Published:Updated:

`ஒரு கவர்னர் இப்படிச் செய்யலாமா?' - கிரண்பேடிக்கு எதிராக களமிறங்கிய அமைப்புகள்

பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகத்தைப் பாராட்டிய சர்ச்சையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மீது பல்வேறு அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

கவர்னர் கிரண் பேடி
கவர்னர் கிரண் பேடி

கர்நாடக மாநிலம் கல்லட்காவில் இருக்கிறது ஸ்ரீராமா வித்யாகேந்திர மேல்நிலைப்பள்ளி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான பிரபாகர் பட் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பள்ளியில் கடந்த 15-ம் தேதி ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் சதானந்த கௌவுடாவும் புதுச்சேரியின் கவர்னர் கிரண்பேடியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கிரண் பேடி  - பிரபாகர் பட்
கிரண் பேடி - பிரபாகர் பட்
times of india

அப்போது விழா மேடையில் பாபர் மசூதி படம் அச்சிடப்பட்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளை நிற மேல் சட்டையுடனும் காவி நிறத்தில் அரைக்கால் சட்டையுடனும் அங்கு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாபர் மசூதி பேனரை நோக்கி ஓடிச்சென்று, கையில் வைத்திருந்த பொருள்களைக் கொண்டு தாக்கத் தொடங்கினர்.

மேலும் ஸ்ரீராமஜெயம், ஜெய்ஹனுமான் என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அந்த மாணவர்கள் இந்தியா மற்றும் ராமர் கோயில் வடிவத்தில் அணிவகுத்து நின்றனர். பாபர் மசூதி இடிப்பு நிகழ்வைக் கொண்டாடுவதைப்போன்று அமைக்கப்பட்டிருந்தது அந்த நாடகம். மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்னிலையில் நடைபெற்ற அந்த நாடகத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

பாபர் மசூதி
பாபர் மசூதி

அதேசமயம் அந்த மாணவர்களின் கலைத்திறமையைப் பாராட்டிய கிரண் பேடி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ``ஸ்ரீராமா வித்யாகேந்திர மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். சுமார் 3,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றச் செயல் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் சர்ச்சைக்குரிய அந்த நாடகத்தைப் பாராட்டிய கிரண்பேடியின் செயல் சமூக அமைப்புகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

சர்ச்சைக்குரிய நாடகக் காட்சி
சர்ச்சைக்குரிய நாடகக் காட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராஜாங்கம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ``400 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர் இடித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் வழங்கப்பட்ட வேறு ஒரு தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதச் செயல் என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான, கலவரத்தை ஏற்படுத்துகின்ற இச்சம்பவத்தை கர்நாடக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஸ்ரீராம வித்யாகேந்திரா உயர்நிலைப் பள்ளியில் மசூதி இடிப்பு நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மதவெறியைத் தூண்டும் அந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலைமையேற்று விழாவை நடத்தியிருக்கிறார்.

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா
விகடன்

நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் கவர்னர் ஈடுபடுவதை மக்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மத்திய அரசு கிரண்பேடி அவர்களை உடனே பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். புதுச்சேரி அரசும் ஆளுநர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பேராசிரியருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, ``அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கடந்த நவம்பர் 9 அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், டிசம்பர் 6, 1992-ல் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது சட்டத்தை மீறிய மிக மோசமான செயல் என்று குறிப்பிட்டிருந்தது.

கௌரி லங்கேஷ்
கௌரி லங்கேஷ்

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் கல்லட்கா என்ற ஊரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரபாகர் பட் நடத்தும் ஒரு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பாபர் பள்ளிவாசல் இடிப்பு நிகழ்வை மாணவர்கள் நடத்திக் காட்டியிருக்கின்றனர். இந்த நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பங்கு கொண்டதுடன், பாபர் பள்ளிவாசல் இடிப்பு குறித்த நாடகம் இடம்பெற்றதால்தான் அனைத்து மாணவர்களும் ஆண்டு விழாவில் முழுமையாகப் பங்குகொண்டனர் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மிக மோசமான சட்டமீறல் என்று உச்ச நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வை மாணவர்கள் நடித்துக் காட்டும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டது மட்டுமல்லாமல், துணை நிலை ஆளுநர் நிலையில் இருக்கும் கிரண்பேடி அதைப் புகழ்ந்தும் பதிவிட்டுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின்பால் உறுதி கொண்டு ஆளுநர் பதவி ஏற்றுள்ள கிரண்பேடியின் செயல்பாடுகள் அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக உள்ளது. வெளிப்படையாகவே வரலாறு காணாத வன்செயலுக்கு ஆதரவு அளித்ததின் மூலம் அவர் துணை நிலை ஆளுநர் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளார். அதனால் கிரண்பேடி உடனடியாக ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். குடியரசுத் தலைவர் தலையிட்டு கிரண்பேடியை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கக் கோரும் கடிதம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது” என்றார். இதுகுறித்து விளக்கம் கேட்டு கவர்னர் கிரண் பேடியை வாட்ஸ்-அப் மூலம் அணுகினோம். ஆனால், அவர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

பிரபாகர் பட்
பிரபாகர் பட்

ஸ்ரீராமா வித்யாகேந்திரா பள்ளி மற்றும் பிரபாகர் பட் குறித்து கௌரி லங்கேஷ்வர்:

2017-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ், ஸ்ரீராமா வித்யாகேந்திர மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி பிரபாகர் பட் குறித்தும் எழுதியிருக்கிறார். அதில், ``பிரபாகர் பட் நடத்திவரும் இரு பள்ளிகளும் இந்துத்துவா தவழும் இடமாக அறியப்பட்டவை. ஆர்.எஸ்.எஸ் சீருடைகள், கையில் கம்புகள், இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகத்தினர் மீதான குருட்டுத்தனமான வெறுப்பு போன்றவற்றின் மூலமாக, இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் புகுத்தப்படுகிறது. இந்தப் பள்ளியில் இருந்துமட்டும் சுமார் 3,000 மாணவர்கள் அறமற்ற முறையில் சீரழிக்கப்பட்டிருக்கின்றனர். அதன்மூலம் தங்களது மறைமுக நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக்கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.