Published:Updated:

லக்னோவில் பேனரில் சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் புகைப்படம்: ஆதித்யநாத்தின் பழிவாங்கும் நடவடிக்கையா?

ஆதித்யநாத் உத்தரவின்படி வைக்கப்பட்டுள்ள பேனர்
ஆதித்யநாத் உத்தரவின்படி வைக்கப்பட்டுள்ள பேனர்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படிதான் இந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, உத்தரப்பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில், வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையைத் தொடர்ந்து 'பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடத்தில் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்கப்படும்' என்று உத்தரப் பிரதேச அரசு சொன்னது. சில இஸ்லாமிய அமைப்புகள் தாங்களாகவே முன் வந்து நஷ்டஈடும் வழங்கின. இந்த நிலையில், லக்னோ நகரத்தின் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், லக்னோவில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்கள், புகைப்படங்கள், விலாசங்களும் இடம் பெற்றிருந்தன. இதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பேனரில் புகைப்படத்தோடு, "அரசு சொத்துகளை நாசப்படுத்திய குற்றத்துக்காக நீங்கள் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் இல்லையென்றால், உங்களது சொத்துகள் பறிக்கப்படும்'' என்றும் எழுதப்பட்டிருந்தது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

ஒரு பேனரில் சமூக செயற்பாட்டாளரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜப்பார், வழக்கறிஞர் முகமது சோகைப் , நடிகர் தீபக் கபிர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர்.தராபூரி உள்ளிட்ட 57 பேரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், `இவர்களிடத்தில் இருந்து ஒரு மாதத்துக்குள் ரூ. 1.55 கோடி வசூலிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் சொத்துகள் பறிக்கப்படும்' என்றும் பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேனரில் புகைப்படமாக இடம்பெற்ற பலரும், தற்போது ஜாமீனில் உள்ளனர். இவர்களின் சொத்துகளைப் பறிக்க ஏற்கெனவே, அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. சிலர் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், அரசு தரப்பில் பொது இடத்தில் சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சதாஃப் ஜப்பார் கூறுகையில், "நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். எங்களது விலாசம் எல்லாமே அவர்களுக்குத் தெரியும். ஏற்கெனவே, எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விஷயம் இப்படியிருக்கையில், பொது இடத்தில் புகைப்படத்தை வெளியிடுவதற்கு என்ன காரணம் வந்தது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்னோவில் வைக்கப்பட்ட பேனர்
லக்னோவில் வைக்கப்பட்ட பேனர்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படிதான், மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக, வன்முறை வெடித்தபோது, `நாங்கள் பழிவாங்குவோம்' என்று வெளிப்படையாகவே யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

அப்போது, "எங்களிடத்தில் வீடியோக்கள் உள்ளன. சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வைத்து பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு, சொத்துகளைப் பறிப்போம்" என்று யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். அதன்படி, யோகி ஆதித்யநாத் தன் பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

லக்னோ மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் கூறுகையில், பேனரில் இடம்பெற்ற அனைவருமே வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்குமே அபராதத்தை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அபராதத்தை செலுத்த மறுப்பவர்களிடத்திலிருந்து கண்டிப்பாக சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தப்பித்துவிட முடியாது.
லக்னோ மாவட்ட ஆட்சியர்
கார் சேஸ், தூத்துக்குடி குண்டு, டாக்குமென்ட் மாஃபியா... தேனாம்பேட்டை குண்டுவீச்சு பின்னணி என்ன?

லக்னோ நகரைச் சுற்றி நடந்த வன்முறையில் ரூ. 1.55 கோடி அரசு சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாகக் கணக்கிட்டுள்ளோம். தவறு செய்தவர்கள் தப்பிக்கவே முடியாது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினர். கார்களை தீ வைத்து எரித்தனர். போலீஸ் அதிகாரிகளைக் கூட தாக்கினர். இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு