Published:Updated:

`50 ஆண்டுகளாக சாலை இல்லை; அரசிடம் முறையிட்டும் பயனில்லை!' - கிடா வெட்டி கோயிலில் வழிபட்ட மக்கள்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

போடி தொகுதி மலைக்கிராமங்களுக்கு சாலை அமைக்கவேண்டி கோயிலில் கிடா வெட்டி வழிபாடு செய்தனர் மக்கள்.

வடக்குமலை கிராம மக்கள்
வடக்குமலை கிராம மக்கள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள வடக்குமலை மலைக்கிராம மக்கள், அப்பகுதிக்கு சாலைவேண்டி முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். இச்சம்பவம் போடி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

அகமலை செல்லும் மலைப்பாதை
அகமலை செல்லும் மலைப்பாதை

போடிநாயக்கனூர் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றவர் இப்போதைய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். போடி தொகுதிக்கு உட்பட்ட அகமலைப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், தேனி, பெரியகுளம் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். ஆனால், வடக்குமலையில் உள்ள புதூர், உலக்குருட்டி, காணாமஞ்சி, கூனியாறு, அண்ணா நகர் வழியாக 7 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்தால் அகமலையை அடையலாம்.

இப்பகுதியில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா, எலுமிச்சை, இலவம் போன்றவை பயிர்செய்யப்பட்டுள்ளன. சாலை வசதி இல்லாததால், விளைபொருள்களை கழுதை, குதிரை மீது ஏற்றியும் தலைச்சுமையாகவும் போடிக்கு கொண்டுவர வேண்டிய நிலை நீடிக்கிறது. வெறும் 7 கிலோமீட்டர் மலைப்பாதையை சீர் செய்து சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது வடக்குமலை மலைக்கிராம மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கை

அகமலை செல்லும் மலைப்பாதை
அகமலை செல்லும் மலைப்பாதை
Vikatan

போடி தொகுதியில் யார் வெற்றிபெற்றாலும், அவர்களிடம் சாலை அமைக்க கோரிக்கை மனு அளிப்பது அவர்களின் வாடிக்கையாகவே மாறிவிட்டது. தற்போது, போடி தொகுதி எம்.எல்.ஏ-வும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வரை கோரிக்கை மனு அளித்துவிட்டனர்.

கோரிக்கைக்கு எந்தப் பலனும் இல்லாத நிலையில், அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, விரைவில் சாலை அமைக்கப்பட வேண்டும் என பிராத்தனை செய்தது மட்டுமல்லாது, கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

வடக்குமலை கிராம மக்கள்
வடக்குமலை கிராம மக்கள்

”எத்தனையோ முறை மனு கொடுத்து பார்த்துவிட்டோம். இந்த அரசாங்கத்தால், 7 கிலோமீட்டர் ரோடு போட முடியலையா? நாங்கள் இந்த நாட்டில் தான் வாழ்கிறோமா இல்லை வேறு நாட்டைச் சேர்ந்தவர்களா? டூர் போறதுக்கா ரோடு கேக்குறோம், எங்க கிராமத்துக்குப் போகத்தான ரோடு கேக்குறோம். அதைக் கூட செய்துகொடுக்க முடியவில்லை என்றால், துணை முதல்வர் எதுக்கு... எம்.பி எதுக்கு?” என காரசாரமாகப் பேசினர் வடக்குமலை மலைக்கிராம மக்கள். ஆட்சியாளர்களை நம்பி இனி எந்தப் பயனும் இல்லை என்ற விரக்தியில், கடவுளிடம் முறையிட வந்துவிட்டனர் மக்கள்.