அலசல்
Published:Updated:

வாரியத் தலைவர்கள் நியமன சர்ச்சை... தலைவரிடம் அறிமுகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பதவியா?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

கட்சிக்காகப் பல வருஷம் கடுமையா உழைச்ச பலருக்கு எம்.எல்.ஏ., எம்.பி சீட் கிடைக்கலை. சரி, கேட்குற எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியாதுதான்.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக லியோனியை நியமனம் செய்ததற்கு, தி.மு.க-வுக்கு வெளியிலிருந்து பல விமர்சனங்கள் கிளம்பி ஓய்ந்துள்ள நிலையில், மற்ற வாரியங்களின் தலைவர் பதவிக்கான நியமனம் கட்சிக்குள்ளேயே பல புகைச்சல்களைக் கிளப்பியுள்ளது. ‘‘லியோனி உட்பட தற்போது வாரியங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள், நேரடியாகத் தலைவருக்கு அறிமுகமுள்ளவர்கள் என்பதைத் தவிர, வேறெந்தத் தகுதியும் இல்லாதவர்கள். கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் இன்னும் மூலையில்தான் முடங்கிக்கிடக்கிறோம்’’ எனக் கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, வாரியத் தலைவர்கள் பொறுப்புக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அந்தவகையில், சிறுபான்மை நல வாரியத்தின் தலைவராக காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராக பொன்.குமார், தமிழ்நாடு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி சிவக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நியமனங்கள்தான், வட மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘கட்சியின் இந்த நியமனங்கள், ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும்’’ என்றவர்கள், நம்மிடம் கூடுதலாகச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

வாரியத் தலைவர்கள் நியமன சர்ச்சை... தலைவரிடம் அறிமுகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பதவியா?

‘‘கட்சிக்காகப் பல வருஷம் கடுமையா உழைச்ச பலருக்கு எம்.எல்.ஏ., எம்.பி சீட் கிடைக்கலை. சரி, கேட்குற எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியாதுதான். ஆனா, வாரியத் தலைவர்கள் போன்ற கௌரவப் பதவிகளையாவது அவங்களுக்குக் கொடுக்கலாம். ஆனா, சிறுபான்மை நலவாரியத் தலைவர் பதவியை காங்கிரஸுக்குக் கொடுக்கிறாங்க. அ.தி.மு.க-வுல இருந்துவந்த மஸ்தானுக்கு துணைத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்காங்க. அ.தி.மு.க-வுலருந்து இந்த மாதம் கட்சியில சேர்ந்த ரெண்டு பேருக்கு வாரியத் தலைவர் பதவி கொடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வருது.

லியோனி கட்சியில சேர்ந்ததே 2011-லதான். அவர் கட்சிக்காக என்ன உழைச்சிருக்காரு? கட்சிக்காரன் நடத்துற கூட்டத்துக்கே ஐம்பதாயிரம் பணம், பெரிய ஹோட்டல்ல ரூம் போட்டுக் கொடுத்தாத்தான் பேச வருவாரு. ஆனா, கட்சிக்காக லட்சக்கணக்குல செலவழிச்ச எங்களை மாதிரி ஆளுகளுக்கு ஒண்ணுமில்ல. லியோனி கட்சிக்காகச் செஞ்ச வேலைதான் என்ன... பட்டிமன்றப் பேச்சாளர் என்ற தகுதியே ஒரு வாரியத்தோட தலைவராகுறதுக்குப் போதுமா என்ன?

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினரா ஜோதி சிவஞானத்தை நியமிச்சிருக்காங்க. அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்... நம்ம கட்சியில பேராசிரியர்கள், படிச்ச அறிவாளிகள் யாருமே இல்லையா? ஜெயரஞ்சன் பரிந்துரை செஞ்சாருங்கிற ஒரே காரணத்துக்காக அவருக்குப் பதவி. கட்டுமான வாரியத்துக்கு பொன்.குமாரைத் தலைவராக்கியிருக்காங்க. கட்சிக்காக வேலை பார்க்குற யாரையும் தலைமை கண்ணுக்குத் தெரியலபோல’’ என்றவர்கள், தொடர்ந்து வேறு சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

வாரியத் தலைவர்கள் நியமன சர்ச்சை... தலைவரிடம் அறிமுகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பதவியா?

‘‘வன்னியர் சமூகத்தோட ஒப்பிடும்போது, குறைவான மக்கள்தொகைகொண்ட பல சமூகங்களுக்கு தலா நான்கு பதவிகள் கொடுத்திருக்காங்க. ஆனா, பெருவாரியான மக்கள்தொகை கொண்ட வன்னியர் சமூகத்துக்கு மூணே மூணு பதவிதான். அதிலயும், துரைமுருகன் ஏற்கெனவே அமைச்சரா இருந்த துறையைப் பிரிச்சு பாதியை எ.வ.வேலுகிட்ட கொடுத்துட்டாங்க. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ரெண்டு பேருக்கும்கூட டம்மியான துறைகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கு.

அமைச்சரவைப் பட்டியல் அறிவிச்ச உடனேயே சமூக வலைதளங்கள்ல, ‘பாருங்க, நம்ம சமூகத்தை தி.மு.க புறக்கணிச்சிருக்கு’ன்னு பா.ம.க-காரங்க பிரசாரம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நேரத்துல அவங்களை எதிர்கொள்ளணும்னா, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய ஏழு மாவட்டத்துலருந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்காவது பிரநிதித்துவம் கொடுத்திருக்கணும். ஆனா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குறிஞ்சி சிவக்குமார், ஏற்கெனவே பிரநிதித்துவம் கொடுக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துலருந்து ஜோதி சிவஞானம், மெட்ராஸைவிட்டு வெளியே வராத பொன்.குமார் ஆகியோருக்குப் பதவியைக் கொடுத்துட்டு, வன்னியர் சமூகத்துக்குப் பதவி கொடுத்திருக்கோம்னு சொல்லிக்குறாங்க.

வாரியத் தலைவர்கள் நியமன சர்ச்சை... தலைவரிடம் அறிமுகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பதவியா?

ராமதாஸ், சி.வி.சண்முகம் போன்ற தலைவர்கள் வலிமையா இருக்குற பகுதிகள்ல, மற்ற சமூகங்களைச் சேர்ந்தவங்கதான் பெரிய பதவிகள்ல இருக்காங்க. இப்போ உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போற காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்ல வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்தப் பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படலை. கேட்டா, `துரைமுருகனுக்குப் பதவி கொடுத்திருக்கோமே’னு சொல்றாங்க. அவரால வன்னிய சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவரை நெருங்குறதுக்குள்ளயே போதும் போதும்னு ஆகிடும். அவருகூட நெருக்கமா ஒரு வன்னியர்கூட இல்லை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவங்களைத்தான் கூடவே வெச்சிருக்காரு. வடதமிழகத்தைப் பொறுத்தவரை, பா.ம.க-வை எதிர்கொள்ள தி.மு.க -வில் வன்னியர் சமூக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவமும் பதவியும் தந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போய் வாக்கு கேட்க முடியும். தலைவர் ஸ்டாலின் சரியான முடிவுகளை எடுக்கிறவர்தான், ஆனா, இது போன்ற விஷயங்களைத் தலைவர் காதுக்குக் கொண்டுபோறதுக்கு யாரும் இல்லை. கட்சியில இருக்குற வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள்கூட, நம்ம வேலை முடிஞ்சா போதும்னு ஒதுக்கிங்கிறாங்க. இதே நிலைமையில போனா, கொங்குப் பகுதிகளைப்போல வடமாவட்டங்களையும் தி.மு.க தலைமை மறந்துட வேண்டியதுதான்’’ என்கிறார்கள் ஆதங்கமாக.

பதவிகள் என்றாலே பஞ்சாயத்துதானே!