Published:Updated:

சசிகலா தேர்தலில் போட்டியிட சட்டரீதியிலான முயற்சிகள் பலனளிக்குமா? #TNElection2021

சசிகலா
சசிகலா

தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பு கிடைத்தால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக சசிகலா போட்டியிடுவார் என்று அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். சட்டரீதியிலான அவர்களின் முயற்சி எந்த அளவுக்குப் பலனளிக்கும்?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, அரசியலில் ஈடுபடப்போவதாக தன் விருப்பதை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். ஏற்கெனவே, ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க-வில் கட்சித் தலைமை, ஆட்சித் தலைமை என இரண்டு இடங்களையும் வசப்படுத்திக்கொள்ள அவர் முயன்றார். அத்தகைய சூழலில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல வேண்டிய நிலை உருவானது. தண்டனை முடிந்து விடுதலையாகியிருக்கும் அவர், அரசியலில் ஈடுபட எல்லா சுதந்திரமும் இருக்கிறது. ஆனால், தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் சட்டரீதியாக அவருக்கு ஒரு தடை இருக்கிறது.

சசிகலா
சசிகலா

சட்ட விதிகளின்படி, அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால் தண்டனை முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது. அந்த வகையில், தற்போது தண்டனை முடிந்து வெளியே வந்திருக்கும் சசிகலாவால், 2027-ம் ஆண்டுவரை தேர்தலில் போட்டியிட முடியாது. அதேநேரத்தில், சிக்கிம் மாநிலத்தில் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று விடுதலையான ஒருவர், அந்த மாநிலத்தின் முதல்வராகியிருக்கிறார் என்பதை சசிகலா தரப்பு நம்பிக்கையுடன் பார்க்கிறது.

கிரிமினல் வழக்கில் அரசியல்வாதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால், மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் முடியும் வரையிலோ, மேல்முறையீடு செய்தால் அதன் இறுதித் தீர்ப்பு வரும் வரையிலோ அவர்களால் பதவியில் தொடர முடியும் என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். பிரிவு 8 (4). இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தித்தான், தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் கிரிமினல் குற்றவாளிகள் பலர் மக்கள் பிரதிநிதிகளாகத் தொடர்ந்தார்கள்.

மோடி
மோடி

ஆகவே, சட்டப் பிரிவு 8 (4) என்பது, அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்றும், அந்தப் பிரிவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் லில்லி தாமஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்தான், கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் பதவி ரத்தாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. 2013-ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு காரணமாக, பல அரசியல்வாதிகள் பதவிகளை இழந்தனர்.

ஆகவே, `சிறைக்குப் போகும் அரசியல்வாதிகள் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு, ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது. தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதுடன், தண்டனை முடிந்த பிறகும் அடுத்த ஆறாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது’ என்பதுதான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் நிலை. தவறிழைக்கும் அரசியல்வாதிகளை அச்சுறுத்திக்கொண்டிருந்த இந்தச் சட்டத்தையும் கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் வளைத்துவிட்டது. அதன் மூலம், ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பிரேம் சிங் தமாங் சிக்கிம் மாநில முதல்வர் ஆகிவிட்டார்.

தமாங்
தமாங்

சட்டமன்றத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வென்று, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தேர்தல் முடிந்த இரண்டே மாதங்களில் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏ-க்கள் திடீரென பி.ஜே.பி-யில் சேர்ந்தனர். அதனால், சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க் கட்சி அந்தஸ்தை இழந்தது. மத்திய பி.ஜே.பி ஆட்சியின் ஆசி, தமாங்குக்குக் கிடைத்தது. தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தமாங் அளித்தார்.

அந்த மனுவில், `ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத் திருத்தம் 2003-ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. முன்னதாக நடந்த வழக்குக்கு, பின்னர் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் கொண்டு தண்டனை விதிக்க முடியாது. ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது’ என்று தமாங் கூறியிருந்தார். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டு, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை 13 மாதங்களாகக் குறைத்து உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தமாங் வெற்றிபெற்றார். இப்போது அவர்தான் சிக்கிம் முதல்வராக இருக்கிறார். இதுதான் சசிகலா தரப்புக்கு தற்போது நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

தமாங் விஷயத்தை மனதில்வைத்துத்தான், `தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பு கிடைத்தால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக சசிகலா போட்டியிடுவார்’ என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார். இந்தநிலையில், ‘சசிகலா தரப்பினரின் சட்டரீதியிலான முயற்சி எந்த அளவுக்குப் பலனளிக்கும்?’ என்ற கேள்வியை வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் முன்வைத்தோம்.

ராஜா செந்தூர்பாண்டியன்
ராஜா செந்தூர்பாண்டியன்

``இதில், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் உதாரணத்தைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. முறைகேடு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற தமாங், தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. அந்த அதிகாரம், தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அதேநேரத்தில், தங்களுக்கு விதிவிலக்கு கேட்பதற்கு தண்டனை பெற்றவர்களுக்கு ஒரு நியாயம் இருக்க வேண்டும். அது ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும். அப்படியிருந்தால், அதைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். அந்த நியாயம் சசிகலாவுக்கு இருக்கிறது. உண்மையிலேயே நியாயமாக விதிவிலக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் சசிகலாவுக்கு பலமாக இருக்கின்றன என்றுதான் நான் பார்க்கிறேன்” என்றார் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்.

எடப்பாடியைத் தனியாகச் சந்தித்த மோடி, பன்னீரை ஏன் சந்திக்கவில்லை?

தேர்தல் ஆணையத்துக்கு அந்த அதிகாரம் இருக்கலாம். ஆனால், மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களின் கருணையும், கடைக்கண் பார்வையும் இருந்தால் மட்டுமே, அந்த விதிவிலக்கு பெறுவது சாத்தியமாகும் என்று கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மத்திய ஆட்சியாளர்களின் கருணை இருந்ததாலேயே பிரேம் சிங் தமாங், விதிவிலக்கு பெற்று, தேர்தலில் ஜெயித்து, முதல்வர் பதவியில் தொடர்கிறார். ஆனால், மத்திய அரசின் கருணை சசிகலாவுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

தினகரன்
தினகரன்

`தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பு கிடைத்தால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக சசிகலா போட்டியிடுவார்’ என்று பேசிய அதே கூட்டத்தில்தான், அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தையும் டி.டி.வி.தினகரன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

``பிரதமர் மோடி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார்” என்று அந்தக் கூட்டத்தில் தினகரன் முன்வைத்த கருத்து பல அரசியல் நகர்வுகளுக்கு ஆதாரம் என்பதுபோலப் படுகிறது. அ.தி.மு.க-வில் சசிகலாவைச் சேர்த்துக்கொள்வதை பா.ஜ.க விரும்பவில்லை என்றும், அதனால்தான் சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ள நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை என்று முதல்வர் எடப்பாடி டெல்லியில் பேட்டி கொடுத்தார் என்றும் அரசியல் அரங்கில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இன்னொருபுறத்தில், தனிவிமானத்தில் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க தலைவர்களை தினகரன் சந்தித்தார் என்ற தகவல்களும் வருகின்றன. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிலர் சொன்னாலும், பிரதமர் மோடியைப் பாராட்டி தினகரன் பேசியிருப்பது, அந்தத் தகவலை உறுதிசெய்வதுபோல இருக்கிறது. இந்த நகர்வுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்கான கதவுகள் திறக்கப்படலாம்.

அடுத்த கட்டுரைக்கு