Published:Updated:

அமித் ஷா வருகையால் அச்சம்; தி.மு.க புள்ளிகள் டார்கெட் - பா.ஜ.க-வின் திட்டம் என்ன?

அமித் ஷா
அமித் ஷா

``பூச்சாண்டியைப் பார்த்தாலோ, சர்வாதிகாரியைப் பார்த்தாலோதான் யாருக்கும் பயம் வரும். அமித் ஷா வருகையால் தமிழக எதிர்க்கட்சிகளுக்கு எந்த பயமும் இல்லை” என்று தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகிறார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வையும், எதிர்க் கட்சியான தி.மு.க-வையும்விட பா.ஜ.க-தான் மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரையை பா.ஜ.க தொடர்ந்து நடத்திவருகிறது. இந்தநிலையில், மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் (நவ. 21) வரவிருக்கிறார்.

எல்.முருகன்
எல்.முருகன்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், `அமித் ஷாவின் தமிழக வருகை எங்களுக்கு உற்சாகத்தையும், எதிர்க்கட்சிகளுக்கு பயத்தையும் ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டார். `தேர்தல் வியூகத்தில் அமித் ஷா வல்லவர். அவர் வகுத்துக்கொடுத்த வியூகத்தால்தான் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது’ என்று சொல்லப்படுவதுண்டு. பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்ற பிறகு, இன்னும் சில மாதங்களில் தேர்தலை எதிர்கொள்ளப்போகிற மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமித் ஷா கவனம் செலுத்திவருகிறார்.

கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமாக இருந்த நேரத்தில்கூட, மேற்குவங்கத்தில் காணொளிக் கூட்டங்களை டெல்லியில் இருந்தவாறு நடத்திய அமித் ஷா, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மேற்குவங்கத்துக்குப் பயணம் சென்றிருந்தார். மேற்குவங்கத்தின் மேற்குப் பகுதியிலுள்ள பன்குரா சென்ற அமித் ஷா, சுதந்திரப் போராட்ட வீரரான பழங்குடி மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்தார். ஜார்கண்ட், பீகார் மற்றும் இந்த மாநிலங்களையொட்டிய மேற்குவங்கப் பகுதிகளில் பெரும் மதிப்புக்குரியவராக பிர்சா முண்டாவை பழங்குடி மக்கள் நினைக்கிறார்கள்.

அமித் ஷா
அமித் ஷா

அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, `மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிரதமர் மோடி தலைமையில், மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறிய அமித் ஷா, ``விவசாயிகள், பழங்குடிகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோருக்கான மத்திய அரசின் திட்டங்களை மம்தா பானர்ஜி அரசு நிறுத்திவிட்டது’’ என்று குற்றம்சாட்டினார்.

மேற்குவங்கப் பயணத்துக்கு அடுத்ததாக வரும் 21-ம் தேதி தமிழகம் வரவிருக்கும் அமித் ஷா, பா.ஜ.க-வின் உயர்மட்டக்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்கவிருக்கிறார். அமித் ஷாவின் இந்த வருகையைத்தான், எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று எல்.முருகன் கூறினார். இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

``ஜனநாயக நாட்டில் ஒரு சர்வாதிகாரியையோ, ஜனநாயக விரோத சக்திகளையோ பார்த்தால்தான் பயப்பட வேண்டும். வேறு எதைப் பார்த்தும், யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டியதில்லை. 2019-ம் ஆண்டு, மே மாதம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பு தமிழகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தார். அப்போதும், அமித் ஷா வந்து தமிழக அரசியலைப் புரட்டிப்போடுவார், கூட்டணிகள் மாறும் என்றெல்லாம் பா.ஜ.க-வினர் சொன்னார்கள். ஆனால், என்ன நடந்தது... ஓரிடத்தில்கூட பா.ஜ.க-வால் வெற்றிபெற முடியவில்லை. 38 இடங்களில் மகத்தான வெற்றியை தி.மு.க கூட்டணிக்குத் தமிழக மக்கள் வழங்கினார்கள். எனவே, அவரைப் பார்த்து பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இவர் வருவதால் எங்கள் கூட்டணியிலிருக்கும் கட்சிகளை இழுத்துக்கொண்டு போய்விடுவார்களா... எங்களை அவரால் என்ன செய்துவிட முடியும்... ஒன்றும் செய்துவிட முடியாது. அமித் ஷாவைவைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டுக்கு அமித் ஷா வந்தபோது, `தலையில் (காஷ்மீரில்) ஆபரேஷனை அவர் (அமித் ஷா) முடித்துவிட்டார். கால் (தமிழ்நாடு) மட்டும்தான் பாக்கி. காலில் ஆபரேஷனை எளிதாக முடித்துவிடுவார்’ என்று பா.ஜ.க-வினர் சொன்னார்கள்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஆனால், என்ன நடந்தது... ஃபுட் பாலை உதைப்பதைப்போல, பா.ஜ.க-வைத் தமிழ்நாடு உதைத்துவிட்டது. எனவே, இப்போதும் அமித் ஷா வருவதால் தமிழக அரசியலில் எதுவும் நடந்துவிடாது. எங்களைப் பொறுத்தவரை,`நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன...’ என்றுதான் இதைப் பார்க்கிறோம்” என்றார்.

இது குறித்து பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம். ``ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக, அ.தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்வதைவிட பா.ஜ.க-வை எதிர்த்துதான் தி.மு.க அரசியல் செய்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஸ்டாலினுக்கு `மோடி ஃபோபியா’ இருக்கிறது. அதுதான், தி.மு.க-வை இரவும் பகலும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான், எதற்கெடுத்தாலும் `பா.ஜ.க... பா.ஜ.க...’ என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பயம், அமித் ஷா வருகையால் அதிகமாகும். அதைத்தான் எங்கள் மாநிலத் தலைவர் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் தேர்தல் களம் என்பது, `அமித் ஷா வருகைக்கு முன்... அமித் ஷா வருகைக்குப் பின்...’ என்று மாறும்.

ஸ்டாலின், சீனிவாசன்
ஸ்டாலின், சீனிவாசன்

தி.மு.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் அடிப்படை நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு எங்களுக்கு அமித் ஷா வழிகாட்டுவார். அதற்காக அவரின வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

வேல் யாத்திரை: அ.தி.மு.க அரசின் அனுமதி மறுப்பு... அரசியல் பின்னணி என்ன?

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதா கிருஷ்ணனிடம் பேசினோம். ``எந்த மாநிலத்துக்குப் போனாலும் ஆட்சியை மாற்றிவிடுவார் என்று அமித் ஷாவைப் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அதன் அடிப்படையில், எல்.முருகன் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அவரது வருகையால் பெரிதாக எந்த மாற்றமும் வர வாய்ப்பு இல்லை. குஜராத் தொடங்கி பீகார் வரையில் பா.ஜ.க-வினர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் மெத்தனப்போக்கு உட்பட பல காரணங்கள் இருக்கின்றன.

தங்களின் சமூக ஊடக பலத்தை வைத்துக்கொண்டு, அமித் ஷா உட்பட சில தலைவர்களை பெரிய ஆளுமைகளாகக் கட்டமைக்கிறார்கள். அதனால், தமிழ்நாட்டில் அவர்களின் கட்சியின் வளர்ச்சிக்கு எந்தப் பலனும் இல்லை. `எதிர்க்கட்சிகளுக்கு பயம்’ என்று எல்.முருகன் கூறுவது, எதிர்க்கட்சிகளுக்கான செய்தி அல்ல. அது, தங்கள் கட்சியைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு பெரிய இமேஜ் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் யாரும் தேர்தலைச் சந்திக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. எனவே, தி.மு.க-வைப் பணம் கொடுக்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்கிறது. அதற்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். மம்தா பானர்ஜியின் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த முகுல் ராய் போன்றவர்களை இழுத்துவந்ததைப்போல, தமிழகத்தில் வழக்குகளில் சிக்கியிருக்கும் தி.மு.க-வின் முக்கியப்புள்ளிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கு பா.ஜ.க-வினர் முயலலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு