Published:Updated:

``சனாதனத்தைத் தீண்டாமையோடு ஒப்பிட முடியுமா..?!” - வானதி சீனிவாசன் சுளீர்

வானதி சீனிவாசன்

``தீண்டாமையைப் பேசுவதுதான் சனாதனம் என்றால், அந்த சனாதனத்தை நாங்களும் எதிர்க்கிறோம்” - வானதி சீனிவாசன்

Published:Updated:

``சனாதனத்தைத் தீண்டாமையோடு ஒப்பிட முடியுமா..?!” - வானதி சீனிவாசன் சுளீர்

``தீண்டாமையைப் பேசுவதுதான் சனாதனம் என்றால், அந்த சனாதனத்தை நாங்களும் எதிர்க்கிறோம்” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

`பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை...’ என்ற குற்றச்சாட்டு, ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரங்கேறிய தகிக்கும் காட்சிகள் என அரசியல் தடதடக்கிறது. இந்தச் சூழலில், அனைத்துக்கும் பதில்கேட்டு பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனை அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்தேன்...

``ஒரு சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்..?”

``சபாநாயகர் என்பவர் ஆளும் கட்சியின் தரப்பிலிருந்து வந்திருந்தாலும் சில நியமனங்கள், நியதிகள் என்று வரும்போது நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டும். நடந்துமுடிந்த சம்பவம் வார்த்தைப் போர் என்பதைத் தாண்டி, ஆளுநர் அல்லது அரசுக்குமான மோதல் போக்காகத்தான் இது அமைந்திருக்கிறது. முதல் முறை எம்.எல்.ஏ என்ற அடிப்படையிலும் ஒரு வழக்கறிஞர் என்ற வகையிலும் இந்த விஷயத்தை ஆர்வத்தோடு பார்த்தாலும், சட்டமன்றத்தில் மக்களுக்கான முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியாமல், இது போன்ற நிகழ்வுகளுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறோமோ என்று வருத்தமாக இருக்கிறது.”

 ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

``பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் தொடர்ந்து ஆளுநர்கள் அரசியல்ரீதியாக பல விஷயங்கள் முன்னெடுப்பது சரியானதா?”

``பொதுவாக மாநிலக் கட்சிகளுக்கு ஆளுநர் என்பவர் இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் அராஜகத்தினால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். அங்கு மாவட்ட ஆட்சியரோ, காவல் கண்காணிப்பாளரோ போகாத நிலையில், ஆளுநர் பாதிக்கப்பட்ட மக்களோடு நின்றார். மேற்கு வங்கத்தில் இன்றைய துணை ஜனாதிபதி ஆளுநராக இருந்தபோது அதை நானே நேரடியாகச் சென்று பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டின் ஆளுநர் பொதுவெளிகளில் அவருக்குப் பிடித்த, அவர் நம்புகின்ற விஷயங்களைத் தீவிரமாகப் பேசுகிறார். அது இங்கிருக்கக்கூடிய திமுக-வின் சித்தாந்தத்தை தகர்க்கிறாரோ என்கிற பதற்றத்தில் ஒரு எரிச்சலோடு அதை அரசியலாகப் பார்க்கிறார்கள். இதனால் ஆளுநரின் அரசியலமைப்பு சார்ந்த வேலைகளில் தலையிட முடியுமா என்று பார்க்கிறார்கள்.”

``ஆளுநருக்குப் பிடித்த விஷயம் தாண்டி, ஆர்.எஸ்.எஸ்-ஸின் கொள்கைகளைத்தான் அதிகமாகப் பேசுகிறார் என்கிறார்களே. குறிப்பாக சனாதனம்...”

``சனாதனத்தைத் தீண்டாமையோடு ஒப்பிட முடியுமா... சனாதனம் என்பது அழிவில்லா தர்மம். தீண்டாமை என்பது வேறு. அது முற்றிலும் ஒழிக்கப்பட்டு, துடைத்தெறியப்பட வேண்டிய கொடுமை. இரண்டையும் ஒற்றுமைப்படுத்த முடியாது. இரண்டையும் திரும்ப, திரும்ப சில முக்கியமான நபர்கள் பேசிவருகிறார்கள். தீண்டாமையைப் பேசுவதுதான் சனாதனம் என்றால், அந்த சனாதனத்தை நாங்களும் எதிர்க்கிறோம். பா.ஜ.க சாதி, மதம் பார்க்கிற கட்சி என்கிறார்கள். ஆனால், பா.ஜ.க-வில் தான் உழைப்பு, திறமை மட்டும் பார்த்து எந்த நபரையும் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அவர்கள் அதிகார மையங்களுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி இன்று பட்டியலின, பழங்குடியினர் பலர் உயரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.”

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

``அதனால், அந்த மக்களுக்கு எந்த நன்மையும், முன்னேற்றமும் இல்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கத்தானே செய்கிறது?”

``இவர்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் வாயிலாக அந்த மக்களை முன்னேற்றிவிட முடியுமா என்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மிகப்பெரிய சக்தியை நாங்கள் கொடுக்கிறோம். இதன் மூலம் அந்த சமூகம் சார்ந்தவர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. பணமே இருந்தாலும்கூட இட ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான காரணம், சமூகத்தில் எல்லோருக்குமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகிறது என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கை நாங்களும் கொடுக்கிறோம். ”

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

“ஆளுநர் முன் வைத்திருக்கும் தமிழ்நாடு - தமிழகம் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``தமிழ்நாடு, தமிழகம் இந்த இரு வார்த்தைகளை நாம் அதிகமாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆளுநர் சொல்கிறார் என்றால் அது அவரின் கருத்து. கருத்தைக் கருத்தால் கடந்து போகலாமே. பிடித்தால் எடுத்துக்கொள்ளுங்கள், இல்லை என்றால் புறம்தள்ளுங்கள். அவர் யாரையும் நான் சொல்லும் கருத்துகளை நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லையே. ஆனால், அதைவைத்து ஏன் அரசியலுக்குள் வருகிறார்கள் என்றால், இன்று தி.மு.க அரசிடம் நிர்வாகத் திறமையின்மை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல், மின்கட்டணம், பால்விலை உயர்வினால் வரும் அதிருப்திகள் போன்ற அடுக்கடுக்கான காரணங்களினால் எல்லா விஷயங்களையும் ஆளுநரின் பெயரில் மடைமாற்றுகிறார்கள். அதற்கான நாடகத்தைக் கூட்டணிக் கட்சிகளுடன் அரங்கேற்றுகிறார்கள்”

அண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர்
அண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர்

``ஆனால், ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டை பாஜக பதற்றமாக வைத்திருக்கப் பார்க்கிறது என்கிறார்களே?”

``ஆர்டிகல் 356-ஐ அதிகமாகப் பயன்படுத்தியது காங்கிரஸ். ஆனால், பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு அதுபோல் ஏதும் நடந்திருக்கிறதா. எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுகளைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. இப்போது இவர்கள் தமிழ்நாட்டை பா.ஜ.க பதற்றமாக வைக்கப் பார்க்கிறது என்று சொல்வது எல்லாம் அதீதமான கற்பனை. இதுவரை நீண்டகாலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சித்தாந்தங்கள் அல்லது அவர்கள் முன் வைத்துக்கொண்டிருக்கிற ஆரிய-திராவிட வாதம் போன்ற எத்தனையோ கருத்தியல்கள்; மக்கள் மதிக்கின்ற மாண்புகள், கலசாரம், பண்பாட்டுக்கூறுகள் போன்றவை கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கிய போக்கெல்லாம் இன்று ஒரு மாறுதலுக்குள்ளாகி வருகிறது. இதை பா.ஜ.க உருவாக்கக் கூடிய பதற்றமாக பார்க்கவேண்டியதில்லை. எந்த ஒரு கருத்துக்கும் அடுத்த சில காலத்தில் அதற்கான எதிர்கருத்து வரும். அது அவர்களின் நடவடிக்கைக் காரணமாகவும், எதிர்ப்பின் காரணமாகவும் வரும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதைத் திட்டமிட்டு உருவாக்க வேண்டியதில்லை. திமுக தானே உருவாக்கக் கூடிய எதிர்ப்பாத்தான் இது இருக்கிறது.”

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல்

`` `ஒரே நாடு, ஒரே கலாசாரம்... ஒரே நாடு, ஒரே மொழி’ என தொடர்ந்து `ஒரே நாடு, ஒரே தேர்தலில்’ வந்து நிற்கிறது பா.ஜ.க., இது அதிபர் தேர்தலுக்கான முன்னெடுப்பு என விமர்சனம் வைக்கப்படுகிறதே?”

``கட்சியில் இருப்பவர்கள்தான் அமைச்சர்களாகவும், நிவாகிகளாகவும், அணித் தலைவராகவும் இருக்கிறார்கள். கட்சியிலிருப்பவர்தான் பிரதமராகவும் இருக்கிறார். தேர்தல் காலங்களில் இவர்களது நேரத்தில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித நேரம் தேர்தல் எடுத்துக்கொள்கிறது. தேர்தல் அறிவித்துவிட்டால் ஒரு மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மூன்று மாத காலத்துக்கு முடங்கிவிடுகிறது. சில மாநிலங்களில் எல்லாம் ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்கு ஒரு மாவட்ட ஆட்சியரால்கூட ஏதும் செய்ய முடியாத சூழல் உருவாகிறது. இதில் பாதிக்கப்படுவது அரசில் கட்சிகள் மட்டுமல்ல, மக்களுக்கான நலத்திட்டங்களும் சென்றடையாமல் மக்களும்தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதனால், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சீர்திருத்தத்துக்கான ஒரு முன்னெடுப்புத்தான். இதை நாளைக்கே பா.ஜ.க ஒரு சட்டமாகக் கொண்டு வந்துவிட முடியாது. தேர்தல் செலவீனங்களையும் குறைக்கும் இந்த சீர்திருத்தத்தை முதலில் மக்கள் முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் சாதக பாதகங்களை அலச வேண்டும். அதற்கான ஒரு வழியை, கருத்தைத்தான் பா.ஜ.க முன்வைக்கிறது”

``பா.ஜ.க-வில் ‘பெண்களுக்குப் பாதுகாப்பில்லை...’ என்று வெளியேறியிருக்கிறாரே காயத்ரி ரகுராம்?”

``காயத்ரியை எனக்கு நன்றாக தெரியும். நீண்ட நாள்களாக அவரோடு பயணித்திருக்கிறேன். கொஞ்சம் உணர்ச்சிவசப்படக் கூடிய, தவறு என்றால் உடனடியாக சொல்லக் கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளோ, அதற்கான உரிய நியாயம் வேண்டுமென்றால் இந்தக் கட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு அமைப்பு ரீதியான விஷயத்தைப் பின்பற்ற வேண்டும். அதை அவர் சரியாக அணுகி இருந்தால் இதுபோல் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்திருக்கும். அவருடைய உணர்ச்சியையும், நியாயத்தையும், பாதிப்பையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதற்கு அவர் கையாண்ட முறையை இன்னும் கொஞ்சம் பக்குவத்தோடு அணுகியிருக்கலாம். அதை விட்டுவிட்டு தலைவர்களை பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக பிரச்னை வெளியே கொண்டு வரலாமே தவிர, நீதி கிடைக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்”

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

``பல முறை அவர் தரப்பைச் சொல்வதற்கு முயன்றும் ஏதும் நடக்காததால்தான் வெளியே சொல்லியிருக்கிறார்?”

``பா.ஜ.க-வில் மட்டுமில்லை, பொதுவாகவே அரசியல் கட்சிகளில் பெண்கள் பயணிக்க, அவர்களின் போராட்டங்களை வென்றெடுத்து, அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது ஒன்று குடும்பத்தின் ஆதரவு இருக்க வேண்டும். அடுத்து அரசியலில் வந்து செலவு செய்யும்போது அதற்கென்று ரிசோர்ஸ் இருக்க வேண்டும். இத்தனையும் தாண்டி பெண்கள் போராடி போராடி தங்கள் நிலையை அடைந்துகொண்டிருக்கிறார்கள். இது எல்லாக் கட்சிகளிலும், சமுதாயத்திலும், மற்ற துறைகளிலும் இருக்கக்கூடிய பிரச்னை. இதைப் புரிந்துகொண்டு அதை எப்படி லாவகமாக, அதே சமயம் தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் நம் செய்தியாக இருக்க வேண்டும். எனக்கும் இது போன்ற பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன. என்னைப் பற்றி எத்தனையோ அவதூறுகள் கட்சிக்குள் இருப்பவர்களும், வெளியே இருப்பவர்களும் வெளிப்படையாக பேசினார்கள். ஆனால், பொறுமையாகவும், சட்டரீதியாகவும் அதைத் தகர்த்திருக்கிறேன். பா.ஜ.க ஜனநாயகரீதியாகவும், நீதி வழங்கக்கூடிய இடத்தை ஏற்கக்கூடியதாவும் இருக்கக்கூடிய கட்சி. ஏன் என்றால் ஒரு தனிமனிதரோ, குடும்பமும் இந்தக் கட்சியைக் கட்டுப்படுத்துவதில்லை. இந்தக் கட்சியில்தான் தவறுகளுக்கு அதிகமான நீதியைப் பெற முடியும். அதனால் அந்த நம்பிக்கை விட்டு வெளியே செல்லக் கூடாது”