Published:Updated:

“தி.மு.க-வினர் நிறுவனங்களை ரெய்டு செய்தால், இடமாற்றமா?”

ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டு

- கொந்தளிக்கும் வணிக வரித்துறை அலுவலர்கள்!

“தி.மு.க-வினர் நிறுவனங்களை ரெய்டு செய்தால், இடமாற்றமா?”

- கொந்தளிக்கும் வணிக வரித்துறை அலுவலர்கள்!

Published:Updated:
ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டு

`தமிழக அரசின் அமுதசுரபி’ என்று அழைக்கப்படும் துறை, வணிக வரித்துறை. இந்தத் துறை மூலம்தான் அரசுக்கு ஆண்டுக்கு இரண்டே முக்கால் லட்சம் கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்துவருகிறது. அதேநேரத்தில், எவ்வளவு விதிமுறைகள் கொண்டுவந்தாலும் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதும் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. ‘அப்படியான வரி ஏய்ப்பைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கச் சென்ற அதிகாரிகளை ஆளுங்கட்சி அமைச்சர்கள் சிலரே தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை இடமாற்றமும் செய்திருக்கிறார்கள்’ என்று கிளம்பியிருக்கும் செய்தியால், வணிக வரித்துறை வட்டாரமே பரபரத்துக்கிடக்கிறது!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவரின் கட்டுமான நிறுவனம், சுமார் 9 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை வணிக வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். இது தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு, 30.7.2021 அன்று ஆய்வுக்குச் சென்றார்கள். அப்போது, அந்த அதிகாரிகளிடம் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் தி.மு.க பிரமுகருக்கு ஆதரவாக போனில் பேசியிருக்கிறார்கள். அடுத்ததாக, ராஜபாளையத்திலிருக்கும் தி.மு.க பிரமுகரின் ஜவுளி நிறுவனம் ஒன்று ‘சர்க்குலர் டிரேடிங்’ என்று நூதன முறையில் பில்களை மாற்றி மாற்றிப் போட்டு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, 31.8.2021 அன்று ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளிடம், மூன்று அமைச்சர்களும் வணிக வரித்துறையிலிருக்கும் ஐந்து உயரதிகாரிகளும் ஜவுளி நிறுவனத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள். அதையடுத்து, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கிய நெல்லை மற்றும் ராஜபாளையம் நிறுவனங்கள்மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

“தி.மு.க-வினர் நிறுவனங்களை ரெய்டு செய்தால், இடமாற்றமா?”

‘‘இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமல்லாமல், இன்னும் சில வரி ஏய்ப்பு விவகாரங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகவும், அதிகாரிகளும் அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்படியான பேச்சுவார்த்தைகளில் அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஒத்துழைக்காத - பணியாத 101 அலுவலர்கள், நவம்பர் 15-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் வணிக வரித்துறை சங்கங்களைச் சேர்ந்தோர். இந்த இடமாற்றத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சங்க நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘இடமாறுதலுக்கான விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் பின்பற்றாமல், இந்தத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களைக் குற்றவாளிகள்போலச் சித்திரித்து ‘நிர்வாகக் காரணங்கள்’, ‘பொதுமக்கள் நலன் கருதி’, என்றெல்லாம் கூறி 300 கிலோமீட்டருக்கு அப்பால் அவர்களை மாற்றியது விதிமீறிய நடவடிக்கை. இந்த இடமாறுதல் பட்டியல், அவசர அவசரமாகத் துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள சிலர், இந்தத் துறையிலேயே பணியாற்றவில்லை. பல அலுவலர்களுக்கு இனிஷியல்கூட போடப்படவில்லை.

“தி.மு.க-வினர் நிறுவனங்களை ரெய்டு செய்தால், இடமாற்றமா?”

எங்களைப் பொறுத்தவரையில் சில உயரதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இந்தத் துறை செயல்பட்டுவருகிறது. அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், இடமாற்றம் நடக்கிறது. எந்தவித விசாரணையும் இல்லாமல் இந்த இடமாறுதல் நடந்திருக்கிறது. இடமாறுதல் பட்டியலில் உள்ளவர்கள்மீது தவறு இருக்கும்பட்சத்தில், அதற்குரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கலாம். அதில் சங்கம் தலையிடாது. ஆனால், இந்த இடமாறுதல் பட்டியலில் 60 சதவிகிதத்தினர் நேர்மையான அலுவலர்கள். மேலும், கோட்டம்விட்டு கோட்டத்துக்கு அதிகாரிகளை இடமாறுதல் செய்ய விதியில்லை. அந்த விதியைத்தான் தற்போது மீறியிருக்கிறார்கள். கோட்டத்தைவிட்டு கோட்டம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால், கமிஷனர்தான் விசாரணை நடத்த வேண்டும். ஆனால், அப்படி எந்த விசாரணையும் நடக்கவில்லை’’ என்றார்கள்.

வணிக வரித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சென்னையில் கூடுதல் கமிஷனராகப் பணியாற்றும் ஒருவர், இணை கமிஷனராகப் பணியாற்றும் இருவர், தென்மாவட்டத்தில் இணை கமிஷனராகப் பணியாற்றும் ஒருவர், அமைச்சருடன் இருக்கும் அதிகாரி என ஐவர் கூட்டணிதான் வணிக வரித்துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு சூத்ரதாரிகள். ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர்மயமான பிறகு, வணிக வரித்துறையில் ஒவ்வொரு மாதமும் வரி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துவருகிறது. அந்த வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த ஐந்து அதிகாரிகள் கூட்டணி செயல்பட்டுவருகிறது. தற்போதுள்ள இடமாறுதல் பட்டியலில்கூட இந்த ஐந்து பேர் கூட்டணியின் தலையீடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. வணிக வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், இந்த ஐந்து அதிகாரிகளின் சொல்படிதான் கேட்கவேண்டிய சூழல் உள்ளது. இவர்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் தப்பித்துவருகிறார்கள். எனவே முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் தலையிட்டு முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்கள்.

இது குறித்து வணிக வரித்துறையின் செயலாளர் ஜோதி நிர்மலா சாமியிடம் பேசினோம். ‘‘அரசு ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால், அவர்களை இடமாற்றம் செய்ய விதி உள்ளது. அதன்படிதான் இந்த இடமாறுதல் நடந்திருக்கிறது. இடமாறுதல் செய்யப்பட்டவர்களில் பலர், 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள். நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றியவர்களை இடம் மாற்றினால் இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆளுங்கட்சியினர் நடத்தும் நிறுவனங்கள்மீது ரெய்டு நடத்திய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்நோக்கத்துடன் யாரையும் இடமாற்றம் செய்யவில்லை. வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பதே எங்கள் துறையின் முக்கிய நோக்கம்’’ என்றார்.

“தி.மு.க-வினர் நிறுவனங்களை ரெய்டு செய்தால், இடமாற்றமா?”

இது தொடர்பாக விளக்கம் பெற வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, கமிஷனர் சித்திக் ஆகியோரைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை!

தண்டிக்கப்படவேண்டியவர்களைக் காப்பாற்றுவதும், காப்பாற்றப்பட வேண்டியவர்களை தண்டிப்பதும் நியாயமா ஆபீஸர்ஸ்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism