Published:Updated:

`ஸ்டாலின் இந்த சவாலை ஏற்றுக்கொள்வாரா?' -சி.ஏ.ஏ ஆதரவு கூட்டத்தில் முரளிதர்ராவ் காட்டம்

சி.ஏ.ஏ ஆதரவு கூட்டத்தில் பேசுகிறார் முரளிதர்ராவ்
சி.ஏ.ஏ ஆதரவு கூட்டத்தில் பேசுகிறார் முரளிதர்ராவ்

சி.ஏ.ஏ-வால் மக்கள் பாதிக்கிறார்கள் என ஒரு தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களாவது சொல்ல முடியுமா? ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். அவர் சென்னை மேயராகக்கூட ஆக முடியாது.

சி.ஏ.ஏ ஆதரவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பா.ஜ.க சார்பில் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``சி.ஏ.ஏ-வை ஏன் எதிர்க்கிறீர்கள். எந்த வகையில் பாதிக்கப்படுகிறீர்கள் எனக் கேட்டால் நாளை நாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற உத்தேசமாகப் போராடுகிறார்கள். இப்போது நடக்கும் போராட்டத்தை சாதாரணமாக பார்க்காதீர்கள். வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்த பிறகு லட்சக்கணக்கான இந்துக்கள் துரத்தி அடிக்கப்பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டார்கள்.

சி.ஏ.ஏ ஆதரவு பொதுக்கூட்டம்
சி.ஏ.ஏ ஆதரவு பொதுக்கூட்டம்

நாடு பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் இருக்கும் இந்து, கிறிஸ்துவர்களை இந்தியாவுக்கு அனுப்புங்கள். இங்குள்ள முஸ்லிம்களை நாம் பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று கூறிய அம்பேத்கருக்கு நாம் கோயில் கட்டி தொழ வேண்டும். அப்படி நடந்திருந்தால் இப்போது சி.ஏ.ஏ போராட்டம் நடந்திருக்காது. இது மீண்டும் உரிமைகாக்கும் போராட்டம், மீண்டும் சுதந்திரப் போராட்டம். 15 சதவிதம் உள்ளவர்கள் ரோட்டுக்கு வரும்போது 85 சதவிகிதம் மக்களும் ரோட்டுக்கு வருவார்கள்" என்றார்.

பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பேசுகையில், ``ஸ்டாலின் காலையில், மதியம், மாலையில் என பேரணி நடத்தினாலும் சி.ஏ.ஏ நாட்டை விட்டுப் போகாது. வன்முறையை தூண்டிவிட்டு ஐம்பதுபேரை படுகொலை செய்தால் மோடி அரசை வெளியேற்றலாம் என ராகுல், ஸ்டாலின் மற்றும் சிறு தலைவர்கள் நினைக்கிறார்கள், அது நடக்காது. மேற்கு வங்கத்திலும் டெல்லியிலும் தமிழகத்திலும் பஸ்களை கொளுத்தவும் செய்கிறார்கள். ஜின்னாவின் காலம் முடிந்துவிட்டது. ஆனால், ஜின்னாவின் ஆவி ஸ்டாலினைப் பிடித்து ஆட்டுகிறது. முஸ்லிம் லீக் சொல்லுவதைக் கேட்கிறார் ஸ்டாலின். கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் படுகொலை செய்து பாகிஸ்தானைப் பெற்றார்கள். அப்போது நேரு ஜின்னாவிடம் சரண்டர் ஆகிவிட்டார்.

இந்தியாவில் 1947-ல் செய்ததைப் போல 2020-ல் அரசிடம் உங்கள் வேலையைக் காட்ட முடியாது. பி.ஜே.பி-யால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்கிறார் ஸ்டாலின். பாகிஸ்தான், இரான், சிரியா, துருக்கியில் அதிக முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

பா.ஜ.க பேரணி
பா.ஜ.க பேரணி

தி.மு.க என்றால் தமிழருக்கான கட்சி என்கிறார்கள். இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்படும்போது மத்தியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது தமிழர்களைக் காக்க தைரியம் இல்லாத நீங்களா இப்போது காப்பாற்றப்போகிறீர்கள். இப்போது மோடி ஆட்சியில் ஒரு தமிழராவது கொல்லப்படுகிறார்களா? தமிழ் தமிழ் என்று யாரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.

`எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் சிஏஏ திரும்பப் பெறப்படாது!' - அமித் ஷா திட்டவட்டம்

சி.ஏ.ஏ-வால் மக்கள் பாதிக்கிறார்கள் என ஒரு தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களாவது சொல்ல முடியுமா? ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். அவர் சென்னை மேயராகக்கூட ஆக முடியாது. குடியுரிமைச் சட்டத்தால் எப்போதும் துன்பம் இல்லை என சவால் விடுகிறோம். இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள ஸ்டாலின் தயாரா... தேசியவாதத்துக்கும், தேசிய குடியுரிமை, தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக நீங்கள் முடிவு எடுத்தால் அதை பி.ஜே.பி அரசும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு கிராமமாக, வீடுகளில் சென்று குடியுரிமைச் சட்டம் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வெற்றியைத் தராது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு