Published:Updated:

`கறுப்பு ஆடுகள் வெளியேறிவிட்டன; அ.தி.மு.க தெளிந்த நீரோடையாகிவிட்டது!' - எடப்பாடி பெருமிதம்

நெல்லை மாவட்டம் தென்காசியில், தாய்க்கழகம் திரும்பிய தொண்டர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து சில கறுப்பு ஆடுகள் வெளியேறிவிட்டதால், அ.தி.மு.க தெளிந்த நீரோடையாகத் தூய்மையடைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க-வில் ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளருமான இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர மாவட்டச் செயலாளரான கல்லூர் வேலாயுதம், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மீண்டும் அ.தி.மு.க-வில் இணையும் விழா தென்காசியில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

தென்காசி விழா
தென்காசி விழா

இதற்காக, சென்னையிலிருந்து விமானம்மூலம் தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் கட்சியினர் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்துசென்றவர்கள் மீண்டும் சேரும்போது எந்த அளவுக்கு மகிழ்ச்சி இருக்குமோ அதே மனநிலையில் இருக்கிறோம். சிலர், பேராசை காட்டி கட்சியை உடைத்து, தி.மு.க-விடம் அடகுவைக்க முயன்றார்கள். ஆனால், நம்மிடம் இருந்து பிரிந்துசென்றவர்கள் எதிரணியினருடன் சேரவில்லை. தற்போது, மீண்டும் இந்த இயக்கத்தில் இணைந்து வலுச்சேர்த்திருக்கிறார்கள்.

தென்காசி விழா
தென்காசி விழா

இப்போது அந்தக் கூடாரமே காலியாகிவிட்டது. 18 எம்.எல்.ஏ-க்களுக்கு ஆசை வார்த்தை கூறி பிரித்தாலும், நீதிமன்றத்திலும் கூட அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.க-வின் ஒரு தொண்டனைக்,கூட தி.மு.க-வால் கொண்டுசெல்ல முடியாது என்பதற்கு உதாரணமாக இந்த விழா நடக்கிறது.

நமது இயக்கத்தில் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு பதவிகளைக் கைப்பற்றியவர்கள், இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டு, இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகியிருக்கிறார்கள். அத்தகைய கறுப்பு ஆடுகள் வெளியேறிவிட்டதால், அ.தி.மு.க தெளிந்த நீரோடையைப் போல மாறிவிட்டது. இந்த இயக்கம் தூய்மையடைந்துவிட்டது.

தென்காசி விழா
தென்காசி விழா

இந்த ஆட்சியைக் கலைத்துவிட தி.மு.க தலைவர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சிக்கிறார். ஆனால், அவரது கனவு ஒருநாளும் நிறைவேறாது. தி.மு.க-வில் அத்தனை அதிகாரமும் ஒரே குடும்பத்தில் இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வில் சாதாரண தொண்டனும் முதல்வராக முடியும். தென்காசியைத் தனி மாவட்ட ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையைப் பலரும் முன்வைக்கிறார்கள். அதை ஏற்று, தனி மாவட்டம் ஆக்கும் திட்டம் பரிசீலனையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணைப்பின் மூலமாக, இந்த மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற இருக்கும் தேர்தலில், வெற்றிக்கனியைக் கைப்பற்றப் பாடுபட வேண்டும்" என்றுபேசினார்.