Published:Updated:

விஐபி தொகுதி: விழுப்புரத்தைத் தக்கவைப்பாரா சி.வி.சண்முகம்?

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இஸ்லாமிய வாக்காளர்களிடம் சி.வி.சண்முகத்தை பா.ஜ.க-வின் முகமாக நிறுத்த வியூகம் அமைத்திருக்கிறார் லட்சுமணன்

விழுப்புரம் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தற்போது மூன்றாவது முறையாகக் களமிறங்குகிறார். 2001 மற்றும் 2006 தேர்தல்களில் திண்டிவனம் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றவர், 2011 சட்டமன்றத் தேர்தலில் அது தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால், தி.மு.க-வின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட விழுப்புரம் தொகுதிக்கு நகர்ந்தார். அங்கு பொன்முடியை வீழ்த்தி வெற்றிவாகை சூடியவர், 2016 தேர்தலிலும் விழுப்புரம் தொகுதியை தக்கவைத்துக்கொண்டார் சி.வி.சண்முகம்.

லட்சுமணன்
லட்சுமணன்
பாலசுந்தரம்
பாலசுந்தரம்

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 19.29 சதவிகித வாக்குகளைப் பெற்ற பா.ம.க., இம்முறை அ.தி.மு.க கூட்டணியில் இருப்பது சி.வி.சண்முகத்துக்கு ப்ளஸ். ஆனாலும், தொடர்ச்சியாக டாக்டர் ராமதாஸைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் என்பதால், சண்முகத்திடம் கொஞ்சம் நெருங்காமல்தான் இருக்கிறார்கள் அவர்கள். அதேசமயம், முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் இந்தத் தொகுதியில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருப்பதும், 2016 தேர்தலில் 13.18 சதவிகித வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க உடனில்லாததும் அவருக்கு மைனஸ். விழுப்புரம் தொகுதியில் சட்டக் கல்லூரி கொண்டுவந்ததையும், நீர்நிலைகளைத் தூர்வாரியதையும் பிரசாரத்தில் முன்னிறுத்தும் சி.வி.சண்முகம் தரப்பு, தெருவாரியாகக் கணக்கெடுத்து வாக்காளர்களை ‘கவனிக்க’த் திட்டமிட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளாகத் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்தவர் என்பதும் அவருக்கு பலம்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

அ.ம.மு.க-வின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரான பாலசுந்தரம்தான் அந்தக் கட்சியின் வேட்பாளர். ஒருகாலத்தில் சி.வி.சண்முகத்துக்குச் சகலமுமாக இருந்த பாலசுந்தரம், தற்போதும் அவருக்கு இணக்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் தரப்பு பாலசுந்தரத்தை ஆஃப் செய்துவிட்டது என்று பரவும் தகவலால், அ.ம.மு.க-வினரே கடுப்பில் இருக்கிறார்கள். அ.ம.மு.க கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க-வுக்கு இங்கு கணிசமான ஓட்டு வங்கி உண்டு. இருந்தாலும் தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்காததால், அதிருப்தியில் இருக்கிறார்கள் அவர்கள். இவையெல்லாமே சி.வி.சண்முகத்துக்கு ப்ளஸ்தான்.

சி.வி.சண்முகத்தால் கார்னர் செய்யப்பட்டு அ.தி.மு.க-விலிருந்து வெளியேறிய மாநிலங்களவை முன்னாள் எம்.பி லட்சுமணன், தி.மு.க வேட்பாளராக சண்முகத்தை எதிர்த்துக் களமிறங்கியிருக்கிறார். கடந்த முறை கூட்டணிக் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியது, இம்முறை அ.தி.மு.க-விலிருந்து வந்த ஒருவரை வேட்பாளர் ஆக்கியது எனப் பெரும் அதிருப்தி தி.மு.க-வினர் மத்தியில் இருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில்கூட தி.மு.க சுலபமாக ஜெயித்த இந்தத் தொகுதி, கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்கள் வசம் இல்லாததால் விரக்தியில் இருக்கிறார்கள். என்றாலும், பொன்முடியால் ஓரங்கட்டப்பட்ட கட்சிக்காரர்களும்கூட, உள்ளாட்சித் தேர்தல் பதவிகளை மனதில்கொண்டு லட்சுமணனுக்கு ஆதரவாகக் கரம் கோத்திருப்பது அவருக்கு பலம்.

இஸ்லாமிய வாக்காளர்களிடம் சி.வி.சண்முகத்தை பா.ஜ.க-வின் முகமாக நிறுத்த வியூகம் அமைத்திருக்கிறார் லட்சுமணன். அது, நகர்ப்பகுதியில் கணிசமான வாக்குகள் பெற்றுத் தரக்கூடும். பொருளாதாரரீதியில் எதிரணிக்குச் சளைத்தவரல்ல என்பதால், சி.வி.சண்முகத்துக்கு லட்சுமணன் கடும் போட்டியை ஏற்படுத்துவார் என்பதே கள நிலவரம்.

அடுத்த கட்டுரைக்கு