உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் உள்ளதாகவும், அந்த மோதல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் பிளவுபடுத்திவருவதாகவும் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு, பிரியங்கா காந்தி பதிலடி கொடுக்கும்விதமாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரியங்கா காந்தி, ``என் சகோதரர் ராகுல் காந்தி எனக்காக உயிரையும் தியாகம் செய்வார். நானும் அவருக்காக என் உயிரைத் தியாகம் செய்வேன். எங்களுக்கு இடையில் எந்தவிதமான மோதலும் கிடையாது. பாஜக-வில் அவருக்கும் (யோகி), பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் இடையேதான் மோதல் இருக்கிறது. அந்த மோதல் காரணமாகத்தான் இவர் இப்படிக் கூறுகிறார்'' எனக் கூறினார்.