Published:Updated:

``துணை ஜனாதிபதியே ஆனாலும், இங்கே இப்படித்தான்!''- பா.ஜ.க விதிகளும் பி.டி.அரசகுமார் விவகாரமும்

``பா.ஜ.க-வுக்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவும்கூட இந்த விதிகளைத்தான் கடைப்பிடிக்கிறார். ஆனால், பி.டி.அரசகுமாருக்கு இது தெரியாமல் போய்விட்டது'' என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள்.

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்

`மு.க.ஸ்டாலின், விரைவில் அரியணை ஏறுவார்' என்று பேசி தமிழக பா.ஜ.க-வுக்கு ஷாக் கொடுத்த அக்கட்சியின் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், இப்போது தி.மு.க-வில் அடைக்கலமாகிவிட்டார்.

தாய்க்கழகத்தில் இணைந்த கையோடு, `கட்சி நடத்தவில்லை; கம்பெனி நடத்துகிறார்கள்', `உழைப்புக்கு மரியாதை இல்லை', `தமிழிசையின் ஆதரவாளர் என்று என்னை ஓரம்கட்டினார்கள்', `மோடியைச் சந்திக்கக்கூட அனுமதி மறுத்தார்கள்' என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை வீசி வருகிறார் அரசகுமார்.

இந்த நிலையில், `தி.மு.க-வில் இணைந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டேதான் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினீர்களா..?' என்ற கேள்வியை பி.டி.அரசகுமாரிடம் கேட்டோம்...

பி.டி.அரசகுமார்
பி.டி.அரசகுமார்
`கேட்கக்கூடாத வார்த்தைகளைக் கேட்டுவிட்டேன்!'- தி.மு.க-வில் இணைந்த பி.டி.அரசகுமார்

``கிடையவே கிடையாது. அன்றைக்கு நான் பேசியது, இறைவன் சாட்சியாக யதார்த்தமான ஒன்று. இன்னும் சொல்லப்போனால், அந்தத் திருமண நிகழ்ச்சியின்போது மேடைக்குச் செல்வதற்கான திட்டமிடல்கூட என்னிடம் இல்லை. எல்லோரையும்போல், நானும் மக்களோடு மக்களாக மேடைக்கு கீழேதான் அமர்ந்திருந்தேன்.

12 வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி ஒரு திருமண வீட்டுக்கு நான் சென்றிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த மு.க.ஸ்டாலின், என்னையும் மேலே மேடைக்கு வரச்சொல்லி அழைத்தார். அதையே அன்றும் செய்தார். ஆக, என் மேல் தொடர்ந்து அவர் வைத்திருக்கிற அன்பு, மரியாதை, பண்பு என்னை உணர்ச்சிக்குள்ளாக்கியது. `இப்படிப்பட்ட தலைவனை நாம் ஏன் தவறவிட வேண்டும். நிச்சயம் இந்தத் தலைவனைப் பாராட்ட வேண்டும்' என்று அந்தக் கணத்திலேயே நான் உணர்ந்தேன். பேசினேன். தமிழக அரசியல் கள நிலவரத்தைத்தானே நான் அன்றைக்குப் பேசினேன்.

அடுத்ததாக, தமிழக பா.ஜ.க-வில் மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் தனித்தனியே தாங்கள் நல்ல பெயர் எடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, கட்சியை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனை அவர்களிடத்தில் இல்லை. தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர் என்று என்னை நினைத்துக்கொண்டுதான் அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் என்னைத் தவிர்க்க நினைத்தனர்.

பா.ஜ.க-வில் சாதாரணத் தொண்டனாக நான் வந்து சேரவில்லை. ஏற்கெனவே ஒரு கட்சியை நடத்திவந்த நான், அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டுத்தான் பா.ஜ.க-வில் இணைந்தேன். அப்படியிருக்கும்போது மற்றவர்களோடு என்னை இவர்கள் ஒப்பிட்டிருக்கவே கூடாது.

கமலாலயம்
கமலாலயம்
`சிக்கவைக்க சதி..  விளக்கமளித்தேன்!' -ஸ்டாலினைப் புகழ்ந்தது குறித்து பி.டி.அரசகுமார்

சீன அதிபரை மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். அப்போது மோடியைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. `கட்சியில் உள்ள புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்படுவதால், ஏற்கெனவே பிரதமரை சந்தித்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை' என்று அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் காரணம் சொன்னார். ஆனாலும் பிரதமர் டெல்லி புறப்பட்டுச் செல்லும்முன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நரேந்திரன் என கட்சியின் பொதுச்செயலாளர்கள் அனைவருக்கும் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுதான் முதன்முதலாக என் மனதைப் பாதித்தது. கட்சியின் மீது ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது'' என்றார் குமுறலாக.

பி.டி.அரசகுமாரின் இந்த ஆதங்கங்களுக்கு விளக்கம் கேட்டு பா.ஜ கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிலரிடம் பேசியபோது... ``அரசியல் ரீதியான கேள்விகளுக்கு தனிப்பட்ட நபராக நாங்கள் பதில் சொல்ல முடியும். ஆனால், பா.ஜ.க-விலிருந்து விலகி வேறு கட்சிக்குச் சென்றுவிட்ட ஒருவர் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் தனிப்பட்ட ரீதியில் நாங்கள் எந்தப் பதிலையும் சொல்லமுடியாது'' என்று தவிர்த்துவிட்டனர்.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்... ``வறண்ட பூமி போன்ற தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை எப்படியும் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பா.ஜ.க-வின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்துகொண்டு, எனக்கு மிகவும் பிடித்த தலைவர் என்று அடுத்த கட்சியைச் சேர்ந்த தலைவரை அரசகுமார் குறிப்பிடுகிறார் என்றால், பா.ஜ.க-விலுள்ள மோடி, அமித் ஷா போன்ற தலைவர்களை இவருக்குப் பிடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அடுத்த கட்சித் தலைவரைப் புகழ்வதில் தவறில்லை. ஆனால், அதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. இவரது பேச்சைக் கேட்டு பா.ஜ.க தொண்டர்கள் கொதித்துப்போயுள்ளனர். தான் செய்த தவற்றை மறைப்பதற்காக இப்போது மற்றவர்கள் மீது பழி போட்டுவருகிறார் அரசகுமார்.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

பொதுச்செயலாளர்களேகூட எல்லா நிகழ்வுகளிலும் பங்குபெற முடியாது என்பதுதான் எங்கள் கட்சியின் விதி. உதாரணமாக மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஒரு நிகழ்வின்போது, மேடையில் தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லைதான். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை சாதாரண தொண்டர்களும்கூட நாளை பொதுச்செயலாளராக உயர்ந்த இடத்துக்கு வரமுடியும். அதேபோல், எங்கள் கட்சிக்கென்று தனிப்பட்டு சில விதிமுறைகள் இருக்கின்றன.

இப்போதும்கூட மேடையில் மோடி, அமித் ஷா ஆகிய தலைவர்கள் அமர்ந்திருக்கும்போது துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்கக்கூடிய வெங்கைய நாயுடு, கட்சியின் முன்னாள் தலைவரான நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்களேகூட கீழே பார்வையாளர்கள் வரிசையில்தான் அமர்வார்கள். இது எங்கள் கட்சி ரீதியான விதிமுறைகளைப் பின்பற்றுகிற நடைமுறை. வேறு கட்சிகளில் இருந்துவிட்டு எங்கள் கட்சிக்கு வருபவர்களும்கூட இந்த விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு அதன்படியே நடந்தும் வருகிறார்கள். ஆனால், அரசகுமாருக்கு ஏனோ அது தெரியவில்லை.

மோடி
மோடி

கட்சியில் எல்லோருமேதான் உழைக்கிறார்கள். நான் மட்டும் உழைக்கிறேன் எனக்கு எந்தப் பிரதிபலனும் கிடையாதா... என்று கேட்பதே, உழைப்புக்குக் கூலி கேட்பதுபோல் இருக்கிறது. அப்படியென்றால், எந்த லாபமும் எதிர்பார்க்காமல், சொந்தக் காசைப் போட்டு கொடி ஏற்றி, போஸ்டர் ஒட்டி கட்சிப் பணி ஆற்றுகிற கட்சியின் அடிமட்டத் தொண்டனின் உழைப்புக்கு ஈடு இணை உண்டா?

பொதுவாக கட்சிக்குள் இருந்துகொண்டு ஒருவர் கேள்வி எழுப்புகிறார் என்றால், அவரது எந்தக் கேள்விக்கும் தெளிவான பதிலைச் சொல்ல முடியும். ஆனால், கட்சியே வேண்டாம் என்று போய்விட்ட ஒருவர் கேட்கும் கேள்விக்கெல்லாம் எப்படி பதில் சொல்லமுடியும்?'' என்று கோபத்துடன் பதில் கேள்வி கேட்கின்றனர் நிர்வாகிகள்.

மோடி
மோடி

`தமிழக அரசியிலில், கோஷ்டிப் பூசல்களுக்கு காங்கிரஸ் கட்சியை உதாரணம் காட்டிக்கொண்டிருந்த நிலை மாறி, இன்றைக்கு தமிழக பா.ஜ.க-விலும் கோஷ்டிப் பூசல்கள் உருவாகிவருகின்றன என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!