Published:Updated:

`வன்முறையை உருவாக்கும் பிரிவினரை நாம் அனுமதிக்கக் கூடாது!’ - போராட்டம் குறித்து பிரதமர் மோடி ட்வீட்

மோடி
மோடி ( twitter )

``நம்மைப் பிரித்து வன்முறையை உருவாக்கும் பிரிவினரை நாம் அனுமதிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார் மோடி

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாம், நாகலாந்து, திரிபுரா உட்பட சில மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Students protest
Students protest

இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குடியுரிமைச் சட்டம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர், `குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நடைபெறும் வன்முறைகள் மிகுந்த கவலையை அளிக்கின்றன. விவாதம், கலந்துரையாடல், கருத்து வேறுபாடு ஆகியவை ஜனநாயக நாட்டின் ஒரு பகுதி. ஆனால், அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும் நமது நெறிமுறை அல்ல.

மோடி
மோடி

இந்திய குடியுரிமைச் சட்டம் 2019, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளும் எம்.பி-க்களும் ஆதரவு அளித்துள்ளனர். இந்தியாவில் நூற்றாண்டுகள் பழைமையான சகோதரத்துவம், நல்லிணக்கம், இரக்கம், ஏற்றுக்கொள்ளும் பண்பு ஆகியவற்றை இந்தச் சட்டம் விளக்குகிறது.

இந்திய குடிமக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், குடியுரிமைச் சட்டம் அவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறேன். இந்தியர்கள் இந்தச் சட்டத்தைக் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. பிற நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவைத்தவிர அவர்கள் செல்ல வேறு இடமில்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்தச் சட்டம்.

இந்தியாவின் வளர்ச்சிக்கும்; ஒவ்வோர் இந்தியர்களின் குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். நம்மைப் பிரித்து வன்முறையை உருவாக்கும் பிரிவினரை நாம் அனுமதிக்கக் கூடாது.

ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது. வதந்திகள் மற்றும் பொய்களிடமிருந்து ஒவ்வொருவரும் விலகியிருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்' என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு