அமெரிக்க காங்கிரஸில், செனட்டர் ஆயிஷா வஹாப் நேற்று கலிஃபோர்னியாவில், பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களில் சாதியைச் சேர்க்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். ஆளுநரால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சாதிய பாகுபாடு இல்லாத முதல் அமெரிக்க மாநிலமாக கலிஃபோர்னியா மாறும்.
இந்த நடவடிக்கையானது உலகின் மிகபெரிய தொழில்நுட்ப நிறுவங்களின் தாயகமாக இருக்கும் கலிஃபோர்னியாவில் வசிக்கும் தெற்காசிய மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.

இந்த மசோதாவை பற்றி பேசிய செனட்டர் வஹாப், “இந்த வரலாற்றுச் சட்டம் தொழிலாளர்களின் உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பற்றியது. நிறுவனங்கள் தங்கள் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளில் சாதிப் பாகுபாடுகளை நிலைநிறுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். அப்படிச் செய்தால் அது சாதி அடிப்படையிலான பாகுபாடு சட்டத்துக்கு எதிரானது என்பதை நாங்கள் தெளிவாக தெரிவிக்கிறோம்’’ எனப் பேசியுள்ளார்.
கலிஃபோர்னியா பல ஆண்டுகளாக சாதிப் பாகுபாடு தொடர்பான பல வழக்குகளைக் கண்டுள்ளது. அமெரிக்காவில், சாதியால் ஒடுக்கப்பட்ட நான்கில் ஒருவர் உடல் மற்றும் வாய்மொழி வன்முறையை எதிர்கொள்வதை ஒடுக்கப்பட்டவர்கள் உரிமைகள் அமைப்பான சமத்துவ ஆய்வகம் அதன் தரவுகளின் மூலம் கண்டறிந்துள்ளது.
மேலும், மூன்றில் ஒருவர் கல்வி பாகுபாடு, மற்றும் மூன்றில் இருவர் பணியிட பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியாவில், தொழில்நுட்பம், கல்வி, கட்டுமானம், உணவகங்கள், வீட்டு வேலை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழில்களில் சாதிப் பாகுபாடு ஏற்படுகிறது. மேலும் அங்கு, கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல், பாரபட்சம், ஊதிய திருட்டு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட சாதியினர் எதிர்கொண்டு வருகின்றனர்.
சாதிப் பாகுபாட்டை தடை செய்த முதல் அமெரிக்க நகரமாக சியாட்டில் வரலாறு படைத்து ஒரு மாதமே ஆன நிலையில், தற்போது முதல் மாநிலமாக கலிஃபோர்னியா சாதித் தடை மசோதாவை கொண்டுவந்துள்ளது.