Published:Updated:

அறிவையும் தேசிய ஒற்றுமையையும் வளர்க்கிறதா சம்ஸ்கிருதம்?! - மோடியின் கூற்றும் நிபுணர்கள் பார்வையும்!

மோடி
மோடி

அறிவை வளர்ப்பதற்கும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் சம்ஸ்கிருதம் உதவுகிறது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். பாஜக அரசு, சம்ஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்ற சர்ச்சையை இந்தப் பேச்சு மீண்டும் கிளறிவிடுவதாக அமைந்துள்ளது.

மத்திய பாஜக அரசு, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் புறக்கணிப்பதாகவும் சம்ஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 29-ம் தேதி பிரதமர் மோடி ஆற்றிய உரையில், சம்ஸ்கிருதம் குறித்துப் பல கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில், அறிவை வளர்க்க சம்ஸ்கிருதம் உதவுகிறது என்றும், தேசிய ஒற்றுமையை சம்ஸ்கிருதம் வலுப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டி.பி.ராதாகிருஷ்ணன்
டி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், பிரதமரின் ‘மன் கி பாத்’ உரையைத் தொடர்ந்து மீண்டும் எழுந்துள்ளன. பிரதமரின் இந்தப் பேச்சு குறித்து இரு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டோம்.

சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியின் முதல்வரான டி.பி.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``சம்ஸ்கிருதம் குறித்து பிரதமர் முன்வைத்துள்ள கருத்துகள் நிஜமானவை. ஆனால், இன்றைக்கு பாரத தேசத்தில் சம்ஸ்கிருதம் என்ற மொழி பற்றிச் சில பேர் தவறாக நினைக்கக்கூடிய ஒரு நிலை வந்திருக்கிறது. இது குறிப்பிட்ட ஒரு தேவ பாஷை அல்லது ஏதோ சில பேருக்கான பாஷை என்றெல்லாம் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள் என ஏராளமான உள்ளன. காதுகுத்து, கல்யாணம், கோயில் கும்பாபிஷேகம், ஜன்மாஷ்டமி, ராமநவமி என எந்த விசேஷமாக இருந்தாலும் சம்ஸ்கிருதத்தைத் தவிர்த்துவிட்டு அதைச் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். எனவேதான், தேசிய ஒற்றுமையை சம்ஸ்கிருதம் வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

சம்ஸ்கிருதம்
சம்ஸ்கிருதம்

சம்ஸ்கிருதத்தில் இருக்கும் ஓசைகள், ரீங்காரம் போன்றவற்றை அடிப்படையாகவைத்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளின் விஞ்ஞானிகள் பலர் ஆய்வுசெய்து, அவை மூளைக்கு புத்துணர்வை அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது பற்றிய ஏராளமான தகவல்களை இணையத்தில் பார்க்க முடியும். ஒருகாலத்தில் மொத்த அறிவும் சம்ஸ்கிருதத்துக்குள்தான் இருந்தது. வேறு எந்த பாஷையிலும் இல்லை. கம்பராமாயணம், தொல்காப்பியம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருக்குறள் என எதை எடுத்தாலும் சம்ஸ்கிருத்தத்தில் இருக்கக்கூடிய சாரங்கள்தான் வரும்.

பாரதம் இருக்கும்வரை சம்ஸ்கிருதம் இருக்கும். அதை அழித்துவிட முடியாது. காலச்சூழலால் இறக்கங்கள் இருக்கலாம். அந்த வகையில், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகையால் இரண்டு சதவிகிதம் குறைந்திருக்கலாம். அவ்வளவுதான். இங்கிருந்த கோயில் கலாசாரமோ, உற்சவங்களோ பெரிதாக மாறிவிடவில்லை. சம்ஸ்கிருதத்துக்கு அரசு ஆதரவு கொடுப்பது வரவேற்கத்தக்கது. அதன் மூலமாக இந்த பாஷைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்” என்றார் டி.பி.ராதாகிருஷ்ணன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து சமூகச் செயற்பாட்டாளரும், மொழி ஆர்வலருமான ஆழி செந்தில்நாதனிடம் பேசினோம். ``இந்தியாவில் ஒரு காலத்தில் எல்லா துறைகளையும் சார்ந்த நிபுணர்களும் சம்ஸ்கிருதத்தில்தான் அனைத்தையும் எழுதிவைத்தார்கள். எப்படி இன்றைக்கு ஆங்கிலத்தில் எழுதுகிறார்களோ, அதைப்போல அன்றைக்கு சம்ஸ்கிருதத்தில் எழுதிவைத்தார்கள். அவ்வளவுதான். அதேபோல சீன மொழி, அரபு மொழி, தமிழ் மொழி. பாலி மொழி, பிராகிருதம் என உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல்வேறு அறிவுச் செல்வங்கள் இருக்கின்றன. அதுபோல சம்ஸ்கிருதத்திலும் இருக்கின்றன. அதை நாம் மதிக்கிறோம். ஆனால், சம்ஸ்கிருதத்தில்தான் எல்லாமே இருப்பதுபோலவும் அதில் ஒன்றுதான் இந்தியாவின் அறிவுச்சொத்து என்பதுபோலவும் பேசுவது, அப்பட்டமான இனவாதம். மேலும், அந்த அறிவையெல்லாம் நாம் கடந்து வந்துவிட்டோம் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். இன்னொன்று, அறிவுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லை.

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

ஒருபுறம், தமிழ் பற்றி புளகாங்கிதமாகப் பேசுகிறார்கள். இன்னொருபுறம், சம்ஸ்கிருதம் பற்றிப் பேசும்போது, தமிழ் என்ற வார்த்தையைக்கூட உச்சரிப்பதில்லை. சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் என்பது முழுக்க முழுக்க மதம் சார்ந்த, வருணாசிரமம் சார்ந்த ஒரு சிந்தனையே தவிர வேறொன்றும் இல்லை. எல்லா மொழிகளையும்போல சம்ஸ்கிருதமும் மனிதர்களின் ஒரு மொழிதான். இன்னும் சொல்லப்போனால், அது பேச்சுமொழியாகக்கூட இருந்தது கிடையாது. இன்று நாம் ஜாவா, சிசி, பிளஸ் பிளஸ் போன்ற புரோகிராமிங் மொழி வைத்திருப்பதைப்போல, அந்தக் காலத்தில் அறிவைப் பதிவுசெய்ய சம்ஸ்கிருதம் வைத்திருந்தார்கள். அவ்வளவுதான்.

ஆடியோ, வீடியோ விவகாரங்கள்... அலறும் தமிழக பாஜக!

சம்ஸ்கிருதத்தை ஆராய்ச்சி செய்யட்டும். அது தவறல்ல. ஆனால், அதேபோன்ற முக்கியத்துவத்தைத் தமிழுக்கு கொடுக்கவில்லையே... தமிழ் குறித்த ஆராய்ச்சிக்கு அதுபோல நிதி ஒதுக்கப்படவில்லையே? சம்ஸ்கிருதத்தில் பல ஆயுர்வேதச் சுவடிகள் இருக்கின்றன என்றால், தமிழில் பல சித்த மருத்துவச் சுவடிகள் உள்ளன. எனவே, மத்திய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் ஓரவஞ்சனையானது. இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே சொந்தம் கொண்டாடுகிற ஒரு மொழிக்கு இவ்வளவும் செய்வது என்பது பாரபட்சமானது. மேலும், சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்கிற ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது.

ஓலைச்சுவடி
ஓலைச்சுவடி

சம்ஸ்கிருதத்தைப் பற்றிப் பேசும்போது, தேசிய ஒற்றுமை ஏன் வருகிறது? இங்குதான் பிரச்னை. சம்ஸ்கிருதத்தை ஒரு தெய்வமொழியாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேச ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று சொல்லப்போகிறார்களா? திராவிட மொழிகளைப் பேசக்கூடியவர்கள், சந்தாலி போன்ற முண்டா மொழிகளைப் பேசக்கூடியவர்கள், வடகிழக்கு மாநிலங்களில் திபெத்திய பர்மிய மொழிகளைப் பேசக்கூடியர்கள் எனப் பல மொழிகளைப் பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன சம்பந்தம்... சம்ஸ்கிருதத்துக்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்?

இது மீண்டும் மீண்டும் வர்ணாசிரம சிந்தனையை வலியுறுத்தும் செயல். மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வைக் கற்பிப்பதுபோல, மொழிகளிடையே ஏற்றத்தாழ்வை கற்பிக்கிற செயல். இது தேச ஒற்றுமைக்குப் புறம்பானது. அறிவியலுக்கும் புறம்பானது” என்றார் ஆழி செந்தில்நாதன்.

அடுத்த கட்டுரைக்கு