Published:Updated:

3,677 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதா?

Return to Delhi
பிரீமியம் ஸ்டோரி
Return to Delhi

- தோலுரிக்கும் சி.ஏ.ஜி... சமாளிக்கும் முதல்வர்!

3,677 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதா?

- தோலுரிக்கும் சி.ஏ.ஜி... சமாளிக்கும் முதல்வர்!

Published:Updated:
Return to Delhi
பிரீமியம் ஸ்டோரி
Return to Delhi

செந்தில் ஆறுமுகம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

‘மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 3,677 கோடி ரூபாயை, தமிழக அரசு திருப்பி அனுப்பிவிட்டது’ என்று வெளியான செய்தி, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ‘கடும் நிதிப்பற்றாக்குறையில் உள்ள நம் மாநிலம், கிடைத்த பணத்தைத் திருப்பி அனுப்புவது எந்த வகையில் நியாயம்?’ என்ற கோபம் கலந்த கேள்வி, பலரின் மனதைத் துளைத்திருக்கும்.

தகவல் வெளியானவுடன், ‘`இந்த ஆட்சியின் போக்குக்கு இதுவே சாட்சி’’ என்று விளாசினார் ஸ்டாலின். `‘திருப்பி அனுப்பவில்லை. நிர்வாக நடைமுறைகள் அப்படி. தி.மு.க ஆட்சியிலும் இப்படித்தான் நடந்தது’’ என்று விளக்கம் அளித்தார் முதல்வர் பழனிசாமி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டாலின் சாடுகிறார்... முதல்வர் மறுக்கிறார். உண்மை நிலவரம் என்ன?

அரசியல் சாசனப் பிரிவுகள் 148, 151-ன்படி மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவுகள் முறையாக நிர்வகிக்கப்படுகின்றனவா என ஆய்வுசெய்து, அதிலுள்ள குறைபாடுகள், விதிமீறல்களை அறிக்கையாக அளிப்பது, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் (சி.ஏ.ஜி) கடமை. தமிழக அரசின் நிதி மேலாண்மை குறித்து சி.ஏ.ஜி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைதான் (2017-18 நிதியாண்டு குறித்தானது) மேற்குறிப்பிட்ட சர்ச்சைக்குக் காரணமாக அமைந்த ஆவணம். 162 பக்கமுள்ள அந்த ஆவணத்தில், தமிழக அரசின் நிதிநிர்வாக முறையின் தரத்தைத் தோலுரித்துக் காட்டும் ஏராளமான விஷயங்கள் புதைந்துள்ளன.

முதலில், அந்த 3,677 கோடி ரூபாய் விவகாரம்.

அறிக்கையின் 51-வது பக்கத்துக்குப் போவோம். `உள்ளாட்சி அமைப்புகள், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம், 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு முகமை ஆகியவற்றுக்கு, 2017-2018ல் தமிழக அரசு ஒதுக்கிய 5,920 கோடி ரூபாயில், 3,677 கோடி ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டது’ (Amount Surrendered) என்ற குறிப்பு, இந்தப் பக்கத்தில் இருக்கிறது. இதைத்தான் தமிழக அரசு தனக்கு வந்த பணத்தைத் திருப்பி ஒப்படைத்துவிட்டது என்று குறிப்பிட்டு பேசப்பட்டது. உண்மையில் இதன் அர்த்தம், குறிப்பிட்ட நிதியானது ‘மத்திய அரசிடமிருந்து வரவில்லை அல்லது மாநில அரசால் பயன்படுத்தப்படவில்லை’ என்பதுதான். ஆனால், மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நிலுவைத் தொகை மற்றும் மாநில அரசு பயன்படுத்தாமல்விட்ட தொகை அனைத்தையும் ‘திருப்பி ஒப்படைக்கப்பட்டது’ என்ற கணக்கில்தான் எழுதுகிறது சி.ஏ.ஜி.

எடுத்துக்காட்டாக, 14-வது நிதிக்குழு பரிந்துரையின்படி 2017-2018ல் கிராம ஊராட்சிகளுக்குத் தரவேண்டிய அடிப்படை மானியமான 1,516 கோடி ரூபாயில், 758 கோடி ரூபாய், அதாவது சரிபாதியைத்தான் மத்திய அரசு விடுவித்திருந்தது. மீதி உள்ள 758 கோடி ரூபாயானது சி.ஏ.ஜி அறிக்கையில் ‘திருப்பி ஒப்படைக்கப்பட்டது’ என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உள்ளாட்சித் தேர்தலை உரியகாலத்தில் நடத்தாமல்போனதைத் தவிர, தமிழக அரசு மீது குறை சொல்ல ஒன்றுமில்லை. தாமதப்படுத்தியது மத்திய அரசுதான். ஆக, உள்ளாட்சி குறித்தான இரண்டு திட்டங்கள், ‘மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கப் பெறவில்லை’ என்ற அடிப்படையில் அமைகிறது.

‘அப்படியானால், சி.ஏ.ஜி அறிக்கை ஒரு பொருட்டே இல்லையே!’ என்று அவசரப்பட்டு முடிவுக்கு வரவேண்டாம். 51-ம் பக்கத்தில் உள்ள ஏழு திட்டங்களில் மீதி உள்ளவற்றையும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.

2017-2018 தமிழக பட்ஜெட்டில், `பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் (கிராமங்களில், இதை `மோடி வீடு’ என்று சொல்கிறார்கள்!) 1.76 லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு, 3,082 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்பட்டது என்று சி.ஏ.ஜி ஆய்வுசெய்கிறது. முடிவு அதிர்ச்சியளிக்கிறது. 3,082 கோடி ரூபாய் திட்டத்துக்குச் செலவழித்த தொகை, வெறும் 728 கோடி ரூபாய் மட்டுமே. மீதம் உள்ள 2,354 கோடி ரூபாய் ஒதுக்கப்படவேயில்லை. இது, ‘திருப்பி ஒப்படைக்கப்பட்டது’ என்ற தலைப்பில் காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கும் நிதி தரவில்லையா? இல்லை. சி.ஏ.ஜி அறிக்கையில் உள்ள தமிழக அரசின் விளக்கம் என்னவெனில், ‘பயனாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை அல்லது பயனாளிகளைக் கண்டறிவதில் தாமதம்’ என்பதுதான். இது, ‘மாநில அரசிடம் உள்ள நிதி பயன்படுத்தப்படவில்லை’ என்ற வகையைச் சேர்ந்தது.

‘வீடு வேண்டும்’ என்ற கோரிக்கையோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆண்டுக்கணக்கில் மனு கொடுத்து அலுத்துப்போன மக்கள் லட்சக்கணக்கில் இருக்கும் ஊரில், ‘பயனாளிகளைக் கண்டறிவதில்’ நிர்வாகத் தாமதம்! இதனால் 2,354 கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்படாமல், அரசின் கணக்குப் புத்தகத்தில் வெவ்வேறு தலைப்புகளுக்கு இடமாற்றம் செய்து எழுதப்படுவது கொடுமையிலும் கொடுமை. மக்களுக்குத் தேவையிருக்கிறது... பட்ஜெட்டில் பணம் இருக்கிறது... ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அவதிப்படுவதோ பொதுமக்கள்தான்!

நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட நிர்வாகக் காரணத்தால், 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 1,000 கோடி ரூபாயில் 248 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. மந்தகதியில் நடக்கும் பணிகளால், உலக வங்கியின் நிதி உதவியோடு நடைபெறும் கிராமப்புற மேம்பாட்டுப் பணிக்கு ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாயில் 98 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. மகளிர் மேம்பாட்டுத் திட்டத்திலும், இதே மந்தகதிதான். ஒதுக்கப்பட்டது 27 கோடி ரூபாய். செலவழிக்கப்பட்டது, வெறும் 3 கோடி ரூபாய்தான்!

இன்னும் பல திட்டங்களில் மக்களின் வரிப்பணத்தை, தமிழக அரசு எப்படி கையாண்டது என்று புட்டுப்புட்டு வைக்கிறது சி.ஏ.ஜி.

அறிக்கையில் பக்கம் 56-ல் `தன்னாட்சி கல்வி நிறுவனங்களுக்கு தாராளமாக ஒதுக்கிய நிதியானது முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வுசெய்ய, தமிழக அரசு தவறிவிட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதியுதவி பெற்ற 308 நிறுவனங்கள் தங்களின் ஆண்டறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து ஆண்டறிக்கை சமர்ப்பிக்காத நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 111. ஓர் ஆண்டின் அறிக்கையைக் கொடுக்கா விட்டால், அடுத்த ஆண்டு நிதியுதவி கிடையாது என்று அறிவிக்க, தமிழக அரசைத் தடுப்பது எது? அலட்சியமா, சட்டத்துக்குப் புறம்பான சமரசமா?

2003-க்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 16 ஆண்டுகள் ஆகியும், இந்தத் திட்டத்தின்கீழ் சேர்ந்த பென்ஷன் தொகை, மத்திய அரசின் என்.பி.எஸ் திட்டத்துக்கு மாற்றம் செய்யப்படவில்லை. தமிழக அரசு தன்வசம் வைத்துள்ள 23,392 கோடி ரூபாய் பென்ஷன்தொகையை முறையாக முதலீடுசெய்து நிர்வகிக்காத காரணத்தால், 797 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அறிக்கையில் பக்கம் 63 என்ன சொல்கிறது?

3,677 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதா?

அலுவலகங்களில் கணக்கு எழுதும்போது முக்கியச் செலவுகளை அந்தந்த இனங்களில் எழுதிவிட்டு, எந்த இனத்திலும் சேராத செலவை ‘பற்பல செலவுகள்’ அல்லது ‘பிற செலவுகள்’ என எழுதுவோம். இந்தத் தொகை மிகச்சிறியதாக இருக்கும். அதுபோல் அரசுச் செலவினங்களில் ‘800 - பிற செலவுகள்’ என்ற கணக்கு உண்டு. இந்தக் கணக்கில் மட்டும் 9,932 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வெள்ளத் தடுப்பு திட்டங்கள், தொழில் துறை, குடும்பநலத் துறை போன்ற ஏராளமான திட்டங்கள் இந்தக் கணக்கின்கீழ் எழுதப்பட்டுள்ளன. இதை `நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை இல்லாத செயல்’ என்று குறிப்பிடுகிறது சி.ஏ.ஜி. இதேபோல்தான் ‘002 - எதிர்பாரா செலவுகள்’ என்ற கணக்கின்கீழும் ஏராளமான நிதி செலவிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஊழல் மற்றும் முறைகேட்டுக்கான வழி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

`நிதியாண்டின் இறுதி மாதத்தில், அதாவது மார்ச் மாதத்தில் திட்டப்பணிகளை அவசரகதியில் முடிக்க முயற்சி செய்யக் கூடாது’ என்கிறது தமிழ்நாடு நிதிச் சட்ட வரையறையின் பிரிவு 39. இந்த விதி மதிக்கப்படுவதில்லை. 2017 பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதி கட்ட ஒதுக்கப்பட்ட 5.7 கோடி ரூபாயில் 4.87 கோடி ரூபாயானது (84 சதவிகிதம்) 2018 மார்ச்சில் செலவிடப்பட்டுள்ளது. அவசரகதியில் செய்யப்படும் பணியானது, எவ்வளவு தரமாக இருக்கும் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். இதுபோல் பல உதாரணங்களை அடுக்குகிறது அறிக்கை. என்ன செய்ய... ‘குறித்த காலத்துக்குள் பணியை முடிக்க வேண்டும். அப்படி முடிக்காவிடில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பது போன்ற விதிமுறைகள் நம்மிடம் இல்லையே!

அரசியல் சாசனப் பிரிவு 151(2)-ன்படி கவர்னரின் மூலமாக இந்த சி.ஏ.ஜி அறிக்கையானது சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதன்மீது, தமிழக அரசை முறையான நடவடிக்கை எடுக்க வைக்கவேண்டியது எதிர்க்கட்சியின் கடமை.

கடும் நிதிப்பற்றாக்குறை காரணமாக, ‘ஒருவர் இறந்த பிறகுதான் புதிதாக ஒருவர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்’ என்ற கொடுமையான ‘கொள்கை முடிவை’ வாய்மொழி உத்தரவு மூலம் அமல்படுத்திவரும் தமிழக அரசு, இத்தனை நூறு கோடிகளை அலட்சியமாகச் செலவுசெய்வது நியாயமா?

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கி எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வரை நிதித்துறைச் செயலாளராகப் பணியாற்றிய சண்முகம் ஐ.ஏ.எஸ்-தான் தற்போது தலைமைச் செயலாளராக இருக்கிறார். இப்போது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் சி.ஏ.ஜி அறிக்கையானது, இவர் நிதித்துறைச் செயலாளராக இருந்து தாக்கல் செய்த பட்ஜெட் தொடர்பானதுதான். இருந்தபோதும், இவரின் கடந்தகால அனுபவங்களை முறையாகப் பயன்படுத்தி அடுத்த சி.ஏ.ஜி அறிக்கையிலாவது இதுபோன்ற முறைகேடுகள், குறைபாடுகளுக்கு இடமளிக்காமல் பார்த்துக்கொள்வது ஆட்சியாளர்களின் பொறுப்பு.