Published:Updated:

`10 நிமிடத்தில் ட்ரோல்..!' - ஜிலேபி விமர்சனத்தால் டென்ஷனான கம்பீர்

இந்த நபரைப் பார்த்தீர்களா? அவர் கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடுவதைக் காண முடிந்தது. டெல்லியில் அனைவரும் அவரைத் தேடுகிறார்கள்.

கம்பீர்
கம்பீர்

தலைநகர் டெல்லி சில ஆண்டுகளாகக் காற்று மாசு பிரச்னையால் அவதியுற்று வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதற்கு சரியான தீர்வு கிடைத்தபாடில்லை. ஒவ்வோர் ஆண்டும் டெல்லி மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது. நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. “ஒவ்வோர் ஆண்டும் டெல்லி மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது. நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் இப்படி நடக்கும்போது இந்தக் கேள்வி நம் முன் எழுகிறது. மக்கள் சாகிறார்கள். இனிமேலும் விதிமீறல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மத்திய மாநில அரசுகள் குறை சொல்வதை நிறுதிவிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுங்கள்” என உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கூறியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதையடுத்து நாடாளுமன்ற உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு நவம்பர் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் டெல்லி மாநகர அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தவிர, வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததால் திட்டமிட்டபடி அந்தக் கூட்டமும் நடக்கவில்லை. சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் டெல்லி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யானார். கம்பீர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இந்தூரில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராகக் கலந்துகொண்டார். இதுதொடர்பாக வி.வி.எஸ்.லஷ்மண் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. கம்பீர், லஷ்மண் ஆகியோர் ஜிலேபி சாப்பிடும் புகைப்படம் அது.

`எமர்ஜென்சியை விட மோசம்'- காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். “கம்பீர் இந்தூரில் கொண்டாட்டமாக இருக்கிறார். டெல்லி எம்.பி-யான அவர், காற்று மாசு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்" என்று ஆம் ஆத்மி கட்சி விமர்சித்தது. அதேபோல் கம்பீரை காணவில்லை என சில இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் “இந்த நபரைப் பார்த்தீர்களா? அவர் கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடுவதைக் காண முடிந்தது. டெல்லியில் அனைவரும் அவரைத் தேடுகிறார்கள்” என வாசகங்கள் இடம்பெற்றிடுருந்தன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், “நான் ஜிலேபி சாப்பிட்டதால் டெல்லி காற்று மாசு அதிகரித்தது என்றால் ஜிலேபியை முற்றிலுமாக கைவிடத் தயார். அவர்கள் 10 நிமிடத்தில் என்னை ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். காற்று மாசுப்பாட்டை குறைப்பதில் இவ்வளவு முயற்சி எடுத்திருந்தால் நாங்கள் நிம்மதியாக சுவாசித்திருப்போம்” என்றார்.