Published:Updated:

`ஆளுநர் கிரண்பேடி மாளிகையில் வெடிகுண்டு..!’ -சிறையில் இருந்தபடியே புதுவை போலீஸைப் பதறவைத்த கைதி

வெடிகுண்டு
வெடிகுண்டு ( மாதிரி படம் )

சிறையில் இருக்கும் கைதி ஒருவர் ஆளுநர் கிரண்பேடி மாளிகைக்கும் ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி கோரிமேட்டில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், புதுவை ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். அதையடுத்து, ஆளுநர் மாளிகையைச் சுற்றி தடுப்பு ஏற்படுத்திய காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் ஆளுநர் மாளிகைக்குள் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி  ஆளுநர் மாளிகை
புதுச்சேரி ஆளுநர் மாளிகை

சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் அங்கு வெடிகுண்டுகள் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. அதேபோல ரயில் நிலையத்திலும் அங்கு நின்றிருந்த ரயில்களிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தியது காவல்துறை.

அங்கும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லாதது உறுதி செய்யப்பட்டவுடன் மர்ம நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்த அழைப்பு புதுவை காலாப்பட்டு மத்திய சிறைக்குள் இருந்து வந்திருப்பது செல்போன் டவர் சிக்னல் மூலம் தெரியவந்தது.

ரயில் நிலையம் மற்றும் ரயிலில் சோதனை
ரயில் நிலையம் மற்றும் ரயிலில் சோதனை

அதையடுத்து, அங்கு சென்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கார் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் டெல்லியைச் சேர்ந்த நித்திஷ்குமார்(33) என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது. இந்த நபர்தான் நேற்றிரவு சென்னை கட்டுப்பாட்டு அறைக்கும் போன் செய்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறது காவல்துறை.

தொடர்ந்து காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்த சிறைக் கைதிகளிடம் நடத்திய சோதனையில் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பல அடுக்கு பாதுகாப்புகள் கொண்ட சிறையில், கைதிகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக எப்படி செல்போன்கள் கிடைக்கின்றன என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள் சிலர்.

கிரண்பேடி
கிரண்பேடி

சிறைக்குள் இருக்கும் கைதிகள் செல்போன்கள் மூலம் வெளியில் இருக்கும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்வதும், கொலைத் திட்டங்களை வகுப்பதும் தொடர் கதையாகி வருகின்றது.

இத்தகைய சூழலில் சிறைக்குள் இருந்தே ஆளுநர் மாளிகைக்கு கைதி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பின் செல்ல