Published:Updated:

`நாங்களாக்கும்’ - ‘யாருமில்லையாக்கும்...' முட்டிக்கொள்ளும் அ.தி.மு.க - பா.ஜ.க!

''பா.ஜ.க இல்லாமல் அ.தி.மு.க-வுக்கு வெற்றி இல்லை'' என்றார், பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், ''இது கூட்டணிக் கட்சிகளின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தனிப்பட்டு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது'' என்கிறார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்களிப்பை கொண்டாடி முடிக்கும் முன்னரே, 'வெற்றிக்கு யார் காரணம்...' என்ற போட்டி அ.தி.மு.க - பா.ஜ.க இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
நாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை! -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி

வெள்ளியன்று காலை, இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அ.தி.மு.க வேட்பாளர்கள் இருவரும் முன்னிலையில் இருந்துவந்தது, அ.தி.மு.க கூட்டணியினருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து இந்த முன்னணியைத் தக்கவைத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க வேட்பாளர்கள், மாலையில் வெற்றியை உறுதிசெய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் தங்கள் வெற்றிக் களிப்பைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர், அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.

அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ''பா.ஜ.க இல்லாமல் அ.தி.மு.க-வுக்கு இந்த வெற்றி கிடையாது'' என்று கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்து, அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஒட்டுமொத்தமாக எல்லோரும் உழைத்துக் கிடைத்த வெற்றியைத் தனிப்பட்ட ஒரு கட்சியின் சாதனையாகச் சொல்வது எப்படி நியாயமாகும்...' என்று குமுறிக்கொண்டிருக்கின்றனர் கூட்டணிக் கட்சியினர். அ.தி.மு.க-வினரோ, 'தமிழகத்தில் பா.ஜ.க-வின் பலம் என்னவென்பது உலகறிந்த உண்மை. இந்த நிலையில், வேண்டுமென்றே இதுபோன்ற மாயைகளைத் திட்டமிட்டு பா.ஜ.க தலைவர்கள் பரப்புகிறார்கள்' என்று கொந்தளித்துவருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து குறித்து விளக்கம் கேட்டோம்...

''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எல்லோருக்குமே தெரியும். ஜெயலலிதா கொண்டுவந்திருந்த திட்டங்கள் அனைத்துமே இன்றைக்கு அடித்தட்டு மக்களைச் சென்றடைந்திருக்கிறது. எனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளின் வாக்கு வங்கி, முழுமையாக அ.தி.மு.க வேட்பாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், எங்களோடு கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சியினரின் வாக்குகளும்கூட ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வலு சேர்த்திருக்கிறது.

'மதவாதக் கட்சி, சாதிக் கட்சி, சட்டம் ஒழுங்கு சரியில்லை...' என்றெல்லாம் தி.மு.க சொல்லிவந்த பொய்யான குற்றச்சாட்டுகள் எதுவும் எடுபடவில்லை. அவர்கள் கொடுத்திருந்த பொய்யான வாக்குறுதிகளையும் மக்கள் நம்பவில்லை. எனவே, இடைத்தேர்தல் வெற்றி என்பது தி.மு.க தலைவருக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டது. எனவே, இனி அவர் பொய்ப் பிரசாரம் பண்ண முடியாது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

ஆக, இப்படியொரு சூழலில் அ.தி.மு.க என்ற கட்சிக்கென்று இருக்கக்கூடிய நிலையான வாக்குகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்துதான் இந்த இமாலய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எனவே, 'இந்த வெற்றிக்கு நாங்கள்தான் முழுமுதல் காரணம்' என்று தனிப்பட்ட ரீதியில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு, கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!'' என்றார் திட்டவட்டமாக.

'அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒட்டுமொத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றியை, தனிப்பட்ட பா.ஜ.க-வின் வெற்றியாக எப்படிச் சொல்ல முடியும்...' என்ற அ.தி.மு.க-வின் கேள்வியை தமிழக பா.ஜ.க-வின் பொருளாளரும் செய்தித் தொடர்பாளருமான எஸ்.ஆர்.சேகரிடம் சொல்லி விளக்கம் கேட்டோம்...

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

''இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களின் வெற்றியில், பா.ஜ.க-வுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

இந்திய அளவில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இங்குள்ள பெரிய கட்சியும் ஆளுங்கட்சியுமான அ.தி.மு.க இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. எனவே, வெற்றிபெற்ற அ.தி.மு.க வேட்பாளர்கள் 'தேசிய ஜனநாயகக் கூட்டணி'யைச் சேர்ந்தவர்கள்தான். எனவே, இந்த வெற்றியில் பா.ஜ.க-வுக்குப் பங்கு இருக்கிறது என்று சொல்லியதில் எந்தத் தவறும் இல்லை.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

இந்த இடைத்தேர்தலுக்கு முன்பு, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் நேரில் சென்று அழைத்த அ.தி.மு.க தலைவர்கள், எங்கள் கட்சித் தலைவர்களை மட்டும் நேரடியாகச் சந்திக்காமல் காலதாமதப்படுத்தியது உலகறிந்த உண்மை! ஆனால், இந்த உண்மை தெரிந்துவிட்ட காரணத்தினால், 'இது உண்மையாகிவிடக் கூடாது' என்பதற்காக எங்கள் கட்சி அலுவலகத்துக்கே நேரில் வந்து அழைத்ததும் உண்மை!

அதன்பிறகு, நாங்களும் தேர்தல் களத்தில் தீவிரமாக வேலை பார்த்தது உண்மை. ஆனால், அப்படி வேலைபார்த்தபோதும்கூட எங்கள் தலைவர்களின் பிரசார செய்திகள் பத்திரிகைகளில் பெரிதாக வெளிவராததும் உண்மை. எங்கள் கட்சியைச்சேர்ந்த மாநில - மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இரண்டாம்கட்டத் தலைவர்கள் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரசார வேலை பார்க்கவில்லை என்று யாரேனும் மறுக்கமுடியுமா?

விஜயகாந்த்
விஜயகாந்த்

அதனால், 'வெறும் விளம்பரங்களினால் மட்டுமே வேலை செய்வது வெளிக்காட்டப்படும்' என்ற துரதிர்ஷ்டவசமான இந்த காலகட்டத்தில், இந்த வெற்றியில் பா.ஜ.க பங்குகொள்வதைக் கண்டு அவர்களிடையே சலசலப்பு ஏற்படுவதென்பது இயற்கை! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க இருப்பதென்பது உண்மை. அதனாலேயே பா.ஜ.க தேர்தல் களத்தில் வேலை பார்த்தது என்பதும் உண்மை. எனவே, இந்த வெற்றியில் சொந்தம் கொண்டாட பா.ஜ.க-வுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை!'' என்றார் ஆணித்தரமாக.