Published:Updated:

``இரண்டாவது இடத்தைப் பிடிக்க நினைக்கும் பாஜக யுக்தி எடுபடாது'' - திருமாவளவன் கருத்தின் பின்னணி என்ன?

திருமாவளவன்

திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில் உடனடியாக எதிர்ப்புக் கிளம்பியது.

``இரண்டாவது இடத்தைப் பிடிக்க நினைக்கும் பாஜக யுக்தி எடுபடாது'' - திருமாவளவன் கருத்தின் பின்னணி என்ன?

திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில் உடனடியாக எதிர்ப்புக் கிளம்பியது.

Published:Updated:
திருமாவளவன்

``திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் இந்துச் சமூகத்துக்கு எதிரானவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க பா.ஜ.கவினர் நினைக்கிறார்கள். திமுக அரசு ஊழல் செய்கிறது என்றெல்லாம் அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இதெல்லாம் அவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான ஒரு அரசியல் யுக்தி. ஆனால், இங்கே அது எடுபடாது'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்த கருத்துகள் மீண்டும் தமிழக அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியிருக்கிறது. பாஜகவுக்கு எதிராக தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை திருமாவளவன் முன்வைத்துவரும் நிலையில், ``எங்கள் கட்சியின் வளர்சியைக் கண்டு பயப்படுகிறார்கள். அதனால்தான் பதறுகிறார்கள்'' என பதிலடி கொடுத்துவருகிறது பாஜக.

கொடியேற்றும் திருமாவளவன்
கொடியேற்றும் திருமாவளவன்

கடந்த 27-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் குருவாரெடியூர், பட்லூர், அந்தியூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்து நிர்வாகிகளைச் சந்தித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் செய்தார். தொடர்ந்து, கள்ளிப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதுதான் மேற்கொண்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் திருமாவளவன். மேலும் பேசிய அவர், ``திமுக தலைமையிலான கூட்டணிதான் இங்கே கூட்டணியாக இருக்கிறது. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி இல்லை. அது தேர்தலோடு கலைந்துவிட்டது, சிதறிவிட்டது. இனி அவர்கள் அந்தக் கூட்டணியை உருவாக்குவதற்கே அரும்பாடு, பெரும்பாடு படவேண்டும்'' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில் உனடியாக எதிர்ப்புக் கிளம்பியது.

இந்தநிலையில், திருமாவளவனின் கருத்து குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்..,

``இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில், பிரதானமாக உள்ள இரண்டு கட்சிகளில் ஒன்றைக் காலிசெய்துவிட்டு அந்த இடத்துக்கு வருவதைத்தான் பாஜகவினர் யுக்தியாகவே வைத்திருக்கின்றனர். முதலில், முதன்மையாக உள்ள கட்சிக்கு மாற்றாக அல்லது எதிராக தாங்கள்தான் இருக்கிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்க நினைப்பார்கள். தமிழ்நாட்டிலும் தற்போது அந்த வேலையைத்தான் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திமுக Vs அதிமுக என்றிருக்கும் தமிழ்நாட்டு அரசியலில், திமுக Vs பாஜக என்கிற தோற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அதற்கு அதிமுகவை பலவீனப்படுத்துகிறார்கள். சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுகதான். ஆனால், இவர்கள் போராட்டங்களை முன்னெடுப்பது போலவும் ஆக்டிவ்வாக இருப்பது போலவும் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், பாஜக நாங்கள்தான் இரண்டாவது இடம் என்று சொல்வதும் திமுகவுக்கு நாங்கள்தான் போட்டி என்று சொல்வது சூப்பர் ஸ்டாருக்கு நான்தான் போட்டி என பவர் ஸ்டார் சொல்வது போலானதுதான். இவர்களின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதே உண்மை. அதைத்தான் எங்கள் தலைவரும் கூறியிருக்கிறார்'' என்றார்.

வன்னி அரசு
வன்னி அரசு

அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரத்திடம் இந்தக் கருத்துக்களை முன்வைத்தோம்.,

`` இரண்டாவது இடத்தைப் பிடிக்க பாஜக மட்டுமல்ல தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சி வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். ஜனநாயக நாட்டில் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், இரண்டாவது இடத்தில் அதிமுக வலுவாக இருக்கிறது என்பது கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட நிரூபணமாகியிருக்கிறது. தொடர்ச்சியாக, பத்தாண்டு ஆட்சி செய்த பிறகும் 75 தொகுதிகளில் வெற்றிவாகை சூடி பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது அதிமுக. இதுவரை எந்தத் தேர்தலிலும் எந்த இடத்திலும் அதிமுக மூன்றாவது இடத்துக்கு வரவில்லை. அதனால், இதுபோன்ற விமர்சனங்கள் கற்பனையான ஒன்று. அடுத்ததாக திமுக கூட்டணிதான் கூட்டணியாக இருக்கிறது. அதிமுக கூட்டணியே இல்லை என்று திருமாவளவன் கூறுவது வியப்புக்குரிய சிரிப்புக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது.

திமுக கூட்டணியில் இருக்கும்போதுதான் இவர்களின் கட்சிக்கொடியை ஏற்றமுடியாமல் போனது. இவர்களின் தலைவர்களை அமைச்சர்கள் நிற்கவைத்துப் பேசுகிற காட்சிகள் வெளியானது. எது நடந்தாலும் தட்டிக்கேட்கவே மாட்டோம் என்பதுதான் கூட்டணி என்றால் அப்படிப்பட்ட கூட்டணியே தேவையற்றது. கூட்டணி வைத்துவிட்டோம் எதையும் பேசமாட்டோம் என அடிமையாக இருப்பதையே பெருமையாக நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார் திருமாவளவன்'' என்கிறார் அவர்.

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் இதுகுறித்துப் பேசினோம்,

``கடந்த சில மாதங்களாக தமிழக மக்களிடம் பாஜகவுக்குப் பெருகிவரும் ஆதரவைக்கண்டு திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியில் இருப்பவர்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான், ராட்சசன், பேய், பிசாசு என்றெல்லாம் பயந்து அலறிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரண்டாவது இடத்துக்கு வந்துவிடுவோம் என்கிற பயத்தில் திருமாவளவன் தற்போது இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆகமொத்தம், தமிழ்நாட்டில் பாஜக திமுகவுக்கு எதிராக விசுவரூபமெடுத்து வளர்ந்துவருகிறது என்பதை இவர்களுடைய வார்த்தைகளிலிருந்தே புரிந்துகொள்ளமுடிகிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

நாங்கள் இரண்டாவது இடத்துக்கு வருகிறோமோ இல்லையோ, தன்னுடைய கட்சியை முதலிடத்துக்குக் கொண்டுவர திருமாவளவன் நினைக்க வேண்டும். அதைவிடுத்து, முதலிடத்தில் இருப்பவர்களுக்கு ஜால்ரா தட்டுவதுதான், இந்தக் கூட்டணியின் வேலையாக இருக்கிறது. திமுக கூட்டணி ஸ்திரத்தன்மையாக இல்லை. ஆளும்கட்சியாக இருப்பதால், ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்கிற அரசியல் லாபம் கருதிதான் அவர்களின் கூட்டணி இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் மட்டும்தான். அதனால், இவர்களின் கருத்துக்களை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை'' என்கிறார்.