Published:Updated:

மத்திய அமைச்சரவை: தந்தை கவனித்த துறைக்கு மகன்; `புதிய துறைக்கு' அமித் ஷா! - யாருக்கு என்ன இலாகா?

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை

மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாகக் கட்சியில் இணைந்தவர்கள், சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மாநிலங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பேசப்பட்டன. இறுதியாக நேற்று மாலை, புதிய அமைச்சர்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுகொண்டனர்.

அமைச்சரவை
அமைச்சரவை

முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடந்து, நேற்று இரவு மத்திய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

அதன்படி, பிரதமர் மோடி, பணியாளர், பொதுக் குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சம், அணுசக்தி, வான்வெளி போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார். அவர், அறிவியல் தொழில்நுட்பத்துறையைக் கூடுதலாக கவனிப்பார். ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராகத் தொடர்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவுத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகத் தொடர்கிறார். நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள்துறை, நரேந்திர சிங் தோமர் வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை, அர்ஜூன் முண்டா பழங்குடியின நலத்துறையை கவனிக்கவிருக்கின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துவந்த ஹர்ஷவர்தன் ராஜினாமா செய்த நிலையில், அவர் வகித்துவந்த துறை மன்சுக் மாண்டவியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அத்துடன் கூடுதலாக ரசாயனம் மற்றும் உரத்துறையும் கவனிப்பார். கொரோனா பேரிடர் காலம் இன்னும் முடிவடையாத நிலையில் மாண்டவியாவுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது.

ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க பக்கம் தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமானப் போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துத்துறையின் அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி, ஊரக மேம்பாடு மற்றும் பெட்ரோலியத்துறையின் அமைச்சராக்கப்பட்டுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மறைந்த மாதவராவ் சிந்தியா, 1991-93 காலகட்டத்தில் காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பார்த்துவந்த விமான போக்குவரத்துத்துறையை இனி மகன் ஜோதிராதித்ய சிந்தியா கவனிக்கவிருக்கிறார். கொரோனா பேரிடர் காரணமாகப் பெரும் இழப்பைச் சந்தித்துவரும் விமானப் போக்குவரத்துறையில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்குப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

புருஷோத்தம் ரூபாலா மீன்வள, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்புத்துறையை கவனிப்பார். ஸ்மிருதி இரானி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை கவனிக்கிறார். தர்மேந்திர பிரதான் கல்வித்துறை மற்றும் திறன் வளர்ப்பு ஆகிய துறைகளை கவனிக்கவிருக்கிறார். நாராயண் ரானே மத்திய சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறம், மத்திய பெட்ரோலியத்துறை ஆகிய இரு துறைகளை ஹர்திப் சிங் பூரி கவனிக்கவிருக்கிறார். ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல், வர்த்தகத்துறையுடன், கூடுதலாக நுகர்வோர் மற்றும் உணவுநலன் மற்றும் ஜவுளித்துறையையும் கவனிப்பார்.

எல்.முருகன்
எல்.முருகன்

மீனாட்சி லேக்கி, வெளி விவகார மற்றும் கலாசார அமைச்சகத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அனுராக் தாக்கூர் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஆகிய இரண்டு துறைகளை கவனிக்கவிருக்கிறார். பசுபதி பராஸுக்கு உணவு பதப்படுத்தும் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் எல்.முருகன்: சட்டக் கல்லூரி முதல் டெல்லி அரசியல் வரை! - கடந்துவந்த பாதை
அடுத்த கட்டுரைக்கு