சினிமா
Published:Updated:

பிரதமரைப் பாதுகாக்கும் புளூ புக் சீக்ரெட்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

பொதுவாக பிரதமர் இவ்வளவு தூரம் காரில் பயணம் செய்வது வழக்கம் இல்லை. சில நிமிடப் பயணங்களுக்கு மட்டுமே கார். மற்றபடி விமானம், ஹெலிகாப்டர்தான்.

ஜனவரி ஐந்தாம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மேம்பாலத்தின்மீது பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த கார் 20 நிமிடங்கள் நின்றது, இந்தியா முழுக்க பரபரப்பான விவாதப்பொருளாகியிருக்கிறது. ‘‘பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் பிரதமரை ஆபத்தில் சிக்க வைத்தது பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசு. பிரதமரை காங்கிரஸ் வெறுக்கிறது. இன்று அவருக்கு ஆபத்து ஏற்படுத்தவும் துணிந்துவிட்டது’’ என்று பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. பெரும் ஆபத்திலிருந்து பிரதமர் தப்பிவிட்டதாகக் கருதி, பா.ஜ.க தலைவர்கள் வழிபாடுகள் செய்கிறார்கள்; போராட்டம் நடத்துகிறார்கள்.

இன்னொரு பக்கம் ‘‘ஒரு பஞ்சாபியாக, பிரதமரைப் பாதுகாக்க நான் உயிரையும் கொடுப்பேன். அவருக்கு ஆபத்தும் ஏற்படவில்லை. பிரதமரைப் பாதுகாப்பதிலும் நாங்கள் குறை வைக்கவில்லை'' என்கிறார் பஞ்சாப் முதல்வர் சன்னி. நடந்த சம்பவம் குறித்து பஞ்சாப் அரசு தனியாகவும், மத்திய அரசு தனியாகவும் விசாரணை நடத்துகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது.

பிரதமரைப் பாதுகாக்கும் புளூ புக் சீக்ரெட்!

பத்தின்டா விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலா மற்றும் ஃபெரோஸ்பூர் சென்றிருக்க வேண்டும். ஆனால், கடுமழை பெய்ததால், ஹெலிகாப்டர் கிளம்ப முடியவில்லை. 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலைமை சீரடையாததால், காரிலேயே செல்ல முடிவெடுத்தார். 110 கி.மீ தூரம்; சுமார் 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். வழியில் பியாரியானா என்ற கிராமத்தில் ஒரு மேம்பாலத்தை பிரதமரின் வாகன அணிவகுப்பு அடைந்தபோது, அங்கே விவசாயிகள் நெடுஞ்சாலையை வழிமறித்துப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். வேறு வழியின்றி பிரதமரின் கார் நிறுத்தப்பட்டது. இதர வாகனங்களும் பிரதமர் அணிவகுப்புக்கு நெருக்கமாக நின்றது, சமீப காலங்களில் எங்கும் நடக்காத அபாயச்சூழல். சுமார் 15 நிமிடங்கள் காரிலேயே காத்திருந்தும் போக்குவரத்து சீரடையாததால், அவரை விமான நிலையத்துக்கே திருப்பி அழைத்துச் சென்றனர் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அதிகாரிகள்.

பொதுவாக பிரதமர் இவ்வளவு தூரம் காரில் பயணம் செய்வது வழக்கம் இல்லை. சில நிமிடப் பயணங்களுக்கு மட்டுமே கார். மற்றபடி விமானம், ஹெலிகாப்டர்தான். அப்படி இருக்கும்போது இவ்வளவு தூரம் காரில் போக முடிவெடுத்தது யார்? அதை ஏன் எஸ்.பி.ஜி அதிகாரிகள் அனுமதித்தனர்? பிரதமர் காரில் செல்கிறார் என்றால், அந்தச் சாலையில் வேறு வாகனங்களோ, மனிதர்களோ குறுக்கிடக்கூடாது. அதைமீறி அங்கு எப்படிப் போராட்டம் நடைபெற்றது? சாலைகளில் எந்தக் குறுக்கீடும் இல்லாதபடி தடுப்பதற்குப் பஞ்சாப் போலீஸ் தவறியது ஏன்? போராட்டம் நடப்பது குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உளவுத்தகவல் வரவில்லையா? பிரதமரின் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு பாதுகாப்பு அதிகாரிகளின் கார்கள் வர வேண்டும். ஆனால், அவர் வாகனத்தையும், உள்ளே மோடி அமர்ந்திருப்பதையும் வீடியோ எடுக்கும் அளவுக்கு அதைத் தனியாக விட்டது ஏன்?

பிரதமரைப் பாதுகாக்கும் புளூ புக் சீக்ரெட்!

இப்படி வரிசையாக எழும் கேள்விகள் அனைத்தும் பஞ்சாப் போலீஸையும், பிரதமரின் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அதிகாரிகளையும் குற்றம் சுமத்துகின்றன. மோடி பயணம் செய்வதற்காக என பிரத்யேகமாக வாங்கப்பட்ட மெர்சிடிஸ் மேபேக், பி.எம்.டபிள்யூ, ரேஞ்ச்ரோவர் போன்ற கார்கள் துப்பாக்கி, வெடிகுண்டு, ஏவுகணை, கண்ணிவெடி போன்ற தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பவை. அதற்கு ஏற்றபடி சென்சார்களும், கூடுதல் கவசங்களும் பொருத்தப்பட்டவை. ஆபத்தான ஒரு சூழலில், டயர்கள் பங்ச்சர் ஆனாலும், வேகம் குறையாமல் இயங்கும் திறன் படைத்தவை. ஆனால், பஞ்சாப்பில் அவர் பயணம் செய்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் கொண்டவை அல்ல! அதில் அவர் பயணம் செய்ய எஸ்.பி.ஜி அதிகாரிகள் ஒப்புக்கொண்டது ஏன் என்பதும் விமர்சிக்கப்படுகிறது. பிரதமர் அணிவகுப்பு வழியில் எங்கும் நிற்கக்கூடாது. ‘‘ஒரு பாலத்தின்மீது அவர் கார் நின்றது இன்னும் அபாயகரமானது. ஒருவேளை அங்கு கண்ணிவெடி புதைக்கப்பட்டு இருந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்’’ என்று கூறுகிறார், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடி. பாதை தடைப்பட்டதும் உடனே பிரதமரின் அணிவகுப்பை அதிகாரிகள் திருப்பியிருக்க வேண்டும். பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பகுதி அது. சமீபகாலமாக அங்கு எல்லை தாண்டிய டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமரை அங்கு நிற்கவைத்து ரிஸ்க் எடுத்திருக்கக்கூடாது.

பிரதமரைப் பாதுகாக்கும் புளூ புக் சீக்ரெட்!

பாதுகாப்புக் குறைபாடுகளால் இந்திரா காந்தியை இழந்தபிறகு, எஸ்.பி.ஜி பிரிவை 1988-ம் ஆண்டு உருவாக்கியது மத்திய அரசு. எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட மத்திய அரசின் போலீஸ் படைகளிலிருந்து எஸ்.பி.ஜி-க்கு ஆள் எடுக்கிறார்கள். இவர்களுக்கு மூன்று கட்ட சோதனை நடத்திச் சேர்க்கிறார்கள். மேற்கத்திய ஸ்டைல் கோட்-டை, கறுப்புக்கண்ணாடியுடன் இவர்கள் பிரதமரைச் சுற்றி இருப்பார்கள். தனி அலைவரிசையில் எஸ்.பி.ஜி அதிகாரிகள் நிகழ்த்தும் உரையாடலை யாரும் ஒட்டுக் கேட்கமுடியாது.

அந்த நேரத்தில், பிரதமர் மற்றும் அவர் குடும்பத்தை மட்டுமே பாதுகாக்கும் பணி இவர்களுக்கு இருந்தது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு எஸ்.பி.ஜி சட்டம் திருத்தப்பட்டது. ‘பதவியிழந்த முன்னாள் பிரதமர் குடும்பத்துக்கும் 10 ஆண்டுகள் எஸ்.பி.ஜி பாதுகாப்பு உண்டு. அதன்பிறகு அவர்களுக்கு இருக்கும் ஆபத்துச் சூழலைப் பொறுத்து இன்னும் 5 ஆண்டுகள் பாதுகாப்பு நீட்டிக்கப்படும்’ என்று திருத்தம் வந்தது. சோனியா காந்தி மற்றும் குடும்பத்தினர் இதன்படி 29 ஆண்டுகள் பாதுகாப்பு பெற்றனர்.

2019 நவம்பரில் மீண்டும் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. இதன்படி, பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கும் உறவினர்களுக்கு மட்டுமே எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கும். முன்னாள் பிரதமர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே எஸ்.பி.ஜி பாதுகாப்பு. இதன்படி சோனியா குடும்பத்தினர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பாதுகாப்பை இழந்தனர்.

எஸ்.பி.ஜி-யின் ஓராண்டு பட்ஜெட் ரூ.600 கோடி. சுமார் 3,000 பேர் இருக்கிறார்கள். இவ்வளவு செலவிட்டு, இத்தனை பேரும் செய்யும் ஒற்றை வேலை, பிரதமரைப் பாதுகாப்பது!

எஸ்.பி.ஜி படை ‘புளூ புக்’ என்ற ரகசியப் புத்தகம் ஒன்றைப் பராமரிக்கிறது. வி.ஐ.பி பாதுகாப்புக்கான எல்லா நடவடிக்கைகளும் இதன்படியே செய்யப்படும். பிரதமர் வெளியூர் போகிறார் என்றால், அந்தப் பயணத்துக்குச் சில நாள்களுக்கு முன்பே எஸ்.பி.ஜி அதிகாரிகள் அங்கு போவார்கள். இன்டலிஜென்ஸ் பீரோ மற்றும் உள்ளூர் போலீஸாருடன் பாதுகாப்பு ஆலோசனை நடத்துவார்கள்.

நிகழ்ச்சி நிரலின் ஒவ்வொரு நிமிடமும் அவர்களால் அலசப்படும். பிரதமர் எந்த வாகனத்தில் வருகிறார், எந்த வழியாக வருகிறார், அவருடன் யார் போகிறார்கள், யார் யாரை அவர் சந்திக்கிறார், அவர் எங்கே தங்குகிறார் என்று எல்லாவற்றையும் ஆராய்வார்கள். பயணத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மாற்று வழியையும் திட்டமிட்டு வைத்திருப்பார்கள். பிரதமர் பயணம் செய்யும் வழியில், வாகனமோ, மனிதர்களோ குறுக்கிடாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்படும். வழிநெடுக போலீஸ் நிற்கும். சந்தேகத்துக்குரிய இடங்களில் உயரமான கட்டடங்களில் நின்றபடியும் கண்காணிப்பார்கள்.

பிரதமரைப் பாதுகாக்கும் புளூ புக் சீக்ரெட்!

பிரதமரின் பாதுகாப்புக்கு எஸ்.பி.ஜி படையினர்தான் பொறுப்பு என்றாலும், அவர் பயணம் செய்யும் மாநிலங்களில் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும். மாற்று ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்தச் சாலையில் தடையற்ற பயணத்தை உறுதி செய்திருக்க வேண்டியது பஞ்சாப் போலீஸின் பொறுப்பு. வெறும் 150 பேர் போராட்டம் நடத்தி பிரதமர் செல்லும் வழியை மறித்தார்கள். அதை உள்ளூர் போலீஸ் தடுக்காமல் இருந்தது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதைத் தாண்டி, இதுபோன்ற பிரச்னைகள் நடக்காமல் தடுக்க என்ன செய்வது என்று யோசிக்க வேண்டியது மிக முக்கியம்.