சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பி.கே - டி.எம்.கே... வெல்லுமா வியூகம்?

பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரசாந்த் கிஷோர்

2014-ம் ஆண்டுக்குப் பிறகு, நிதிஷ்குமாருக்குப் பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். அங்கு அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

`2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக நம்முடன் ஐ-பேக் நிறுவனம் இணைந்திருக்கிறது’ என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் தட்டியதும் பலரும் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினர். ‘பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வின் அரசியல் ஆலோசகராகப் பணிபுரியப்போகிறார்’ என்பது அறிந்த செய்திதான். ஆனாலும் அது அதிகாரபூர்வமான அறிவிப்பாக வெளியானதுதான் ஆச்சர்யத்துக்குக் காரணம்.

 மு.க.ஸ்டாலின்,  பிரசாந்த் கிஷோர்
மு.க.ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

யார் இந்தப் பிரசாந்த் கிஷோர்? பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான உலக சுகாதார நிறுவனத்தில் பணியாற்றிவந்தவர், இன்றைக்கு இந்தியாவே மலைத்துப்பார்க்கும் மனிதராகியிருக்கிறார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் அசுரத்தனமான வெற்றிக்குப் பிறகே பி.கே என்கிற பெயர் பிரபலமானது. அந்த வெற்றியைத் தனக்கான வெற்றியாக மோடி கருதிக்கொண்டிருந்த நேரத்தில், அதில் பங்குபோட பிரசாந்த் கிஷோர் முயல்வதை அறிந்து அவரைக் கழற்றிவிட்டார் மோடி.

மோடிக்காகத் தேர்தல் உத்தியை வகுக்க ஆரம்பிக்கப்பட்ட சி.ஏ.ஜி என்கிற நிறுவனத்தை அப்போதே மூடிவிட்டு அடுத்தகட்டமாக அவர் ஆரம்பித்ததுதான் ஐ-பேக் நிறுவனம். கடந்த ஆறு ஆண்டுகளில் பல கட்சிகளுக்குத் தேர்தல் உத்தியை வகுத்துக்கொடுத்த இந்த நிறுவனம் தேர்தல் அரசியலை மட்டுமே பிரதானமாகக் கொண்ட மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக இன்று உருவெடுத்திருக்கிறது.டெல்லியில் கெஜ்ரிவால் பெற்றுள்ள மெகா வெற்றியிலும் பி.கே-யின் பங்கு பேசப்படுகிறது. அதேநேரம், கிஷோர் சந்தித்த சவால்களும் சரிவுகளும்கூட உண்டு.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு, நிதிஷ்குமாருக்குப் பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். அங்கு அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் பி.கே-யின் பிரசார உத்தி தோற்றது. அகிலேஷ் மண்ணைக் கவ்வினார். குஜராத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக வேலைபார்த்தார் பிரசாந்த். அதுவும் வேலைக்கு ஆகவில்லை. தோல்வியிலிருந்து இன்னமும் மீளவில்லை குஜராத் காங்கிரஸ்.

தன் உத்தியை மாற்றினார் பிரசாந்த் கிஷோர். ஆந்திராவில் அதிரடியாகக் களமிறங்கினார். ஜெகன்மோகன் ரெட்டியை ஜெயிக்கவைத்தார். இங்கேதான் பி.கே

மீது சந்தேகப்பார்வை விழுந்தது. ஜெயிக்கும் குதிரையில்தான் அவர் பந்தயம் கட்டுவார் என்று பட்டியலிட்டார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்தக் கருத்தை வலுப்படுத்தும்படி இன்னொரு விஷயமும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

டெல்லியில் ஆம் ஆத்மிக்காகப் பணியாற்றுவதற்கு டிசம்பரில்தான் ஒப்பந்தம் போட்டார் கிஷோர். பிப்ரவரியில் பெருவெற்றி பெற்றிருக்கிறார் கெஜ்ரிவால். தேர்தல் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரைவிட கெஜ்ரிவாலின் ஆட்சியும் நலத்திட்டங்களும்தான் காரணம் என்பவர்களும் உண்டு. ஆனாலும் அடுத்தடுத்து ஜெயிப்பவர்களுக்குப் பக்கத்தில்தான் நிற்கிறார் பிரசாந்த்.

கிஷோரின் தமிழக என்ட்ரிக்குப் பின்னால் பல குழப்பங்களும் நடந்துள்ளன. அவரைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்ததே அ.தி.மு.க-தான். அந்தக் கட்சியின் தம்பிதுரையும், ரபிஃபெர்னாட்டும் கடந்த ஆண்டே டெல்லியில் வைத்து கிஷோரைச் சந்தித்து அ.தி.மு.க-வுக்குப் பணியாற்ற அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டு தமிழகத்தில் தன் ஆட்கள் மூலம் கள ஆய்வும் நடத்தினார். ஆனால் அந்த முடிவுகளை அ.தி.மு.க தலைமை யிடம் கொடுத்துவிட்டு, அடுத்தகட்டமாக மக்கள் நீதி மய்யத்திற்குப் பணியாற்ற ஆரம்பித்தார். கமலிடம் பேசி, கட்சிக்குள் சில மாற்றங்களையும் கொண்டுவந்தார். என்ன காரணமென்று தெரியவில்லை. அங்கிருந்தும் கழன்றுகொண்டார்.

வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கே அதிக வெற்றிவாய்ப்பு இருப்பதை அறிந்து, அவர் உள்ளே நுழைந்திருப்பதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. தி.மு.க-வுடன் 78 கோடி ரூபாய்க்கு ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகத் தெரிகிறது. அண்ணா நகரில் தனி அலுவலகம் செயல்படத் தொடங்கிவிட்டது. பணிகளைக் கவனிக்க இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க-வுக்கு ஐபேக் நிறுவனம் பணியாற்று வதில் உள்ள நன்மைகளை நம்மிடம் பட்டியலிட்டார் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர். ‘‘சமூகவலைதளங்களைத் தேர்தலுக்குப் பயன்படுத்துவதில் பி.கே கில்லாடி. தி.மு.க-வின் ஐ.டி.விங் ஓரளவுக்குச் செயல்பட்டாலும் தேர்தலுக்கு அதை மட்டுமே நம்பமுடியாது. ஸ்டாலினைத் தனித்துவமாக அடையாளப்படுத்துவதற்கான திட்டத்தை பிரசாந்த் வகுப்பார். ஏற்கெனவே தமிழக நிலவரங்கள் குறித்துக் கள ஆய்வு செய்திருப்பதால் அதை வைத்து எளிதாக வாக்காளர்களை தி.மு.க பக்கம் திருப்பும் உத்தியைச் செய்துவிடுவார். நவீனயுகத்தில் இது தவிர்க்கமுடியாதது, தவிர்க்கக்கூடாதது” என்றார்.

Prashant Kishore
Prashant Kishore

பிரசாந்த்தை வைத்துப் பணியாற்றுவதில் உள்ள சில சிக்கல்களையும் விவரிக்கிறார் மற்றொரு நிர்வாகி.

‘‘கிஷோர் எந்தக் கட்சிக்குப் பணியாற்றினாலும் அந்தக் கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர் களைவிட தனக்கு முன்னிலை கொடுக்கவேண்டும் என்று விரும்புவார். தி.மு.க-வில் அப்படி ஒருநிலை வந்தால் கட்சிக்குள்ளே பெரும் கொந்தளிப்பு ஏற்படும். தலைவரைத் தவிர யாரும் மாவட்டச்செயலாளருக்கு உத்தரவிடுவதை விரும்பமாட்டார்கள். ஆனால் கிஷோர் அந்தப் பவர் தனக்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளார். தி.மு.க-வின் ரகசியம் எந்த அளவுக்கு இனிமேல் காக்கப்படும் என்று தெரியவில்லை. இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழி மட்டுமே கிஷோருக்குத் தெரியும். வடஇந்திய அரசியலுக்குப் பழக்கப்பட்ட கிஷோரால், திராவிட அரசியலில் ஊறிப்போன தமிழகத் தேர்தல்களத்தைக் கணிப்பதும் கடினம். அதேநேரம், தி.மு.க இப்போது நிதி நெருக்கடியில் இருக்கிறது. கிஷோர் பணியாற்ற ஒப்பந்தம் செய்திருப்பதால் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தி.மு.க-வுக்குத் தாராளமாக நிதியை வழங்கும் வாய்ப்பிருக்கிறது!’’ என்றார் அவர்.

பி.கே சூரியனை உதிக்கவைப்பாரா என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.