Published:Updated:

`அன்று ஆங்கிலேயர் எடுத்துச் சென்றதன் இன்றைய மதிப்பு 45 டிரில்லியன் டாலர்!’ - ஜெய்சங்கர்

ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து சூறையாடியது, இன்றைய மதிப்பில் 45 டிரில்லியன் டாலர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jaishankar
Jaishankar

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார். அப்போது, `காலனித்துவ ஆட்சியின் கீழ் இந்தியா இரண்டு நூற்றாண்டுகளாக 'அவமானத்தை' சந்தித்ததாகக் கூறியுள்ளார். மேலும், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் எடுத்துச்சென்ற செல்வம், இன்றைய பண மதிப்பில் 45 டிரில்லியன் டாலருக்கு நிகரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், `அட்லாண்டிக் கவுன்சில்’ கூட்டத்தில் பேசிய அவர், ``18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவுக்குள் நுழைந்த காலனித்துவ ஆதிக்கத்தால் இரண்டு நூற்றாண்டுகள் சூறையாடப்பட்டன. ஒரு பொருளாதார ஆய்வு, இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் எவ்வளவு வளங்களை எடுத்துக்கொண்டது என்று மதிப்பிட்டபோது, இன்றைய மதிப்பில் அது 45 டிரில்லியன் டாலர் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது” என்றார்.

இந்தியப் பிரதமர் மோடி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயரும் என உறுதியளித்திருக்கிறார். இந்தியா, இப்போது 5 டிரில்லியனை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து சூறையாடியது இன்றைய மதிப்பில் 45 டிரில்லியன் டாலர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இரான் - ரஷ்யாவுடனான அணுகுமுறையால் அமெரிக்காவுடனான கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் அவர் பேசினார்.

Jaishankar
Jaishankar

``பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இதில் வேறுபாடுகளும் இருக்கும், அவற்றை நிர்வகிப்பதே சவாலின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா, தெற்காசியா மற்றும் மேற்கத்திய உலக நாடுகளுக்கிடையில் நல்லுறவு உருவாக்கிவருகிறது. அரசியல் மற்றும் பொருளாதார சக்தியில், 'உலகளாவிய மறுசீரமைப்பு' நடந்துவருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வளர்ந்து வரும் செல்வாக்கை மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.