாசனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனுக்கு டெல்லி அரசியல் நன்றாகத் தெரியும். மேலும், டெல்டா பகுதியில் செல்வாக்கு உடையவர். காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்கள் அறிந்தவர். எனவே, பி.ஜே.பி. மாநிலத் தலைவர் பதவிக்கு அவர் ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருப்பார் என்று நினைத்தே பி.ஜே.பி தலைமை அவருக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனால் த.மா.கா விரைவில் பி.ஜே.பியுடன் இணைக்கப்படும் என்ற பேச்சு மீண்டும் வேகமெடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்மையில் மூன்றில் ஒரு சீட், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் ஏதாவது ஒரு கட்சிக்கே ஒதுக்கப்படும் என்றே கூறப்பட்டு வந்தது. அ.தி.மு.க அரசு நீடிப்பதற்குப் பலவிதங்களிலும் உதவிய பி.ஜே.பிக்கே அந்த சீட் ஒதுக்கப்படுமென்றே பலரும் நம்பி வந்தனர். ஆனால், இப்போது ஜி.கே.வாசனுக்குத் தரப்பட்டுள்ளது. பி.ஜே.பி.க்குத் தருவதாக ஒப்புக்கொண்ட சீட்டையே வாசனுக்குத் தந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஏனெனில் இந்த சீட்டைக் கைப்பற்ற தே.மு.தி.க-வும் பெருமுயற்சி செய்தது. இது குறித்து தே.மு.தி.க பொருளாளரான பிரேமலதா பகிரங்கமாகவே பேசிவந்தார். ஆனால், தேர்தல் உடன்பாட்டில் இது தொடர்பான எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை என்று அ.தி.மு.க தரப்பில் பதில் தரப்பட்டது. அத்துடன், வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்கள் தரப்படும் என்ற வாக்குறுதியை அளித்து தே.மு.தி.க-வை அ.தி.மு.க தரப்பு அமைதிப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மோடியுடன் ஜி.கே.வாசன்
மோடியுடன் ஜி.கே.வாசன்
`எப்படித் தேர்வானார் ஜி.கே.வாசன்?' - அதிருப்தியில் தே.மு.தி.க; கொதிப்பில் ஏ.சி.எஸ்.

ஜி.கே.வாசன் ராஜ்யசபா எம்.பி ஆவது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இது குறித்து த.மா.கா வட்டாரத்தில் கேட்டபோது, `அது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’ என்கின்றனர்.

ஆனால், மிக விரைவிலேயே மத்திய அமைச்சராகவும் பி.ஜே.பி.க்கு மாநிலத்தலைவராகவும் அவர் நியமிக்கப்படுவார் என்பதே எல்லோருடைய கணிப்பாகவும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு