காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற `ஐடியாஸ் ஆஃப் இந்தியா' எனும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். இந்த மாநாட்டில் பா.ஜ.க-வை தாக்கி பேசிய ராகுல்காந்தி, ``இந்தியா இப்போதைக்கு நல்ல இடத்தில் இல்லை. நாடு முழுவதும் பா.ஜ.க மண்ணெண்ணெயை ஊற்றி வைத்திருக்கிறது" என்றும், ரஷ்யா-உக்ரைன் குறித்துப் பேசுகையில், ``தயவு செய்து இரண்டையும் பாருங்கள், உக்ரைனில் என்ன நடக்கிறது , லடாக்கில் என்ன நடக்கிறது?" என்று கூறியிருந்தார்.

ராகுலின் இத்தகைய பேச்சுக்கு, பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளரான கௌரவ் பாட்டியா கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய கௌரவ் பாட்டியா, ``அரசியலில் ராகுல்காந்தியின் நிலைமையானது, புத்தகங்களைப் படிக்காத மற்றும் நர்சரியில் கூட தேர்ச்சி பெறாத ஒருவர், பி.எச்டி தேர்வில் கலந்து கொள்ள விரும்புவதைப் போன்றது. ராகுல்காந்திக்கு வெளியுறவுத்துறையின் A,B,C,D கூட தெரியாது, ஆனால், இடைவிடாது கருத்து தெரிவித்து வருகிறார். ராகுல்காந்தி, உக்ரைனின் நிலைமையை லடாக்குடன் ஒப்பிட்டுக் கூறியது, அவருக்கு இந்தியாவின் பலம் அல்லது வெளிநாட்டு விவகாரங்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதை நிரூபிக்கிறது" எனக் கூறினார்.
